தேடுதல்

இடிபாடுகள் நிறைந்த இடத்தில் திருப்பலி நிறைவேற்றும் மண்டலே மறைமாவட்ட அருள்பணியாளர் இடிபாடுகள் நிறைந்த இடத்தில் திருப்பலி நிறைவேற்றும் மண்டலே மறைமாவட்ட அருள்பணியாளர்  

குரலற்றவரின் குரலாக இருப்பார் திருத்தந்தை 14-ஆம் லியோ

பன்மொழிப் பேச்சாளரான திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் ஆங்கிலப் புலமை, ஆசியாவிலும், குறிப்பாக மியான்மாரின் ஆயர்கள் மற்றும் மக்களுடன் தொடர்புகொள்வதை எளிதாக்கும்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

புதிய திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், உலகம் மற்றும் மியான்மாரின் மறக்கப்பட்ட போர்கள், ஏழைகளின் துயரங்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் விளிம்புநிலை மக்களின் துயரங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்துவார் என்று நம்புவதாகவும், குரலற்றவரின் குரலாக இருப்பார் என்று நன்கு அறிவதாகவும் எடுத்துரைத்துள்ளார் அருள்பணியாளர் Paul Aung Myint

மே 14 புதன்கிழமை, பீஃதேஸ் எனப்படும் கத்தோலிக்க செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய செய்தியில் புதிய திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் பற்றியும் மியான்மார் மக்களின் நிலை பற்றியும் பகிர்ந்துள்ளார் மியான்மாரின் டொமினிக்கன் சபை அருள்பணியாளர் Paul Aung Myint.

மேலும் மியான்மாரின் யங்கூனைச் சார்ந்த ஜோசப் குங் என்னும் கத்தோலிக்கர் எடுத்துரைக்கையில், புதிய திருத்தந்தை 14-ஆம் லியோ பற்றி இன்னும் தங்களுக்கு அதிகப்படியான விடயங்கள் தெரியாது எனினும், அவருக்கு மறைப்பணி அனுபவம் உள்ளது என்பது பற்றி தாங்கள் நன்கு அறிவோம் என்றும் கூறியுள்ளார்.

அனைத்து மறைப்பணி நாடுகள் குறிப்பாக உலகளாவிய தெற்கில் புதிய திருத்தந்தை அதிகப்படியான கவனம் செலுத்துவார் என்று தாங்கள் நம்புவதாகவும், பன்மொழிப் பேச்சாளரான அவரது ஆங்கிலப் புலமை, ஆசியாவிலும் மியான்மாரின் ஆயர்கள் மற்றும் மக்களுடன் தொடர்புகொள்வதை எளிதாக்கும் என்றும் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார் ஜோசப் குங்.

போர் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மார் தலத்திருஅவை மக்களில் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்றும், சேதமடைந்த ஆலயங்கள் மற்றும் தலத்திருஅவையின் கட்டிடங்களை சீரமைக்க உதவவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார் மண்டலே மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளர் Peter Kyi Maung.

மார்ச் 28 அன்று ஏற்பட்ட பேரழிவு தந்த நிலநடுக்கத்தால் ஏராளமான பொருள் இழப்புக்கள் மற்றும் கட்டிடங்கள் சேதம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் ஒன்றிணைந்து செபிக்கும் இடங்களை விரைவில் சீரமைத்து தரவேண்டும் என்றும் இதன் வழியாக இறைமக்களின் ஆன்மிக மற்றும் சமூக வாழ்க்கை மீட்டெடுக்க உதவ முடியும் என்றும் தெரிவித்துள்ளார் அருள்பணி பீட்டர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 மே 2025, 13:56