தேடுதல்

சீடர்களைச் சந்திக்கும் உயிர்த்த ஆண்டவர் சீடர்களைச் சந்திக்கும் உயிர்த்த ஆண்டவர்  

பாஸ்கா காலம் 3-ஆம் ஞாயிறு : நம் மனக்கண்கள் திறக்கப்படட்டும்!

வாழ்வின் உண்மைப் பொருளை உணர்ந்தவர்களையும், இந்தச் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகத் தங்கள் வாழ்வைத் தற்கையளிப்பு செய்தவர்களையும் அறிந்தவர்கள் யாவரும் வாழ்வை அர்த்தமுடன் வாழ்கின்றனர்.
பாஸ்கா காலம் 3-ஆம் ஞாயிறு : நம் மனக்கண்கள் திறக்கப்படட்டும்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I. திப 3:13-15,17-19     II. 1 யோவா 2:1-5     III.  லூக் 24:35-48)

இன்று நாம் பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் இயேசுவின் இறப்பு மற்றும் உயிர்ப்புக் குறித்த மறையுண்மைகளைப் புரிந்துகொள்ள நம் மனக்கண்களைத் திறக்குமாறு நமக்கு அழைப்புவிடுகின்றன. இன்றைய உலகில் பெரும்பான்மையான மக்கள் சுயநலத்தின் பிடியில் சிக்கித் தவிப்பதைப் பார்க்கின்றோம். அதுமட்டுமன்றி, நாம் இந்த உயரத்தை அடைவதற்கு காரணமாக இருந்த பலரது உயிர்த்தியாகங்களை மறந்துபோயிருக்கின்றோம். வேள்வித்தீயில் தியாக மரணமேற்ற பலரது வாழ்வு இக்காலத் தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டப்படுவதில்லை. குறிப்பாக, நம் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காகத் தங்கள் வாழ்வையே தற்கையளிப்பு செய்த தியாகிகளின் மரணங்கள் சிறிது சிறிதாக மறக்கடிக்கப்பட்டு வருகின்றன. அதற்குப் பதிலாக, நாட்டைத் துண்டாடியவர்களும், நாட்டிற்குத் துரோகமிழைத்தவர்களும், நாட்டைக் காட்டிக்கொடுத்தவர்களும் போற்றிக் கொண்டாடப்படுகிறார்கள். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஒன்றே ஒன்றுதான், அது தியாகத்தின் மேன்மையைப் புரிந்துகொள்ளாத மெத்தனப்போக்கும், மதியற்ற தன்மையும்தான்.  

