தேடுதல்

கிறிஸ்தவர்களின் செபம் கிறிஸ்தவர்களின் செபம்  (ANSA)

தடம் தந்த தகைமை - நீங்கள் நோன்பு இருக்கும்போது

“ஏழையரின் ஏழ்மையைப் புரிய வேண்டுமா? ஏழையாகுங்கள்” என்பார் புனித வின்சென்ட தே பவுல். நோன்பு என்பது, வறியோர், வலுவிழந்தோரின் வலிகளைப் புரிந்துகொள்ள மேற்கொள்ளும் தவம்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள். அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது; மாறாக, மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார், (மத் 6:17&18) என்றார் இயேசு.

நோன்பு – வெந்து நொந்து செய்ய வேண்டிய செயல் அல்ல, அது நெஞ்சாரக் கொண்டாடப்பட வேண்டியது. நோன்பின் அடித்தளம் வாழ்வுக்கு ஆதாரமான உணவு மறுத்தல் என்ற புரிந்துணர்வு உலா வந்த நிலையில் உணவு மட்டுமல்ல, உடல் உணர்வையும், உள்ள எண்ணங்களையும் கட்டுப்படுத்த வேண்டுமென்ற ஆழ்ந்துணர்வும் இங்கே பிறப்பெடுக்கின்றது. நோன்பு நோயாளியாகிட அல்ல, சமூக நோய் எனப் புனையப்பட்ட வறியோரின் பசியுணர.

“ஏழையரின் ஏழ்மையைப் புரிய வேண்டுமா? ஏழையாகுங்கள்” என்பார் புனித வின்சென்ட தே பவுல். எனவே நோன்பு நம்மை வருத்துவதற்கு மட்டுமல்ல, வறியோர், வலுவிழந்தோரின் வலிகளைப் புரிந்துகொள்ள மேற்கொள்ளும் தவம். இந்தத் தவம் வெளிச்சமிட்டுக் காட்டி வியாகுலம் சொல்ல அல்ல. உள்மன உறுதிப்பாட்டையும், உடல் உணர்வுக் கட்டுப்பாட்டையும் அனுபவம் ஆக்கி அடுத்தவர் மீதான கரிசனையில் ஆழ்ந்து வாழவே. நோகாமல் இருப்பது நோன்புமல்ல, சாகாமல் இருப்பது வாழ்வுமல்ல.

இறைவா! உடல், உள்ளம், உணர்வு என்ற மூன்றையும் அடக்க அல்ல, நெறிப்படுத்த உம் வரம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 ஜனவரி 2025, 10:56