தேடுதல்

Arcangeli Michele, Gabriele e Raffaele

நேர்காணல் – அதிதூதர்களான புனித மிக்கேல், கபிரியேல், இரபேல்

அதிதூதர்கள் எழுவர் இருப்பதாக திருஅவையால் அங்கீகரிக்கப்படாத ஏனோக் நூலில் நாம் காணலாம். மிக்கேல், கபிரியேல், ரபேல், உரியேல், சீத்தியேல், ஜுகுதியேல், பரசியேல் என்பவர்களே அவர்கள்.

மெரினா ராஜ் வத்திக்கான்

வானதூதர் என்பது இயல்பு கிடையாது, மாறாக செய்யக்கூடிய பணி. வானதூதர்கள் கடவுளின் திருமுன் நின்று எப்போதும் அவரைப் புகழ்ந்துகொண்டிருப்பவர்கள்; அவர்கள் கடவுள் விடுக்கும் கட்டளையை நிறைவேற்றக் கூடியவர்கள்; தீமைக்கெதிரான போராட்டில் நம்மோடு உடன் இருப்பவர்கள்” என்கிறார் தூய அகுஸ்தினார். வானதூதர்களை அவர்கள் செய்யக்கூடிய பணிகளை வைத்து முக்கியமான பணிகளைக் செய்பவர்களை வானதூதர்கள் என்றும், மிக முக்கியமான பணிகளைச் செய்பவர்களை அதிதூதர்கள் என்றும் தூய கிரகோரியார் குறிப்பிடுவார்.

மிக முக்கியமான பணிகளைச் செய்ய அதிதூதர்கள் எழுவர் இருப்பதாக திருஅவையால் அங்கீகரிக்கப்படாத ஏனோக் நூலில் நாம் காணலாம். மிக்கேல், கபிரியேல், ரபேல், உரியேல், சீத்தியேல், ஜுகுதியேல், பரசியேல் என்பவர்களே அவர்கள். இந்த எழுவரில் மிக்கேல் கபிரியேல் இரபேல் ஆகியோரின் பெருவிழாவை இன்று திருஅவையானது செப்டம்பர்  29 அன்று நினைவுகூறுகின்றது. இன்றைய நாளில் இந்த அதிதூதர்களின் விழா பற்றிய கருத்துக்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்பணி ஆல்பர்ட் மைக்கிள் லாரன்ஸ்.

அருள்பணி ஆல்பர்ட் மைக்கில் லாரன்ஸ் ம. ஊ. ச.

