தேடுதல்

தாவீது அரசர் தாவீது அரசர்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 53-1, மதிநுட்பம் கொள்வோம்!

அறிவிலிக்குரிய பாதையை விடுத்து மதிநுட்பம் கொண்டவரின் பாதையில் பயணிப்போம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 53-1, மதிநுட்பம் கொள்வோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘‘வினைவிதைத்தவன் வினையறுப்பான்!’’  என்ற தலைப்பில் 52-வது திருப்பப்பாடலில் 6 முதல் 9 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து அத்திருப்பாடலை நிறைவு செய்தோம். இவ்வாரம் 53-வது திருப்பாடல் குறித்த நமது தியான சிந்தனைகளைத் தொடங்குவோம். 'இறைப்பற்று இல்லார்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இத்திருப்பாடல் மொத்தம் 6 இறைவசனங்களைக் கொண்டுள்ள ஒரு சிறிய பாடல்தான். திருப்பாடல் 88 கூட ‘நோயின் துயரில்’ என்ற மெட்டு; எஸ்ராகியரான ஏமானின் அறப்பாடல் என்று கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே தாவீதின் அறப்படல் என்பது அங்கே ஏமானின் அறப்படல் என்று கொடுக்கப்பட்டுள்ளது. மிகவும் குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில், இத்திருப்பாடல், 14-ஆம் திருப்பாடலை மீண்டும் ஒருமுறை எடுத்துரைக்கிறது. ஆனாலும், இவ்விரண்டு திருப்பாடல்களுக்கும் இரண்டு வேற்றுமைகள் காணப்படுகின்றன. முதலாவதாக, திருப்பாடல் 14-இல் ‘ஆண்டவர்’ என்ற வார்த்தை 4 முறையும், ‘கடவுள்’ என்ற வார்த்தை 3 முறையும் காணப்படுகிறது. அதேவேளை திருப்பாடல் 53-இல், ‘ஆண்டவர்’ என்ற வார்த்தை எங்கும் இல்லை, ஆனால் ‘கடவுள்’ என்ற வார்த்தை 7 முறை தோன்றுகிறது. இரண்டாவதாக, திருப்பாடல் 53-இல் உள்ள 5-வது வசனம், திருப்பாடல் 14-இல் உள்ளதைப் போன்றது அல்ல. அதாவது, "அவர்கள் இதுவரை கண்டிராத முறையில் பேரச்சத்தால் நடுநடுங்குவர்; இறைமக்களை ஒடுக்கியோரின் எலும்புகளைக் கடவுள் சிதறடிப்பார்; கடவுள் அவர்களைக் கைவிட்டதால் அவர்கள் மானக்கேடு அடைவர்" என்று திருப்பாடல் 53-இல் 5-வது வசனம் கூறுகிறது. ஆனால், "அவர்கள் அஞ்சி நடுங்குவர்; ஏனெனில், கடவுள் நேர்மையாளரின் வழிமரபோடு இருக்கின்றார்" என்று திருப்பாடல் 14-இல் 5-வது வசனம் உரைக்கின்றது. ஏன் இந்த மாற்றம் என்று கேட்கும்போது, திருப்பாடல் எழுதப்பட்ட காலத்தையும் அதற்குப் பிற்பட்ட காலத்தையும் கணக்கில் கொண்டு திருப்பாடல் 14-இல் இந்த மாற்றம் செய்யப்பட்டதாக அதன் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