ஜெர்மானியப் படை தனது நாசிச வெறியின் உச்சத்தில் இருந்த காலம் அது. யூத மக்கள் மட்டுமன்றி, பிற இனத்து மக்களும் கூட்டம் கூட்டமாக வதைமுகாம்களில் கொல்லப்பட்டு வந்தனர். ஹிட்லரின் இரக்கமற்ற அரக்கமனம் பல அப்பாவி மக்களை ஏன், எதற்கு என்று கூட சொல்லாமல் வேட்டையாடிக்கொண்டிருந்தது. அந்நேரத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவம் இது. ஓர் இருண்ட சிறைச்சாலை. அங்கே தினந்தோறும் பல்வேறு வகையான கொடுமைகள் நிகழ்ந்துகொண்டிருந்தன. அங்கிருந்தவர்களுக்குப்  பல்வேறு வகையில் சாவைச் சந்திக்கவேண்டிய காட்டாயம் ஏற்பட்டது. நாளை உயிருடன் இருப்போமா அல்லது கொல்லப்படுவோமா என்ற பயத்திலேயே அவர்களின் வாழ்வு கடந்துபோய்கொண்டிருந்தது. அதுமட்டுமன்றி, அங்கிருந்த சிறைக்காவலர்கள் சிறைக் கைதிகளுக்குள்ளேயே பகைமையையும் சண்டை சச்சரவுகளையும் ஏற்படுத்தியிருந்தனர். இதனால் கைதிகளுக்குள்ளேயே அடிக்கடி கலவரங்கள் வெடித்தன. புதிதாக வரும் கைதிகள் ஏற்கனவே இருக்கும் கைதிகளின் கைகளில் சிக்கித் துன்புற்றனர். அங்கே எந்நேரமும் குழப்பமும் ஒருவரையொருவர் காட்டிக் கொடுக்கும் சூழலுமே நிலவியது. இப்படியே நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் மாலை வேளை, கைதிகள் வேலை முடித்த நேரம். படைத்தளபதி விரைந்து வருகிறான். “ஒரு மண்வெட்டியைக் காணவில்லை, யார் எடுத்தது” என்று கர்ச்சிக்கிறான். உடனே அதற்கான விசாரணைக்காக எல்லாக் கைதிகளும் அழைத்து வரப்படுகின்றனர். யாரும் உண்மையை ஒத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. படைத்தளபதிக்குப் பதற்றம். மண்வெட்டியைப் பயன்படுத்தி யாராவது தப்பி ஓடி விட்டால் தனது பணி பறிபோய்விடும் என்பதால் அனைத்துக் கைதிகளையும் வரிசையாக நிறுத்திச் சுட்டுக்கொல்ல கட்டளையிடுகிறான். அனைவரையும் பயம் தொற்றிக்கொள்கிறது. அப்போது வரிசையில் நின்ற ஒரு கைதி மட்டும் முன்னே வந்து, “நான்தான் மண்வெட்டியைத் திருடினேன்” என்று ஒப்புக் கொள்கிறார். உடனே படைவீரர்கள் அவரை அனைவர் கண்முன்பாகவும் சுட்டுக் கொள்கின்றனர். அங்கே ஆழ்ந்த அமைதி நிலவுகிறது. சற்றுநேரத்தில் அனைவரும் தத்தம் அறைகளுக்குச் செல்கின்றனர். அப்போது படைத்தலைவன் மீண்டும் சரிபார்க்க, மண்வெட்டிகள் அனைத்தும் சரியாக இருக்கின்றன. அனைவருக்கும் வியப்பு. ‘பின்னர் எதற்காக அந்த மனிதன் தனது உயிரை இழந்தான்?’ என்று எல்லாக் கைதிகளும் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்குகின்றனர். ‘நம் எல்லோரையும் காக்கவேண்டுமென விருப்பம்கொண்டு, தான் குற்றமற்றவராக இருந்தும், நமக்காகத் தன் உயிரை இழக்க அந்த மனிதர் முன்வந்திருக்கிறார்’ என்பதை அப்போதுதான் அவர்கள் உணர்ந்துகொள்கின்றனர். இச்சம்பத்திற்குப் பின்பு, அக்கைதிகளின் உள்ளங்களில் மட்டுமல்ல, அன்றாட நடவடிக்கைகளிலும் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. அன்றுமுதல், சிறைச்சாலையின் ஒட்டுமொத்தச் சூழலும் அப்படியே மாறிப்போகிறது. கைதிகள் அனைவரும் ஒருவர் ஒருவருடன் அன்புடன் பழகுகின்றனர். சகோதரத்துவ உறவில் வளரத் தொடங்குகின்றனர். படைவீரர்கள் எவ்வளவுதான் தங்களைத் துன்புறுத்தினாலும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். ஒருவரையொருவர் காட்டிக்கொடுப்பதையும் மறுதலிப்பதையும் விட்டொழிக்கின்றனர். மேலும் சிறைக்கு வரும் புதிய கைதிகளை பழைய் கைதிகள் நன்முறையில் நடத்த்த தொடங்குகின்றனர். அந்த ஒரு மனிதரின் உயிர்த்தியாகம் எல்லாருடைய வாழ்வையும் மாற்றுகிறது. இயேசு என்ற ஒருவருடைய தியாக மரணம், பாவிகளாக வாழ்ந்த அனைத்து மக்களின் வாழ்விலும் மீட்பை என்னும் விடியலைக் கொண்டுவந்தது.