அதிதூதர்களான மிக்கேல் கபிரியேல், இரபாயேல் திருவிழா

ஒவ்வொரு வருடமும் கோடைகால அனலின் தாக்கம் குறைந்து, வசந்த காலம் நம்மை வருட வரும் தருணத்தில், திருஅவையானது அதிதூதர்களான மிக்கேல், கபிரியேல் மற்றும் இரபாயேல் இவர்களின் திருவிழாவைக் கொண்டாட நம்மை அழைத்து, அதற்கேற்ற நாளாக செப்டம்பர் மாதம் 29-ம் நாளை நிர்ணயித்துள்ளது. பல காலமாகத் திருஅவையின் வழிபாடு முறைகளில் அதிதூதர்களின் திருவிழாவைக் கொண்டாடுவது வழக்கமாக இருந்துவருகின்றது. திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அதிதூதர்களைப் பற்றிக் கூறும்போது, “வானதூதர்கள் கடவுளுக்காகத் தனிப்பட்ட விதத்தில் படைக்கப்பட்டவர்கள்” என்று கூறுகின்றார். திருவிவிலியமும் திருஅவையின் பாரம்பரியமும் அதிதூதர்களைப் பற்றிய இரண்டு சிறப்பு அம்சங்களை நமக்கு எடுத்துரைக்கின்றன. 1) வானதூதர்கள் கடவுளின் முன்பாக எப்போதும் இருப்பதற்காக, கடவுளுக்காக இருப்பதற்காகப் படைக்கப்பட்டவர்கள். 2) அதிதூதர்களாக அறியப்படும் மிக்கேல், கபிரியேல், இரபாயேல் என்ற மூவரின் பெயர்களும், “யேல்” என்று முடிவதன் பெயர்காரணம் மிக முக்கியமானது. “யேல்” என்றால் எபிரேயம் மற்றும் கிரேக்க மொழிகளில் “கடவுள்” என்று பொருள்படும். அவர்களின் பெயர்களிலே கடவுள் பொறிக்கப்பட்டுள்ளார். அவர்களின் பெயர்களே அவர்கள் கடவுளுக்கானவர்கள் என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. வானதூதர்கள் கடவுளின் தூதர்கள். அவர்கள் கடவுளின் சொற்படி செயல்படுபவர்கள். கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி (Catechism of the Catholic Church) எண்: 350 “வானதூதர்கள் கடவுளை இடைவிடாமல் துதிப்பதற்காகவும், கடவுளின் திட்டத்தை செயல்படுத்தவும் கடவுளால் படைக்கப்பட்டவர்கள்” என்று விளக்குகின்றது. வானதூதர்கள் கவுளால் படைக்கப்பட்ட நம்முடைய நலன்களுக்காகவும் செயல்படுபவர்கள் ஆவார்கள். விண்ணகத்தை நோக்கிய நம்முடைய திருப்பயணத்திற்கு உறுதுணையாயிருப்பவர்கள். இவர்கள் நம்முடைய சாதாரண கண்களுக்குப் புலப்படாதவர்கள். இதனை தான் நாம் நம்முடைய நம்பிக்கை அறிக்கையில், “காண்பவை, காணாதவை யாவும் படைத்த எல்லாம் வல்ல இறைவனை நம்புகின்றேன்” என்று அறிக்கையிடுகின்றோம்.

இப்போது ஒரு கேள்வி எழலாம். வானதூதர்கள் நம்முடைய கண்களுக்குப் புலப்படாதவர்கள் என்றால், வெண்ணிறத்தில், இறக்கைகளுடன் நாம் புறிந்துகொள்ளும் அந்த உருவங்கள் என்ன? இதற்கு முனைவர் பீட்டர் கிராப்ட் (Dr. Peter Craft) என்கின்ற கத்தோலிக்க எழுத்தாளரும், தத்துவயியலாளருமானவர் கூறும் விளக்கம் என்னவென்றால், ‘அந்த உருவங்கள் அனைத்தும் நாம் எளிமையாகப் புறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கலைஞர்கள் மற்றும் ஓவியர்களால் வரையப்பட்டவை, உருக்கொடுக்கப்பட்டவை’ என்கின்றார். மேலும் அவர் கூறுவது, ‘பெரும்பாலும் வானதூதர்கள் மனிதர்களின் உருவில் தான் வருகின்றார்கள். தங்களது பணி நிறைவடைந்ததும் வந்த இடம் தெரியாமல் சென்றுவிடுகின்றார்கள்’ என்பதாகும். மேலும் வானதூதர்களைப் பற்றி நாம் தெளிவாகப் புறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவர்களின் வேகத்தைக் குறிக்கும் விதமாக இறக்கைகளும், அவர்களின் புனிதம் மற்றும் ஞானத்தைக் குறிக்கும் விதமாக அவர்களின் தலைக்கு மேல் ஒளி வட்டங்களும், அவர்களின் அழகு மற்றும் ஆன்மீக நல்லிணக்கத்தைக் குறிக்கும் விதமாக இசைக் கருவிகளும், அவர்களின் தீங்கின்மை மற்றும் கள்ளங்கபடற்றத்தன்மையைக் குறிக்கும் விதமாக அவர்கள் குழந்தைகளைப் போன்றவர்களாகவும் உருவம் கொடுக்கப்பட்ட உருவில்லாத நிலையில் இருப்பவர்கள் தான் வானதூதர்கள்.

வானதூதர்கள் ஏராளமானவர்கள் இருந்தாலும் விவிலியத்தில் மூன்று வானதூதர்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர்களை நினைவுகூறும் விதமாக திருஅவையானது திருவிழா எடுத்து மிகவும் கொண்டாடி மகிழ்கின்றது.