மேலும் திருப்பாடல் 14-இல், மோசே இஸ்ரயேல் மக்களை செங்கடலின் வழியாகக் கொண்டு வந்ததைப் பற்றியும், கடவுள் அவர்களை எகிப்திலிருந்து காப்பாற்றினார் என்பது பற்றியும் தாவீது எழுதினார். ஆனால் ​​தாவீது இறந்து ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்குப் பிறகு, கடவுள் இஸ்ரயேல் மக்களை அசீரியாவிலிருந்து காப்பாற்றினார். எனவேதான், திருப்பாடல் 14 திரும்ப எழுதப்பட்டு அது திருப்பாடல் 53 ஆனது. மேலும் இது தாவீதால் எழுதப்பட்ட திருப்பாடலாகவே இருந்தாலும் கூட, தேவையின் அடிப்படையில் இந்த இரண்டு மாற்றங்களையும் செய்ய வேண்டியிருந்தது என்றும் இதன் பின்புலம் குறித்த வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன், 'ஆண்டவர்' என்பதற்குப் பதிலாக கடவுள் என்று பெயர் மற்றம் செய்தனர். அவர் உலகம் முழுவதற்கும் கடவுள் என்பதை அனைவரும் அறிய வேண்டும் என்று அவர்கள் விரும்பியதால் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம். மேலும் படையெடுப்பு அச்சுறுத்தல் அல்லது, முற்றுகை போன்ற ஒரு தேசிய சவாலின் மத்தியில் இஸ்ரேலுக்கு நம்பிக்கையையும் வலிமையையும் அளிக்கும் நோக்கத்துடன் இத்திருப்பாடலை தாவீது அரசர் எழுதியிருக்கலாம் என்றே விவிலிய அறிஞர்கள் கருதுகின்றனர். இப்போது இத்திருப்பாடலின் 1 முதல் 3 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்து நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்குவோம். முதலில் அவ்வார்த்தைகளை இறைபிரசன்னதில் வாசிக்கக் கேட்போம். "‛கடவுள் இல்லை’ என அறிவிலிகள் தம் உள்ளத்தில் சொல்லிக் கொள்கின்றனர்; அவர்களுள் சிலர் கெட்டு அருவருப்பான செயல்களில் ஈடுபடுகின்றனர்; நல்லது செய்வார் யாரும் இல்லை. கடவுள் விண்ணகத்தினின்று மானிடரை உற்றுநோக்குகின்றார்; மதிநுட்பமுள்ளவர், கடவுளை நாடுபவர் எவராவது உண்டோ என்று பார்க்கின்றார். எல்லோரும் நெறிபிறழ்ந்தனர்; ஒருமிக்கக் கெட்டு போயினர்; நல்லது செய்வார் யாரும் இல்லை; ஒருவர் கூட இல்லை" (வச. 1-3).

முதலாவதாக,  "‛கடவுள் இல்லை’ என அறிவிலிகள் தம் உள்ளத்தில் சொல்லிக் கொள்கின்றனர்; அவர்களுள் சிலர் கெட்டு அருவருப்பான செயல்களில் ஈடுபடுகின்றனர்" என்கின்றார் தாவீது அரசர். இங்கே இருவிதமான மதியற்றவர்களை எடுத்துக்காட்டுகிறார் தாவீது. முதல் வகையினர் நம்மை நகைப்புக்கு உள்ளாக்குபவர்கள். இரண்டாம் வகையினர், மதியற்றோர். கடவுள் இல்லை என்று கூறுபவர்களும், அல்லது நான்தான் கடவுள் என்று கூறுபவர்களும் மிகவும் ஆபத்தானவரகள். அண்மையில் நம் இந்தியாவின் பாரத பிரதமர், தான் பரமாத்வால் அனுப்பப்பட்டவர் என்று கூறிய கருத்து இந்திய மக்களிடமும் பெரும் பேசுபொருளானது. இதுகுறித்து சில சமூக ஊடகங்கள் மக்களிடம் நேரிடையாக கேள்வியெழுப்பியபோது, பலர், பிரதமர் மோடி மனநலம் குன்றியவராக இருக்கின்றார் என்றும் அவர் சிகிச்சைபெற மனநல மருத்துவமனைக்கு அனுப்படவேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்தனர். பொதுவாக, இன்றைய நம் உலகில் கொலை கொள்ளை, பழிபாவம் ஆகியவற்றைக் குறித்து சிறிதும் அஞ்சாதவர்தாம் எல்லாவிதமான கேடுகெட்ட செயல்களையும் செய்கின்றனர். அவர்கள் மனசாட்சி அற்றவர்கள், மற்றும் இரக்கமற்ற கொடியவர்கள். அவர்கள் எதைக்குறித்தும் கவலைகொள்ள மாட்டார்கள். பிறரது துயரங்களில் அவர்கள் தங்களுக்கான மகிழ்ச்சியை அறுவடை செய்பவர்கள். அண்மையில் மணிப்பூர் மாநிலத்தில் நடந்த பாலியல் வன்மங்களையும், கொலைவெறிச் செயல்களையும் கண்டும் இறுக்கமான மனதுடன் எதுவுமே நடக்காததுபோல் இருந்தார்களே நம் அரசியல் தலைவர்களில் பலர், அத்தகையோர் எல்லாம் இப்படிப்பட்டவர்கள்தாம் என்பதை நாம் நினைவில்கொள்வோம். அதனால்தான், “அவர்களுள் சிலர் கெட்டு அருவருப்பான செயல்களில் ஈடுபடுகின்றனர்” என்றும் சுட்டிக்காட்டுகின்றார் தாவீது அரசர்.