இயேசுவின் மரணம் இறைவனின் திட்டம்

இன்றைய முதல் வாசகத்தில், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, என்னும் நம் மூதாதையரின் கடவுள் தம் ஊழியர் இயேசுவைப் பெருமைப்படுத்தினார். ஆனால், நீங்கள் அவரைப் புறக்கணித்துப் பிலாத்திடம் ஒப்புவித்துவிட்டீர்கள். அவன் அவருக்கு விடுதலைத் தீர்ப்பு அளிக்க முயன்றபோதும் நீங்கள் அவரை மறுதலித்தீர்கள். நீங்கள் தூய்மையும் நேர்மையுமானவரை மறுதலித்துக் கொலையாளியை விடுதலை செய்யுமாறு வேண்டிக்கொண்டீர்கள். வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால், கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார்” என்று கூறும் பேதுரு, “ஆனால், கடவுள், தம் மெசியா துன்புறவேண்டும் என்று இறைவாக்கினர் அனைவர் வாயிலாகவும் முன்னறிவித்ததை இவ்வாறு நிறைவேற்றினார்” என்று உரைக்கின்றார். அப்படியென்றால், இயேசுவின் சாவு முன்குறித்து வைக்கப்பட்டது என்றும், பாவிகளாகிய நம் அனைவருக்காகவும் அவர் இறந்து உயிர்க்க வேண்டும் என்பதும் இறைவனின் திட்டம் என்றும் தெளிவுபடுத்துகிறார் பேதுரு.

இயேசுவைப் போல வாழ கடமைப்பட்டுள்ளோம்

இரண்டாம் வாசகத்தில், "அவருடைய கட்டளைகளை நாம் கடைப்பிடித்தால் நாம் அவரை அறிந்து கொண்டோம் என்பது உறுதியாகத் தெரியும். “அவரை எனக்குத் தெரியும்” எனச் சொல்லிக் கொண்டு அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதோர் பொய்யர்; உண்மை அவர்களிடம் இராது" என்கிறார் யோவான். இங்கே "நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" என்ற இயேசு கொடுத்த புதிய கட்டளையைத்தான் நமக்கு மீண்டும் நினைவுபடுத்துகிறார் யோவான். மேலும் இயேசுவின் இந்தப் புதிய கட்டளையை நமது வாழ்வைப் பிறருக்காகத் தியாகம் செய்வதன் வழியாக நிறைவேற்றிட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறார். அதனால்தான், "அவரது வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது; நாம் அவரோடு இணைந்து இருக்கிறோம் என அதனால் அறிந்துகொள்ளலாம். அவரோடு இணைந்திருப்பதாகக் கூறுவோர் அவர் வாழ்ந்தவாறே வாழக் கடமைப்பட்டவர்கள்" என்று தொடர்ந்து கூறுகின்றார் யோவான்.

