அன்னை ஓர் அதிசயம்– இத்தாலியின் லொரேத்தோ, சிரக்குசா திருத்தலங்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இயேசுவின் தாய் புனித கன்னி மரியா பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். அந்த இறையன்னை உலகில் எங்கெல்லாம் காட்சி கொடுத்தாரோ, அற்புதங்கள் செய்தாரோ அங்கெல்லாம், அந்தந்த இடங்களின் பெயராலே அவர் அழைக்கப்படுகிறார். வேளாங்கண்ணி மாதா, வாடிப்பட்டி மாதா, லூர்து மாதா, பாத்திமா மாதா, சலேத் மாதா, லொரேத் மாதா என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். இந்தியாவுக்கு, ஏன் ஆசிய நாடுகளுக்கு ஒரு வேளாங்கண்ணி போன்று, இத்தாலிக்கு ஒரு லொரேத்தோ என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். வேளாங்கண்ணியில் கோவில் கொண்டிருக்கும் கடலலைத் தாலாட்டும் ஆரோக்ய அன்னை திருத்தலத்துக்கு இனம், மதம், மொழி, நாடு என்ற பாகுபாடின்றி ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் செல்வது போன்று, இத்தாலியில் குடிகொண்டிருக்கும் லொரேத்தோ அன்னைமரித் திருத்தலத்துக்கும் இனம், மதம், மொழி, நாடு என்ற பாகுபாடின்றி ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். ஆண்டுதோறும் ஏறக்குறைய நாற்பது இலட்சம் திருப்பயணிகள் லொரேத்தோ அன்னைமரித் திருத்தலம் செல்கின்றனர் என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. தாயை நாடி பிள்ளைகள் செல்வது இயல்பு. லொரேத்தோ அன்னைமரித் திருத்தலத்துக்கு ஒரு முக்கிய சிறப்பு உள்ளதாகப் பாரம்பரியமாகச் சொல்லப்பட்டு வருகிறது.
இத்தாலியின் மத்திய பகுதியிலுள்ள மார்க்கே மாநிலத்தில் முசோனே ஆற்றின் வலது கரையில் அட்ரியாடிக் கடலுக்கு ஏறத்தாழ மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சிறிய நகரம் லொரேத்தோ. 11 ஆயிரம் மக்கள் வாழும் இந்நகரம், உரோமைக்கு வடகிழக்கில் ஏறக்குறைய 175 மைல்கள் தூரத்தில் உள்ளது. இந்நகரம், உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குவதற்கு ஒரே காரணம் அங்கு அமைந்துள்ள அன்னைமரியாத் திருத்தலமே. அதிலும், இத்திருத்தலத்துக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரு சிற்றாலயம்தான் இப்புகழுக்குக் காரணம். இதை ஆலயம் என்று சொல்வதைவிட வீடு என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் எருசலேமுக்கு அருகிலுள்ள நாசரேத்தின் புனித வீடுதான் இந்தச் சிற்றாலயம் என்று நம்பப்படுகின்றது. இந்த வீட்டில்தான் புனித கன்னிமரியாவுக்கு இயேசு பிறப்பு குறித்த மங்களச் செய்தியை வானதூதர் கபிரியேல் சொன்னார். நாசரேத்தில் திருக்குடும்பம் வாழ்ந்த இந்த எளிமையான வீடு செங்கற்களாலானது. இந்த வீடுதான் இத்தாலியின் லொரேத்தோ நகரிலுள்ள அழகான, பெரிய பசிலிக்காவுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இயேசுவின் இவ்வுலக வாழ்வுக்குப் பின்னர் மூன்று நூற்றாண்டுகள் கடந்து புதிதாகக் கிறிஸ்தவத்தைத் தழுவிய உரோமைப் பேரரசர் கான்ஸ்ட்டைன், இந்த எளிமையான வீட்டை நடுவில் வைத்து லொரேத்தோ அன்னைமரித் திருத்தலத்தைக் கட்டினார் என்பது வரலாறு. 1921ஆம் ஆண்டில் இந்தப் புனித வீட்டில் தீப்பற்றியதால் முதன்முதலில் வைக்கப்பட்ட அன்னைமரியா திருஉருவம் அழிக்கப்பட்டுவிட்டது. இப்போது இங்கு வைக்கப்பட்டுள்ள சிறிய கறுப்பு நிற அன்னைமரியா திருஉருவம் லெபனோன் நாட்டு கேதார் மரத்தால் செய்யப்பட்டது. விலையுயர்ந்த ஆபரணங்களாலும் அழகுபடுத்தப்பட்டுள்ளது.
