தேடுதல்

அமைதிக்கான செபிக்கும் மக்கள் அமைதிக்கான செபிக்கும் மக்கள்  (ANSA)

போர் நிறுத்தம் குறித்து பாகிஸ்தான் திருஅவை அதிகாரிகள் மகிழ்ச்சி

காஷ்மீர் பிரச்சனை, சிந்து நீர் ஒப்பந்தம் போன்றவைகள் உட்பட பல்வேறு விடயங்களிலும் தீர்வு காண இரு தரப்பினரும் உட்கார்ந்து பேச முன்வர வேண்டும் என அழைப்புவிடுத்தார் ஹைதராபாத் ஆயர் சுக்கார்தின்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இந்தியா பாகிஸ்தான் இடையே நான்கு நாட்களாக இடம்பெற்ற மோதல்கள் முடிவுக்கு வந்து போர் நிறுத்தம் அமலாக்கப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சியை வெளியிட்ட பாகிஸ்தான் திருஅவை அதிகாரிகள், மீண்டும் தாக்குதல்கள் இடம்பெறாமல் இருக்க பேச்சுவார்த்தைகளும் நிலையான அமைதி முயற்சிகளும் இடம்பெற வேண்டும் என அழைப்புவிடுத்துள்ளனர்.

இருநாடுகளுக்கும் இடையே இடைக்கால போர் நிறுத்தம் இடம்பெற்றுள்ளது குறித்து பாகிஸ்தான் தலத்திருஅவை, நாடு முழுவதும் கோவில்களில் நன்றி வழிபாட்டை மேற்கொண்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த அமைதி இடம்பெற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.

மே 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று பாகிஸ்தான் ஹைதராபாத்தின் புனித பிரான்சிஸ் சேவியர் பேராலயத்தில், அணுஆயுதத்தை வைத்திருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தானிடையே ஒப்புரவு ஏற்படவேண்டும் என செபங்களை அர்ப்பணித்தார் பாகிஸ்தான் ஆயர் பேரவையின் தலைவர் ஆயர் சாம்சன் சுக்கார்தின்.

இடைக்காலப் போர்நிறுத்தம் வழியாக, பெரிய போரிலிருந்து மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் எனவும், போர் என்பது தீர்வாக முடியாது என்பதால், பேச்சுவார்த்தைகளுக்கு மீண்டும் அழைப்புவிடுப்பதாக அறிவித்தார் ஆயர் சுக்கார்தின்.

காஷ்மீர் பிரச்சனை, சிந்து நீர் ஒப்பந்தம் போன்றவைகள் உட்பட பல்வேறு விடயங்களிலும் தீர்வு காண இரு தரப்பினரும் உட்கார்ந்து பேச முன்வர வேண்டும் எனவும் அழைப்புவிடுத்தார் ஹைதராபாத் ஆயர்.

தென் ஆசிய பகுதியில் அமைதியான வருங்காலம் இடம்பெறவேண்டுமெனில் ஒத்துழைப்பு, பேச்சுவார்த்தைகள், ஒருவருக்கொருவர் மதிப்பு, அமைதிக்கான அர்ப்பணம் தேவை என்பதை வலியுறுத்தியுள்ளார் இஸ்லாமாபாத்-இராவல்பிண்டியின் பேராயர் ஜோசப் அர்ஷாத்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 மே 2025, 14:13