மனக்கண்களைத் திறக்கும் இயேசு

இன்றைய நற்செய்தி இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. முதல் பகுதியில் இயேசுவைக் கண்டு அச்சம் கொள்ளும் சீடர்கள், அவரது வார்தையைக் கேட்டு அந்த அச்சத்திலிருந்து விடுபடுகின்றனர். பின்னர் தொட்டுப் பார்த்துப் மகிழ்கின்றனர், இறுதியாக அவருடன் உணவருந்தி நிறைவடைகின்றனர். ஆனால் இரண்டாவது பகுதி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. காரணம், அச்சத்திலிருந்து விடுபடும் சீடர்களை, மறைநூலைப் புரிந்து கொள்ளுமாறு அவர்களுடைய மனக்கண்களைத் திறப்பதுடன், பணியாற்றவும் அவர்களுக்கு அழைப்பு விடுகின்றார் உயிர்த்த இயேசு. “மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப் பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே” என்று தொடங்கி எல்லாவற்றையும் குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கின்றார். இந்த விளக்கத்தில் மனுவுருவெடுத்தல், பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகிய முக்கிய கூறுகளையும், உண்மையான மெசியாவுக்குரிய காரியங்களையும் எடுத்துரைத்து அவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளுமாறு அவர்களின் மனக்கண்களைத் திறக்கிறார். இதற்கு முன்பு எம்மாவு சீடர்களை வழியில் சந்தித்தபோது, “அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன் இத்துன்பங்களைப் பட வேண்டுமல்லவா!” என்று கூறி, மோசேமுதல் இறைவாக்கினர் வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார் என்று பார்க்கின்றோம். இதனைத் தொடர்ந்து தனது சீடர்களைச் சந்திக்கும் இயேசு, அவர்களுக்கும் விளக்கமளித்து அவர்தம் மனக்கண்களைத் திறக்கின்றார்.

இறுதியாக அவர்களிடம், “மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், ‘பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்’ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்" என்கின்றார். இந்த வார்த்தைகள் வழியாக, அவர்கள் உயிர்த்தியாகமிக்க நற்செய்தி அறிவிப்புப் பணிகளை ஏற்க முன்வருமாறு அவர்களுக்கு அழைப்புவிடுக்கின்றார். இயேசுவின் பாடுகள் மற்றும் மரணத்திற்கான காரணங்களைப் புரிந்துகொள்ளாமல் அவரது உயிர்ப்பை உலகெங்கிலும் சென்று அறிவிக்க முடியாது என்பது நாம் புரிந்துகொள்வோம். இதன் காரணமாகத்தான், "ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின்றோம்" என்று தினமும் திருப்பலியில் கூறுகின்றோம். இயேசுவின் பாடுகளும், இறப்பும், உயிர்ப்பும் ஒவ்வொரு நாளும் நமது மனக்கண்களைத் திறக்கவேண்டும் என்பதன் அடையாளமாகத்தான் இந்தச் செபத்தை நாம் அறிக்கையிடுகின்றோம். காரணம், இயேசுவின் சாவு என்பது ஒரு சாதாரண நிகழ்வல்ல, மாறாக, அது நித்தமும் நினைவில் நிறுத்தப்படவேண்டிய அளவிற்கு மிகவும் புனிதமானது, மேன்மையானது, போற்றத்தக்கது மற்றும் சவால் நிறைந்தது. இயேசுவை வெறும் மீட்பர் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே நாம் சுறுக்கிவிடமுடியாது. காரணம், அவர் ஓர் ஆன்மிகப் புரட்சியாளர் மட்டுமல்ல, மாறாக, அவர் ஒரு விடுதலை வீரரும் கூட, அதனால்தான், இன்றும் இயேசு மதங்களைக் கடந்து எல்லோருடைய மனங்களிலும், குறிப்பாக, ஆளுமைமிக்க அனைத்துத் தலைவர்களின் உள்ளங்களிலும் மிகவும் ஆழமாக வேரூன்றியிருக்கின்றார். “ஒரு விடுதலை வீரனின் சாவு சாதாரண மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக்கொள்கிறது. ஓர் இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்புகிறது” என்பார் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன். இன்றும் உலகெங்கிலும் அருள்பணியாளர்களும், அருட்கன்னியரும், பொதுநிலை விசுவாசிகளும் பெரும்துயருற்று, இரத்தம் சிந்தி வீரமரணமேற்கின்றனர் என்றால், அதற்கு முக்கிய காரணம் இயேசுவின் மரணமும் உயிர்ப்பும் அவர்களின் மனங்களில் ஏற்றிவைத்த இலட்சிய நெருப்புதான்.