லொரேத்தோவிலுள்ள இந்த நாசரேத் புனித வீடு குறித்து கத்தோலிக்க மரபில் ஒரு புதுமை சொல்லப்படுகின்றது. இந்த வீடு நாசரேத்தில் சிலுவைப்போர் காலத்தில் அழிக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கியது. எனவே 1291ஆம் ஆண்டில் வானதூதர்கள் இதனை தற்போதைய குரோவேஷிய நாட்டில் புதுமையாகக் கொண்டுவந்து வைத்தனர். ஏனெனில் அச்சமயத்தில் நாசரேத்தில் இவ்வீடு இருந்த இடம் திடீரெனக் காலியாக இருந்தது. அதேசமயம் அவ்வீடு குரோவேஷியாவில் காணப்பட்டது. பின்னர் அல்பேனிய முஸ்லீம்களின் ஆக்ரமிப்பினால் இவ்வீடு மீண்டும் தூதர்களால் 1294ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி இத்தாலியின் Recantiக்கு எடுத்துவரப்பட்டது. பின்னர் சிறிது காலம் கடந்து தற்போது இந்த வீடு அமைந்திருக்கும் லொரேத்தோவுக்கு எடுத்துவரப்பட்டது. இந்தப் புனித வீட்டை பல திருத்தந்தையர்கள், புனிதர்கள் உட்பட பலரும் வணங்கி வந்துள்ளனர். பல புதுமைகளும் இடம்பெற்று வருகின்றன. இந்த வீடு நாசரேத்தில் காணப்பட்ட வீட்டைப் போன்ற பொருள்களைக் கொண்டிருப்பதாக அறிவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். இந்தப் புனித வீடு குறித்து மேலும் சில கூற்றுக்களும் சொல்லப்படுகின்றன.
புனித பூமியிலிருந்து கிறிஸ்தவ சிலுவைப் போர் வீரர்கள் முழுவதுமாக வெளியேற்றப்படுவதற்குச் சிறிது காலத்துக்கு முன்னதாக, நாசரேத் புனித வீட்டை Angelos என்ற அரச குடும்பம், லொரேத்தோவுக்கு எடுத்து வந்ததாகவும் ஒரு மரபு உள்ளது. நாம் ஏற்கனவே சொன்னது போல, வானதூதர்கள் இந்தப் புனித வீட்டின் கற்களை இங்கு கொண்டு வந்தார்கள் என்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியில் இருக்கிறது. இயேசு, மரியா, வளன் இறந்த பிறகு இவர்கள் வாழ்ந்த வீட்டை திருத்தூதர்கள் ஆலயமாக மாற்றினார்கள் என்றும் சொல்லப்படுகிறது. லொரேத்தோ புனித வீட்டைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான பசிலிக்கா 1469ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.
புனித திருத்தந்தை 23ஆம் யோவான் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை ஆரம்பிக்கும் முன்னர் இந்த லொரேத்தோ அன்னைமரியா திருத்தலத்துக்குத் திருப்பயணம் மேற்கொண்டார். இந்த நிகழ்வின் 50ஆம் ஆண்டு மற்றும் திருஅவையில் தொடங்கியுள்ள நம்பிக்கை ஆண்டையொட்டி 2012ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்கள், லொரேத்தோ அன்னைமரியா திருத்தலத்துக்குத் திருப்பயணம் மேற்கொண்டு திருஅவையை அன்னைமரியாவிடம் அர்ப்பணித்தார். இந்த நம்பிக்கை ஆண்டில் விசுவாசத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் இருக்கும் அன்னைமரியாவின் வாழ்வை நாமும் பின்பற்றுவோம்.