01. அதிதூதர்கள் திருவிழா வரலாறு:

கி.பி 5-ம் நூற்றாண்டின் தொடக்கம் முதலே அதிதூதரான மிக்கேலின் விழா செப்டம்பர் மாதம் 29-ம் நாள் நினைவுகூறப்பட்டு விழாவாகக் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. காலங்கள் கடந்தோட அதிதூதர் மிக்கேலுக்காக சிற்றாலயங்கள் மற்றும் பேராலயங்கள் நேர்ந்தளிக்கப்பட்டு வந்துள்ளன. 1969-ம் ஆண்டு அப்போதைய திருத்தந்தை 6-ம் சின்னப்பர் திருவழிபாட்டு கால அட்டவனையில் திருத்தங்கள் மேற்கொண்டபோது, செப்டம்பர் 29-ம் நாள் அன்று அதிதூதர் மிக்கேலுடன் இணைந்து அதிதூதர்களான கபிரியேல் மற்றும் இரபாயேலின் திருவிழாவையும் கொண்டாடப் பணித்துள்ளார். அதற்கேற்ப அதிதூதர்களின் திருவிழா வழிபாடானது சிறப்புத் திருப்பலி கொண்டாட்டத்தைப் பெற்றது. சிறப்பு செபங்களும் ஏறெடுக்கப்பட்டன. கத்தோலிக்க மற்றும் ஆர்த்தோடாக்ஸ் திருச்சபைகளில் அதிதூதர்கள் அவர்களுடைய பாதுகாத்தல் மற்றும் பரிந்துரைத்தல் பணிகளுக்காகப் பெரிதும் போற்றுதலுடன் நினைவுகூறப்படுகின்றனர். அதிதூதர்கள் திருவிழா திருவழிபாட்டு வாசகங்கள், அதிதூதர்களின் பண்புகள் மற்றும் பணிகள் குறித்தவையாக இருக்கின்றன. நிறைய திருத்தலங்கள் மற்றும் ஆலயங்களில் அதிதூதர்களுக்கென சிறப்பான பாடல்கள் இயற்றப்பட்டு, திருவழிபாடு மற்றம் இதர நேரங்களில் பயண்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகையப் பாடல்கள் அதிதூதர்களின் நற்பண்புகள் மற்றும் குணாதிசயங்களைப் பற்றி எடுத்துரைக்கும் விதத்தில் இருக்கின்றன. குறிப்பாக மிக்கேல் அதிதூதர் காவல் காப்பவராகவும், கபிரியேல் நற்செய்தியை நமக்கும் அறிவிப்பவராகவும், இரபாயேல் குணப்படுத்துபவராகவும் போற்றப்படுகின்றனர்.

02. கிறிஸ்துவப் பாரம்பரியத்தில் அதிதூதர்கள்

தொடக்ககாலம் முதலே கிறிஸ்துவ பாரம்பரியத்தில் அதிதூதர்களுக்கு வணக்கம் செலுத்தும் முறை இருந்து வந்துள்ளது. தொடக்க கால கிறிஸ்தவர்கள் அதிதூதர்கள் கடவுளின் செய்திகளை நமக்குக் கொண்டுவருபவர்களாக அடையாளம் கண்டுள்ளனர். இதன் பிரதிபலிப்பை நாம் தொடக்ககால கிறிஸ்தவ இறையியலாலர்களான புனித அகஸ்டின் மற்றும் புனித தாமஸ் அக்குவினாஸ் போன்றோரின் கட்டுரைகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகின்றது.