பாலம் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களைப் பற்றி நாம் அறிந்திருப்போம். இன்று உலகளவில் அவர் ஒரு போற்றத்தக்க மனிதராக இருக்கின்றார். 35 ஆண்டுகள் பேராசிரியர் பதவியில் பணிபுரிந்து, பெற்ற சம்பளம் அனைத்தையும் ஏழை மக்களின் நலனுக்காக செலவிட்டுவிட்டு, தமது சொந்தச் செலவிற்கு ஓர் உணவகத்தில் சர்வராக வேலை பார்த்தவர். இவ்வாறு 35 ஆண்டுகளாகத் தான் பெற்ற ஊதியம் 30,00,000/-யும் (ரூபாய் முப்பது லட்சம்) பிறரது நலன்களுக்காக முழுமையாகக் கொடுத்து வரலாறு படைத்துள்ளார் அவர். உலகில் எந்த நாட்டைச் சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்களோ, தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களோ இவ்வாறு செய்ததில்லை என்பதால் அமெரிக்காவில் “ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்” (Man of Millinium) என்ற விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 6.5 மில்லியன் டாலரை (30 கோடி) பரிசாகப் பெற்றார். அதையும் குழந்தைகள் நலனுக்காக அளித்து உலகில் கோடிக்கணக்கானவர்களை வியப்பில் ஆழ்த்தினார். தன் பங்கிற்குக் குடும்பத்தில் கிடைத்த ரூ.50 இலட்சம் மதிப்புடைய சொத்தில் தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாமல் மக்களுக்கு அளித்து தனக்குப்போகத்தான் தானமும் தர்மமும் என்ற பழமொழியை மாற்றிக் காட்டினர்.  வாழ்நாள் முழுவதும் ஒரு சென்ட் நிலம், ஒரு ஓலை குடிசை, ஒரு சல்லிக் காசு இல்லாமல் அனைத்தையும் நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்து திருமண வாழ்வையும் தியாகம் செய்தவர். பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் அரிமா லியோ முத்து அவர்கள் சென்னையின் மையப்பகுதியில் பல கோடி மதிப்புள்ள வீட்டு மனையை அவருக்குப் பரிசாக அளித்தார். ஆனால், அது தனது கொள்கைக்கு முரணானது என அப்பரிசை ஏற்றுக்கொள்ள பணிவுடன் மறுத்துவிட்டார்.  ஐ.நா. சபை விருதுக்காக, 20-ம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளராக அந்நிறுவனத்தால் உலகெங்கிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நபர்களில் இவரும் ஒருவர். பாலம் ஐயாவைப் பற்றிய ஆவணப்படம் நார்வேயில் நடைபெற்ற பன்னாட்டுத் திரைப்பட விழாவில் சிறப்பு பரிசு பெற்றது. கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்த இவர், ஏழைகளுக்குக் கிடைக்காத உணவையோ, உடையையோ, இருப்பிடத்தையோ பயன்படுத்தாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்வின் உண்மைப் பொருளை உணர்ந்தவர்களையும், இந்தச் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகத் தங்கள் வாழ்வைத் தற்கையளிப்பு செய்தவர்களையும் அறிந்தவர்கள் யாவரும் வாழ்வை அர்த்தமுடன் வாழ்கின்றனர் என்பதற்கு ஐயா பாலம் கல்யாணசுந்தரம் ஓர் எடுத்துக்காட்டு. இயேசுவின் இறப்பு மற்றும் உயிர்ப்பிற்கான உண்மைப் பொருளை உணர்ந்துகொண்டால் நாம் அனைவரும் இயேசுவின் தூய ஆவியைப் பெற்றவர்களாக அவரது சாட்சிகளாய் ஒளிரமுடியும் என்பதும், பிறரது நல்வாழ்விற்காக நமது வாழ்வையே கையளிக்க முடியும் என்பதும் திண்ணம். இவ்வருளை இந்நாளில் உயிர்த்த ஆண்டவர் நமக்கு வழங்க வேண்டி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 April 2024, 13:18