சிரக்குசா அன்னைமரியா, சிசிலி, இத்தாலி
தென் இத்தாலியிலுள்ள சிசிலித் தீவின் தென்கிழக்கே அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க நகரம் சிரக்குசா. 2,700 ஆண்டுகள் பழமையுடைய இந்நகர் பழங்கால கிரேக்க வரலாறுக்கும், நாடக அரங்குகளுக்கும், கட்டட கலைக்கும் பெயர்போனது. தொன்மைகால கணித நிபுணரும் பொறியியலாளருமான Archimedes பிறந்த நகரமும் இதுதான். சிரக்குசா நகரம், பழங்கால கிரேக்க கொரிந்து மற்றும் Tenea நகரங்களின் மக்களால் உருவாக்கப்பட்டது. இந்நகரில் அன்னைமரியா காட்சி கொடுக்கவில்லை, ஆனால் தனது கண்ணீரை அந்நகர் மக்களுக்கு அனுப்பினார். 1953ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி அந்தோணினாவும், ஆஞ்சலோ யனுசோவும் திருமணம் செய்துகொண்டனர். அதன்பின்னர் இவர்கள் இருவரும் சிறிது காலத்துக்கு சிரக்குசாவிலுள்ள ஆஞ்சலோ யனுசோவின் தாய் மற்றும் அவரது சகோதரருடன் வாழச் சென்றனர். இவர்கள் மிகவும் ஏழைகள். இவர்களுக்குத் திருமணப் பரிசாக அன்னைமரியின் மாசற்ற திருஇதய திருவுருவப் படம் ஒன்று கொடுக்கப்பட்டது. டஸ்கனி மாநிலத்தில் பலகையில் சாந்தால் செய்யப்பட்ட படம் இது. இந்தப் படத்தை இத்தம்பதியர் தங்களது கட்டிலுக்கு மேலே மாட்டி வைத்தனர்.
அந்தோணினா கர்ப்பம் தரித்தார். அதோடு அடிக்கடி வலிப்பு நோயால் துன்புற்றார். இந்நோய் கண்பார்வையையும் சிறிது நேரத்துக்கு இழக்கச் செய்துவிடும். இந்நோய் கர்ப்பத்தோடு தொடர்புடையது. எனவே இவர் படுக்கையிலே இருக்க வேண்டுமென மருத்துவர் சொன்னார். அந்தோணினாவுக்குச் செபம் ஒன்றே ஆறுதல் அளித்தது. அவரது கணவர் ஆஞ்சலோ இதைக் கிண்டல் செய்தார். 1953ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி இந்த வலிப்பு நோய்க் கடுமையானது. வழக்கத்துக்கு மாறாக நீண்ட நேரம் நீடித்தது. அப்போது அந்தோணினாவோடு இருந்தவர்கள் மருத்துவரையும், அவரது கணவரையும் அழைத்து வர விரும்பினர். திடீரென அந்தோணினா அமைதியானார். கண்பார்வையிழந்து துன்புற்றார். ஆனால் அன்று 8.30 மணியளவில் அவருக்கு மீண்டும் பார்வை திரும்பியது. இந்த அனுபவத்தை அந்தோணினாவே விளக்குகிறார்:
நான் எனது கண்களைத் திறந்து எனது படுக்கைக்கு மேலே மாட்டப்பட்டிருந்த அன்னைமரியா படத்தையே வெறித்துப் பார்த்தேன். இந்த உருவப்படம் கண்ணீர் வடித்தது. எனது கண்களை நம்பவே முடியவில்லை. எனது நாத்தனார் கிராசியாவையும், மாமியார் அந்தோணினா ஸ்கார்லாத்தாவையும் அழைத்து அந்தக் கண்ணீரைக் காட்டினேன். இது எனது நோயினால் ஏற்பட்ட பிரம்மை என்றுதான் முதலில் அவர்கள் இருவரும் நினைத்தார்கள். ஆனால் நான் அதை அழுத்திக் கூறியதால் அவர்கள் அப்படத்துக்கு அருகில் சென்று பார்த்தனர். ஆம். அப்படத்திலிருந்த அன்னைமரியாவின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. சில கண்ணீர்த் துளிகள் அன்னைமரியாவின் கன்னங்கள் வழியாக வடிந்து எனது படுக்கையில் விழுந்தன. பயத்தினால் அவர்கள் அப்படத்தை வீட்டின் முன்புறத்துக்கு எடுத்துச் சென்றனர். அண்டை வீட்டாரையும் அழைத்தனர். அதைப் பார்த்த எல்லாருமே அன்னைமரியா கண்ணீர் வடித்ததை உறுதி செய்தனர்.
