விவிலியத் தேடல்:திருப்பாடல் 68-7, வலிமையும் ஊக்கமும் தரும் ஆண்டவர்
செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில் 'மாபெரும் சபையில் கடவுளைப் புகழ்வோம்!' என்ற தலைப்பில் 68-வது திருப்பாடலில் 24 முதல் 27 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 28 முதல் 35 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவுக்குக் கொணர்வோம் இப்போது அவ்வார்த்தைகளை பக்திநிறை மனதுடன் வாசிப்போம். “கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும்; என் சார்பாகச் செயலாற்றிய கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும்! எருசலேமில் உமது கோவில் உள்ளது; எனவே, அங்கு அரசர் உமக்குக் காணிக்கை கொணர்வர். நாணலிடையே இருக்கும் விலங்கினைக் கண்டியும்; மக்களினங்களாகிய கன்றுகளோடு வருகிற காளைகளின் கூட்டத்தையும் கண்டியும்; வெள்ளியை நாடித் திரிவோரை உமது காலடியில் மிதித்துவிடும்; போர்வெறி கொண்ட மக்களினங்களைச் சிதறடியும் எகிப்திலிருந்து அரச தூதர் அங்கே வருவர்; கடவுள்முன் எத்தியோப்பியர் கைகூப்பி நிற்க விரைவர். உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்; ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். வானங்களின்மேல், தொன்மைமிகு வானங்களின்மேல், ஏறிவரும் அவரைப் புகழுங்கள்; இதோ! அவர் தம் குரலில், தம் வலிமைமிகு குரலில் முழங்குகின்றார். கடவுளுக்கே ஆற்றலை உரித்தாக்குங்கள்; அவரது மாட்சி இஸ்ரயேல் மேலுள்ளது; அவரது வலிமை மேக மண்டலங்களில் உள்ளது. கடவுள் தம் தூயகங்களில் அஞ்சுவதற்கு உரியவராய் விளங்குகின்றார்; இஸ்ரயேலின் கடவுள் தம் மக்களுக்கு வலிமையையும் ஊக்கத்தையும் அளிக்கின்றார்; கடவுள் போற்றி! போற்றி!” (வச. 28-35).
முதலாவதாக, “கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும்; என் சார்பாகச் செயலாற்றிய கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும்! எருசலேமில் உமது கோவில் உள்ளது; எனவே, அங்கு அரசர் உமக்குக் காணிக்கை கொணர்வர்" என்ற இறைவார்த்தைகளை நமது சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். இங்கே "என் சார்பாகச் செயலாற்றிய கடவுளே!" என்று கூறும் தாவீதின் வார்த்தைகளில் கடவுளுக்கும் அவருக்கும் இடையே இருந்த நெருக்கத்தைக் காண்கின்றோம். மேலும் இந்த வார்த்தைகளில், பிலிஸ்திய வீரன் கோலியாத் மீது கொண்ட வெற்றி, அதனைத் தொடர்ந்து அவர்மீது மன்னர் சவுல் காழ்ப்புணர்வு கொண்டு அவரைக் கொல்லத் தேடியபோது கடவுள் அவர்சார்பாக இருந்து அவருக்கு அளித்த மாபெரும் வெற்றி, அவரது எதிரிகளான அண்டை நாட்டினர் மீது அவர் படையெடுத்துச் சென்றபோது கடவுள் அவருக்களித்த எண்ணமுடியாத வெற்றிகள், குறிப்பாக, தனது மகன் அப்சலோம் அவருக்கு எதிராக வெகுண்டெழுந்து ஆட்சியைக் கைப்பற்ற முனைந்தபோது கடவுள் அவருக்கு அளித்த வியக்கத்தக்க வெற்றிகள் யாவும் உள்ளடங்கியிருப்பதைப் பார்க்கின்றோம். இத்துடன், இந்த வெற்றிகளையெல்லாம் தொடர்ந்து எருசலேமைத் தனது இல்லிடமாகக் கொண்டு வாழும் கடவுளுக்கு அவர் அளித்த காணிக்கைகள், நேர்ச்சை பலிகள், பண்ணிசைத்துப் பாடிய பாடல்கள் யாவற்றையும் இங்கே நினைவுகூர்கின்றார் தாவீது அரசர். மேலும் எசாயா நூலில் 'எருசலேமின் வருங்கால மேன்மை' என்ற தலைப்பில் இதுகுறித்து இறைவாக்கினர் எசாயா விரிவாக எடுத்துரைக்கின்றார் (காண்க. எசா 60:1-22).