03. அதிதூதர்களின் அடையாளங்கள்

ஒவ்வொரு அதிதூதருக்கும் ஒரு அடையாளம் தொடர்புடையதாக  இருக்கின்றது. திருஅவையில் இருக்கும் கலை மற்றும் உருவப்படங்கள் இதனை நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, புனித மிக்கேல் அதிதூதர் உருவப்படங்கள் அவர் சாத்தானை எதிர்த்து போரிடுபவராகவும், கையில் தராசைத் தாங்கியவராக, நீதிதீர்ப்பை நமக்கு நினைவுபடுத்துபவராக இருக்கின்றன. புனித கபிரியேல் பெரும்பாலும் கையில் லீலி மலர்களைத் தாங்கியவராக அல்லது கையில் எக்காளம் ( trumpet ) கொண்டிருப்பவராக அவரது உருவப்படங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

புனித இரபாயேல் பெரும்பாலும் கையில் ஒரு கோலும் மீனும் கொண்டிருப்பவராக, அதாவது வழிகாட்டுபவராகவும், குணப்படுத்துபவராகவும் அவரது குணநலன்களை அவரது உருவப்படங்கள் நமக்கு நினைவுபடுத்துகின்றன.

04. திருவிவிலியத்தில் அதிதூதர்கள்:

அதிதூதர்களான மிக்கேல், கபிரியேல் மற்றும் இரபாயேல் பற்றி திருவிவிலியத்தில் நாம் குறிப்புகளைக் காணலாம். அதிதூதரான புனித மிக்கேல் பொதுவாக ஒரு போர்வீரராகவும், கபிரியேல் கடவுளின் செய்தியைத் தாங்கி வருபவராகவும், இரபாயேல் குணப்படுத்துவராகவும் நமக்கு காட்சிபடுத்தப்பட்டுள்ளனர்.

அதிதூதரான புனித மிக்கேல்: மிக்கேல் என்கின்ற எபிரேயச் சொல்லுக்கு, “கடவுளைப் போன்றவர்” அல்லது “கடவுளைப் போன்றவர் யார்?” என்று பொருள்படுகின்றது. மேலும் ‘கடவுளைப் போன்ற பலம் பொருந்தியவர் எவரும் இல்லை’ என்பதை இது குறிக்கின்றது. பெரும்பாலும் புனித மிக்கேல் அதிதூதர் போர் புரிபவராகவே விவிலியத்தில் குறிப்பிடப்படுகின்றார். இதன் வழியாக சாத்தானிடமிருந்து திருஅவையையும், அதன் பிள ;ளைகளான நம்மையும் காப்பவர் என்று நாமறிகின்றோம்.  விவிலியத்தில் ஐந்து இடங்களில் மிக்கேல் அதிதூதரின் பெயரானது இடம் பெறுகின்றது. மூன்று முறை தானியேல் புத்தகத்திலும் (தானியேல் 10:13,21, 12:1), யுதா கடிதம் (யுதா 1:9) மற்றும் திருவெளிப்பாடு புத்தகத்தில் (திருவெளிப்பாடு 12:7) தலா ஒரு முறையும் இவர் பெயர் இடம் பெறுகின்றது. அனைத்து இடங்களிலும் மிக்கேல் அதிதூதர் சாத்தானுக்கெதிராகப் போர்புரிபவராகக் குறிக்கப்பட்டுள்ளார்.

அதிதூதரான புனித கபிரியேல்: கிரியேல் என்கின்ற எபிரேயச்சொல்லுக்கு, “கடவுள் எனது வலிமை” என்று பொருள்படும். நற்செய்தியை அறிவித்த அதாவது மரியாவுக்கு மங்கள வார்த்தை அறிவித்த பெருமை இவரையேச் சேரும். விவிலியத்தில் அதிதூதரான கபிரியேலின் பெயர் நான்கு முறை குறிப்பிடப்படுகின்றது. தானியேல் 8:16, 9:21 என இரண்டு முறையும், லூக்கா 1:19 (செக்கரியாவுக்குத் தோன்றுதல்), 1:26 (மரியாவுக்குத் தோன்றுதல்) என இருமுறையும் பெயருடன் குறிப்பிடப்படுகின்றார். பொதுவாக ஓவியங்களில் செக்கரியாவுக்குத் தோன்றும் போது கபிரியேல் அதிதூதர் தலைசாய்த்து நின்ற வண்ணமும், மரியாவுக்குத் தோன்றும் போது இறைவனின் தாயாகப் போகும் மரியாவுக்கு வணக்கம் செலுத்தும் வண்ணம் முழங்கால்படியிட்டவாறும் உருவகப்படுத்தப்பட்டுள்ளார்.