அன்னைமரியா கண்ணீர் வடித்தார் என்பதற்கு அந்தோணினாவின் நாத்தனாரும், மாமியாரும் சாட்சிகள். அன்னைமரியா கண்ணீர் வடித்ததை அந்தோணினா பலமணிநேரம் பார்த்துக்கொண்டிருந்தார். அக்கண்ணீரைத் துடைப்பதற்கு முதலில் தனது கைக்குட்டையாலும், பின்னர் வேறு ஒரு துணியாலும் அவர் முயற்சித்தார். ஆனால் அன்னைமரியா நான்கு நாள்களுக்கு, ஆகஸ்ட் 29ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் முதல் தேதிவரை பல தடவைகள் கண்ணீர் வடித்தார். ஆயிரக்கணக்கான திருப்பயணிகள் இதைப் பார்ப்பதற்காக, சிரகுசாவுக்கு வந்தனர். அச்சமயத்தில் மூன்று முக்கிய அருள்பணியாளர்களும், நான்கு அறிவியலாளர்களும், மூன்று புகழ்மிக்க மனிதரும் இதைப் பார்வையிட்டனர். இவர்களைக் கொண்ட ஒரு விசாரணைக்குழு உருவாக்கப்பட்டது. செப்டம்பர் முதல் தேதியன்று இக்கண்ணீரை அவர்கள் வேதிய ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். இது மனிதக் கண்ணீர் என்று ஆய்வு முடிவுகள் கூறின. இது பல மருத்துவர்களால் கையெழுத்திடப்பட்டது. இவர்கள் விவிலியத்தின்மீது கைவைத்து இது உண்மை என அறிவித்து சாட்சி சொன்னார்கள்.
இக்கண்ணீரில் தோய்த்த அத்துணியின் பாகங்கள் உலகின் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டது. இஸ்பெயின் உட்பட பல இடங்களில் பல புதுமைகளும் நடந்தன. இந்த உலகம் செபிக்காததால் அன்னைமரியா கண்ணீர் வடித்தார். குணமடைந்த புதுமையைப் பெற்ற அந்தப் பெண்ணே அன்னைமரியா கண்ணீர் வடித்ததையும் முதலில் பார்த்தார். அந்தோணினா முழு குணமடைந்து 1953ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி ஒரு மகனைப் பெற்றெடுத்தார். பேராயர் Baranzini அக்குழந்தைக்குத் திருமுழுக்கு அளித்தார். சிரக்குசாவில் அன்னைமரியா கண்ணீர் வடித்ததை 1954ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி திருத்தந்தை 12ஆம் பத்திநாதர் அங்கீகரித்தார்.
சிரக்குசாவில் கண்ணீர் வடித்த அன்னைமரியாவின் திருவுருவப் படத்தைக் கொண்ட அழகிய திருத்தலம் எழுப்பப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான திருப்பயணிகள் அங்குச் செல்கின்றனர். இந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி இப்புதுமை நடந்த 70ஆம் ஆண்டு சிறப்பிக்கப்பட்டது. நாம் இறைவன்மீது முழுமையான நம்பிக்கை வைத்து செபம் தியானம் ஆகியவற்றை ஒதுக்காமல் தினமும் செய்வோம். கலவரங்கள் நிறைந்த இன்றைய உலகின் நிலை கண்டு அன்னைமரியா மீண்டும் கண்ணீர் வடிக்காமல் இருக்க, உலகின் அமைதிக்காகச் செபிப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்