இரண்டாவதாக, "நாணலிடையே இருக்கும் விலங்கினைக் கண்டியும்; மக்களினங்களாகிய கன்றுகளோடு வருகிற காளைகளின் கூட்டத்தையும் கண்டியும்; வெள்ளியை நாடித் திரிவோரை உமது காலடியில் மிதித்துவிடும்; போர்வெறி கொண்ட மக்களினங்களைச் சிதறடியும் எகிப்திலிருந்து அரச தூதர் அங்கே வருவர்; கடவுள்முன் எத்தியோப்பியர் கைகூப்பி நிற்க விரைவர்" என்று கூறும் தாவீதின் வார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இங்கே மூன்று கருத்துக்களை வெளிப்படுத்துகிறார் தாவீது. "நாணலிடையே இருக்கும் விலங்கினைக் கண்டியும்" என்ற வார்த்தைகளில் முதலைகளைத் தான் அவர் விலங்குகள் என்று குறிப்பிடுகிறார் என்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இந்த முதலைகள் எகிப்தில் உள்ள நைல் நதியில் உலாவின. அந்த நதியில்தான் நாணல்கள் அதிகம் இருந்தன என்பதையும் நாம் பார்க்கின்றோம். எடுத்துக்காட்டாக, மோசே பிறந்தபோது என்ன நிகழ்ந்தது என்பது நமக்குத் தெரியும். பார்வோன் தன் குடிமக்கள் அனைவருக்கும் ஆணைவிடுத்து, “பிறக்கும் எபிரேய ஆண்மகவு அனைத்தையும் நைல் நதியில் எறிந்து விடுங்கள். பெண்மகவையோ வாழவிடுங்கள்” (காண்க. விப 1:22) என்று அறிவிக்கிறான். இந்நிலையில், மணமுடித்த லேவியர் குலத்தை சேர்ந்த பெண்ணொருவர் ஆண் மகவைப் பெற்றெடுக்கிறார். பார்வோன் மன்னருக்குப் பயந்து குழந்தையை பேழை ஒன்றினுள் வைத்து நைல்நதிக் கரையிலுள்ள நாணல்களுக்கிடையில் விட்டுவைத்தாள் (வச. 2:1-3) என்று வாசிக்கின்றோம். அதாவது, நைல்நதியில் அதிகமான நாணல்கள் இருந்தன என்பதற்கான சான்றாக இதனை நாம் புரிந்துகொள்ளலாம். அதேவேளையில், தாவீதின் காலத்தில் இந்நதியில் மன்னர்கள் முதலைகளையும் விட்டுவைத்திருக்கலாம் என்றும் கூறப்படுறது.
மேலும் நல்லவர்கள் மத்தியில் எண்ணற்ற தீயவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் என்பதை தாவீது அறிந்திருந்தபடியால்தான், தனது அரசில் தன்னோடு இருந்துகொண்டே தன்னை வீழ்த்த நினைப்பவர்களையும் தனக்கு எதிராகக் குழிபறிக்க எண்ணுவோரையும் ‘கண்டியும்' என்கின்றார். இங்கே ‘கண்டியும்’ என்ற வாரத்தையைத் தாவீது பயன்படுத்துவதைப் பார்க்கும்போது, தனது எதிரிகளை அழித்துவிட வேண்டாம், மாறாக, அவர்களைத் தண்டித்துத் திருத்தும் என்ற எண்ணத்தில் அவர் இவ்வாறு கூறியிருக்கலாம் என்றும் எண்ணத்தோன்றுகிறது. அப்படியென்றால், தனக்கு எதிராக எழுந்த மன்னர் சவுலையும் அவரது படைவீரர்களையும் தனது எதிரிகளாகக் கருதாது, அவர்கள்மீது அன்பு கொண்டிருந்திருக்கின்றார் தாவீது.
அடுத்து, "மக்களினங்களாகிய கன்றுகளோடு வருகிற காளைகளின் கூட்டத்தையும் கண்டியும்" என்று உரைக்கின்றார் தாவீது. ஏறக்குறைய முந்தைய வரிகளில் நாம் கேட்ட அதே அர்த்தத்தையே இவ்வார்த்தைகளும் உள்ளடக்கியுள்ளன என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இங்கே மக்களை ‘கன்றுகள்’ என்றும், அவர்களோடு வரும் காளைகளின் கூட்டத்தை அவரது ‘எதிரிகள்’ என்றும் பாவித்து இப்படி அவர் கூறியிருக்கலாம். மேலும் "காளைகளின் கூட்டம்" என்பது ‘வலிமையான எதிரிகள்’ என்பதையும், இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கானான் நாட்டை தாக்க முனைந்த வீண் பெருமைமிக்க, தலைக்கனம் கொண்ட, வெறிபிடித்த, கொழுத்த, கர்ஜிக்கும் காளைகள் என்பதையும் இவ்விடம் சுட்டிக்காட்டுகின்றார் தாவீது. இன்று நாம் வாழும் சூழலிலும் கூட இதுபோன்று நடக்கத்தானே செய்கிறது. நமது எதிரிகள் நம்மோடு உண்டு உரையாடி மகிழ்ந்து, நமக்கே தீமை விளைவிக்கும் நிலையை நாம் கேட்டும் இருக்கின்றோம், நேரில் கண்ணாரக் கண்டும் இருக்கின்றோம். 'பகையாளி குடும்பத்தை உறவாடிக் கெடு' என்று பழமொழி ஒன்று உள்ளது. தாவீதுக்கும் கூட இத்தகையதொரு அனுபவம் ஏற்பட்டதால்தான் இப்படிக் கூறியிருக்கின்றார். ஆக, நல்லவர்களோடு கெட்டவர்களும் கலந்து வாழும் இந்தப் புவியில் இறைவன்மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தால்தான் தீயவர்களை இனங்கண்டு அவர்களிடமிருந்து நாளும் நம்மைக் காத்துக்கொள்ள முடியும் என்பது திண்ணம்.