'கர்ப்பிணிப்பெண்ணின் வயிற்றைக் கிழித்த கொடூரக் கணவருக்கு ஆயுள் தண்டனை' என்ற தலைப்பில் அண்மையில் இணையத்தில் ஒரு செய்தியை வாசித்தேன். அதில் வரும் செய்தி இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்றே என்னைச் சிந்திக்க வைக்கிறது. உத்திரபிரதேசத்தில் குழந்தையின் பாலினத்தைத் தெரிந்துகொள்ள 8 மாத கர்ப்பிணி மனைவியின் வயிற்றைக் கிழித்த கொடூரக் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்துச் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு என்று அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது.  கடந்த 2020-ஆம் ஆண்டில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. திருமணமாகி 22 ஆண்டுகள் ஆன நிலையில் பன்னா லால்-அனிதா தம்பதியினருக்கு ஏற்கனவே 5 பெண்குழந்தைகள் இருந்துள்ளன. அடுத்ததாக ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில், கணவன் செய்த இந்தக் கொடூரச் செயலால் 8 மாத கர்ப்பிணியான அனிதா வயிற்றிலிருந்த ஆண்குழந்தை உயிரிழந்தது என்றும் அச்செய்திக் குறிப்பு மேலும் தெரிவிக்கிறது. கடவுள் இல்லை என்று தங்கள் உள்ளத்தில் சொல்லிக்கொள்ளும் மதியற்றவர்கள்தாம் இப்படிப்பட்ட மனிதத்தன்மையற்ற செயல்களைச் செய்வார்கள் என்பது திண்ணம். அதனால்தான் 'நல்லது செய்வார் யாரும் இல்லை' என்ற தனது ஆதங்கத்தையும் தொடர்ந்து வெளிப்படுத்துகின்றார் தாவீது.

இரண்டாவதாக, "கடவுள் விண்ணகத்தினின்று மானிடரை உற்றுநோக்குகின்றார்; மதிநுட்பமுள்ளவர், கடவுளை நாடுபவர் எவராவது உண்டோ என்று பார்க்கின்றார்" என்று உரைக்கின்றார் தாவீது அரசர். இங்கே மதிநுட்பமுள்ளவர், கடவுளை நாடுபவர் என்ற இரண்டு வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் தாவீது. இவ்விரண்டு வார்த்தைகளையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஏறக்குறைய இரண்டுமே ஒரே அர்த்தத்தைக் கொடுப்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம். மதிநுட்பம் உடையவர் என்றும் சொல்லும்போது, அவர் அறிவும் ஞானமும் ஒருங்கே பெற்றவர் என்பதும், நன்மை எது தீமை எது என்பதை பகுத்து உணரக்கூடியவராக இருப்பார் என்பதும் தெளிவாகிறது. இப்படிப்பட்ட மனிதர் நிச்சயமாக இறையச்சம் உடையவராக, கடவுளைத் தேடக்கூடியவராக இருப்பார். அதுமட்டுமன்றி, மதியற்றவருக்கு நேரெதிரானவர் மதிநுட்பமுள்ளவர். இவர் ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பு அதனை நன்கு ஆராய்ந்து பார்த்த பிறகே செய்யத் தொடங்குவார். ஆக, கடவுளை நாடும் மதிநுட்பமுள்ளவர்கள் எப்போதும் அவரால் விரும்பப்படுபவர்கள் என்பது திண்ணம்.