அதிதூதரான புனித இரபாயேல்: இரபாயேல் என்கின்ற எபிரேயச்சொல்லுக்கு “கடவுளே குணமளிப்பவர்” அல்லது “கடவுளின் மருந்து” என்று பொருள்படும். வழிதுணையாகச் செல்லுதல் மற்றும் குணப்படுத்துதல் போன்ற பணிகளைச் செய்பவராக இவர் திருவிவிலியத்தில் குறிப்பிடப்படுகின்றார். தோபித்து 3:17, 5:4, 7:8, 8:2, 9:1, 9:5, 11:2, 11:7, 12:15. தோபித்து புத்தகத்தை வாசிக்கும் நமக்கு நம்பிக்கையாளராக அல்லது வாசகராக நமக்கு இரபாயேல் அதிதூதராகத் தோன்றுவார். ஆனால் தோபித்து மற்றும் தோபியாவுக்கும் மற்றவர்களுக்கும் அவர் ஒரு மனிதராக, வழிபோக்கராக, நண்பராகத் தோன்றுவார். இது வானதூதர்களின் உண்மை நிலையை நமக்கு எடுத்துரைக்கின்றது. ஓவியங்களில் இரபாயேல் அதிதூதர் தோபியாசின் கண்களோடு கண்கள் பார்த்து உரையாடுபவராக, கரங்கள் கோர்த்துக்கொண்டு வழிநடப்பவராக, வழிநடத்துபவராக, மருத்துவ உதவிகள் செய்து தோபித்தைக் குணப்படுத்துபவராக, தோபியாவின் திருமண வாழ்வு இனிதே துவங்கிட தடையாயிருந்த சாத்தானைக் கட்டிப்போட்டு நலம் விரும்பியாக உருவகப்படுத்தப்படுகின்றார்.

05. அதிதூதர்களின் விழா நமக்கு கற்பிக்கும் பாடம்: கடவுள் நம்மை சாத்தானின் சோதனைகளிலிருந்து காக்கும் வண்ணம், நமக்கு நற்செய்தி வழங்கும் வண்ணம், அவரது திட்டங்கள் நமது வாழ்வில் செவ்வனே நடந்திடும் வண்ணம், நம்முடைய அன்றாட வாழ்வில் உடல் சோர்வு, நோய்கள் மற்றும் ஆன்மீக சோர்வுகளில் காத்திடும் வண்ணம், நமக்கென்றும் வானதூதர்களைப் பணித்துள்ளார். இந்த வானதூதர்கள் மனிதர்களின் வடிவிலோ, அல்லது நம்முடைய கண்களுக்குப் புலப்படா வண்ணனம் மறைவான விதத்திலோ நம் இதயத்தோடு கடவுளின் செய்திகளை வெளிப்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றார்கள். அவர்களுக்கு செவிசாய்த்திடும் பக்குவம் பெற நாம் அழைக்கப்படுகின்றோம். தோபித்தோடு இணைந்து “கடவுள் போற்றி! அவரது மாபெரும் பெயர் போற்றி! அவருடைய தூய வானதூதர் அனைவரும் போற்றி! அவரது மாபெரும் பெயர் நம்மைப் பாதுகாப்பதாக! எல்லா வானதூதரும் என்றென்றும் போற்றி!” (தோபித்து 11:14) என்று போற்றுவோம். வானதூதர்கள் வழி இறைவன் கொடுக்கும் செய்திகள் மற்றும் வழிகாட்டுதலுக்கு செவிமடுப்போம். ஒரு வாழ்க்கை! ஒரு வாய்ப்பு! இந்த நிமிடம்! நம் ஆண்டவருக்காய்! என்று வாழ்வோம். அதிதூர்கள் நம்மை வழிநடத்துவார்களாக…

 

28 September 2023, 09:52