அடுத்து, "வெள்ளியை நாடித் திரிவோரை உமது காலடியில் மிதித்துவிடும்" என்கின்றார் தாவீது. இங்கே, இஸ்ரேல் மக்களின் எதிரிகள் வெள்ளிக் கட்டிகளில் கப்பம் கட்டும் வரை, அவர்களைக் கீழ்ப்படுத்தும்படி கடவுளிடம் கேட்பதாக நாம் புரிந்துகொள்ளலாம். மேலும் "வெள்ளியை நாடித் திரிவோரை" என்பது செல்வம், ஆட்சி, அதிகாரம், பெயர், புகழ் போன்ற இவ்வுலகுக்குரிய காரியங்களில் கவனம் செலுத்தும் ஆட்சியாளர்களைக் குறிப்பதாகவும் நாம் பொருள் கொள்ளலாம். அதனால்தான், இதனைத் தொடர்ந்து கூறும் தாவீது அரசர், "போர்வெறி கொண்ட மக்களினங்களைச் சிதறடியும்" என்று மொழிகின்றார். இங்கே 'போர்வெறிக்கொண்ட மக்களினங்கள்' என்பது, இஸ்ரயேல் நாட்டை போர்கொண்டு அழிக்க விரும்பிய அவரது எதிரி நாடுகளைச் சேர்ந்த மக்களைக் குறிக்கின்றது.
அடுத்து, "எகிப்திலிருந்து அரச தூதர் அங்கே வருவர்; கடவுள்முன் எத்தியோப்பியர் கைகூப்பி நிற்க விரைவர்" என்று கூறுகின்றார் தாவீது. இங்கே பழைய பகைவர்கள் புதிய நண்பர்களாக மாறுவார்கள் என்பதையும், அரசர் சாலமோன் பார்வோனின் வீட்டில் ஒரு துணையைக் கண்டுபிடிப்பார் என்பதையும் இவ்வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன. இதனை இறையியல் ரீதியாகப் பார்க்கின்றபோது, பாவிகளின் கூட்டத்திலிருந்து ஆண்டவராம் இயேசு தனக்கான மக்கள் கூட்டம் ஒன்றை ஒன்றுசேர்ப்பார் என்றும், பெரும்பாவிகள் அருளின் செங்கோலுக்குத் தங்களை ஒப்புக்கொடுப்பார்கள், இப்படியாக இந்தப் பெரும்பாவிகள் இயேசுவிடம் வருவதன் வழியாக அவர்கள் நல்ல மனிதர்களாக மாறுவார்கள் என்பதையும் நம் உள்ளத்தால் உணர்ந்துகொள்ளலாம். அவ்வாறே, "கடவுள்முன் எத்தியோப்பியர் கைகூப்பி நிற்க விரைவர்" என்ற வார்த்தைகள் வழியாக எத்தியோப்பியா நாட்டிலிருந்து மன்னர்கள் அரசர்களுக்கெல்லாம் அரசராகிய இயேசுவைத் தேடிவருவர் என்று சூசகமாகத் தாவீது எடுத்துக்காட்டுவதையும் நாம் இங்கே ஒப்பிட்டுப்பார்க்க முடிகிறது.
இறுதியாக, அனைத்து நாட்டு அரசர்களும் ஒன்றிணைந்து வந்து ஆண்டவராம் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தேத்த அவர்களுக்கு அழைப்புவிடுத்து இத்திருப்பாடலை நிறைவு செய்கின்றார் தாவீது. மேலும் "இஸ்ரயேலின் கடவுள் தம் மக்களுக்கு வலிமையையும் ஊக்கத்தையும் அளிக்கின்றார்" என்ற வார்த்தைகள் வழியாக, கடவுள் தான் தெரிந்துகொண்ட மக்களுக்கு எப்போதும் அரணும், கோட்டையும், கேடயமும், அடைக்கலமும், ஆதரவும், பாதுகாப்புமாய் இருக்கின்றார் என்ற நம்பிக்கையும் வெளிப்படுத்துகின்றார். ஆகவே, நாமும் நமது அன்றாட வாழ்வில் தாவீதின் மனநிலையைக் கொண்டு ஆண்டவருக்கு உகந்த மக்களாக வாழ்வதற்கு இந்நாளில் இறையருள்வேண்டி மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்