இறுதியாக "எல்லோரும் நெறிபிறழ்ந்தனர்; ஒருமிக்கக் கெட்டு போயினர்; நல்லது செய்வார் யாரும் இல்லை; ஒருவர் கூட இல்லை"  என்று கூறுகின்றார் தாவீது அரசர். இது அதற்கு முன்னர் உள்ள இறைவார்த்தையின் தொடர்ச்சியாக அமைவதைக் காண முடிகிறது. மேலும் ஏன் கடவுள் மதிநுட்பமுள்ளவரைத், தேடுகிறார் என்பதற்கான விடையாகவும் இந்த வார்த்தைகள் அமைகின்றன. அதாவது, எல்லாரும் நெறிபிறழ்ந்து ஒருமிக்கக் கெட்டுப்போனதால், கடவுள் அவரை நாடி வரும் மதிநுட்பமுள்ளவரைத் தேடுகிறார் என்பதை உணரந்துகொள்வோம்.

ஒருமுறை புத்தரை பார்வையற்ற ஒருவர் எதிர்கொண்டார். இன்ன காரணம் என்றில்லாமல் புத்தரை எதிர்க்கும் நபர் அவர். புத்தரிடம் அவர் ஒரு கேள்வி கேட்டார். “‘நிறம்’ அப்படின்னு நிறைய பேர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கேன். நிறம் எப்படி இருக்கும்னு எனக்கு சொல்லுங்க பார்ப்போம். அது இனிக்குமா, கசக்குமா? சுடுமா, சில்லென இருக்குமா? நறுமணம் கமழுமா, நாற்றம் அடிக்குமா? எங்கே, உங்க ஞானத்தை வச்சு எனக்குப் புரிய வைங்க பார்ப்போம்!” அப்போது புன்னகைத்த புத்தர், “ஞானம் என்பது வேறொன்றும் அல்ல புரிதலே. அப்புரிதலே அறிவு, ஞானம், மனம், நிர்வாணம், சமநிலை!” என்றார். பார்வையற்றவர் நிறுத்தவில்லை. “எனக்கு விளக்குற அளவுக்கு உங்களுக்கு அறிவு இல்லையே.. அப்போ நீங்க ஞானி கிடையாதுன்னு ஒத்துக்கிறீங்களா?” என புத்தரை கோபமூட்டும் நோக்கோடு கேள்விகளை அடுக்கிக் கொண்டே இருந்தார். அப்போது அருகில் நின்றவரிடம் புத்தர், “ இவர் நல்ல மனிதராக இருக்கிறார். இவர் பார்வை பெறுவதற்கான சிகிச்சைகள் கிடைக்க உதவுங்களேன்” என சொல்லிவிட்டுச் சென்றார். தன் கேள்விக்குப் புத்தரிடத்திலேயே பதில் இல்லை என அளவுகடந்த தற்பெருமை கொண்டார் அவர். புத்தர் கேட்டுக்கொண்டபடி எவர் அவருக்கு உதவ வந்தாலும் புறக்கணித்து ‘தான் புத்தரை வென்றவன்’ எனத் தற்புகழ் பாடிக் கொண்டே அவரது வாழ்க்கையை வாழ்ந்து முடிந்தார் அவர். ஆனால், வாழ்க்கை முழுவதும் அம்மனிதர் பார்வை பெறவே இல்லை. நிறம் எப்படி இருக்குமென்பதை அறியாமலே மடிந்துபோனார் அவர். ஞானம் அடைந்தோருக்கு மட்டுமே இணக்கத்தின் அவசியம் தெரியும். ஞானம் என்பது வேறொன்றும் அல்ல, செல்வம், உறவு, புகழ் போன்ற உலகுசார்ந்த காரியங்கள் மீது பற்றுக் கொள்ளாமல் ஏற்படும் புரிதல்! அப்புரிதலே அறிவு, ஞானம், மனம், நிர்வாணம், சமநிலை, புத்தம் எல்லாமும்! மதியற்றோர் தங்களைக் குறித்து அதிகம் பிதற்றிக் கொள்கின்றனர், மதிநுட்பம் கொண்டவரோ எல்லாவற்றிலும் தன்னடக்கத்துடன் நடந்துகொள்கின்றனர். அதனால்தான், மதியற்றோர் ஆணவத்தால் அழிந்துபோகின்றனர். ஆனால் மதிநுட்பம் கொண்டோரோ ஆணவத்தை வென்று கடவுளின் காலடியில் சரணடைகின்றனர். ஆகவே, மதியற்றோர்க்குரிய பாதையை விடுத்து மதிநுட்பம் கொண்டவரின் பாதையில் பயணிப்போம். இந்த அருளைப்பெற இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 June 2024, 15:06