தேடுதல்

கார்கிவின் ஆயர் Pavlo Honcharuk   கார்கிவின் ஆயர் Pavlo Honcharuk  

கார்கிவில் துன்புறும் மக்களோடு இருக்கும் திருஅவை

திருத்தந்தையின் ஆசிரைத் துன்புறும் உக்ரைன் நாட்டிற்கு கொண்டுச் செல்கிறேன் : கார்கிவின் ஆயர் Pavlo Honcharuk

ஜெர்சிலின் டிக்ரோஸ் – வத்திக்கான்

ஜூன் 18, புதனன்று திருத்தந்தையின் பொதுமறைக்கல்வியுரையின்போது, திருத்தந்தை 14 ஆம் லியோ அவர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பைப் பெற்ற கார்கிவின் ஆயர் Pavlo Honcharuk   அவர்கள், கார்கிவின் அருள்பணியாளர்கள், துறவிகள், உக்ரேனிய மக்கள்  என அனைவருக்கும் திருத்தந்தையின் ஆசிரை வேண்டிப் பெற்றதாகவும், அதைத் தனது துன்புறும் நாட்டிற்கு கொண்டுச் செல்வதாகவும்  வத்திக்கான் செய்தித் தொடர்பகத்தினரிடம் அளித்த நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இரஷ்ய எல்லையிலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ள கார்கிவ் நகரம்,  மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ளது என்றும், குழந்தைகள் விளையாடும் பூங்காக்கள், தொழிற்சாலைகள், விவசாய நிலங்கள் உள்பட நகரங்கள், கிராமங்கள் என  அனைத்தும் அழிக்கப்படுகின்றன என்றும்  கவலை தெரிவித்துள்ளார் ஆயர் Honcharuk.

பல்லாயிரம் ட்ரோன்கள் வெடிகுண்டுகளை ஏந்தி வருவதையும், குண்டு  வீச்சுகளால் கட்டிடங்கள் மட்டுமல்லாது அவற்றில் உள்ள மக்களும்  முற்றிலுமாக அழிக்கப்படுவதையும் காண்பதாகத் ஆயர் தெரிவித்துள்ளார்.

மேலும், 27 இலட்சம் மக்கள் இருந்த கார்கிவில் தற்போது, 5,00,000 பேர் மட்டுமே உள்ளனர் என்றும், கல்லறைகள் அதிகரித்து வருகின்றன என்றும் வேதனை தெரிவித்துள்ளார் ஆயர்.

பல பங்குத்தளங்கள் உள்பட நகரம் முழுவதும் அழிக்கப்பட்ட நிலையிலும், அருள்பணியாளர்கள் தங்கள் பணியைத் தொடர்ந்து  வருகிறார்கள் என்றும், திருப்பலி நிறைவேற்றுதல், வழிபாடுகளைத் தலைமையேற்று நடத்துதல், ஒப்புரவு  அருளடையாளம் வழங்குதல், நோயாளர்களைச் சந்தித்தல் எனத்  துன்புறும் மக்களோடு இருக்கிறார்கள் என்றும் ஆயர்  தெரிவித்துள்ளார்.

மேலும், உக்ரேனிய வீரர்கள் தங்கள் நாட்டைப் பாதுகாக்க ஆயுதங்களை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும், அவர்கள் உடல்  மற்றும்  உளவியல் காயங்களுடன் தங்களைச் சந்திக்க வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கார்கிவின் சேமிப்புக் கிடங்குகள் குறிவைத்து தாக்கப்பட்டு, உதவிகள் குறைந்து வரும் நிலையில், திருஅவையின்  காரித்தாஸ் அமைப்புகள்  மற்றும் சிறிய பங்கு அடிப்படையிலான குழுக்கள் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டுகிறது என்றும், திருஅவை உக்ரைனின் மக்களோடு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மக்கள் உயிர்வாழ வீரர்கள் தங்கள் உயிரை விலையாகக் கொடுக்கிறார்கள் என்றும் அவர்கள் தங்கள் நாட்டின் சுதந்திரம் காக்கும் பணியில் தங்கள் உள்மன அமைதியையும் விட்டுக்கொடுத்து கனமான சுமையை சுமக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார் கார்கிவின் ஆயர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 ஜூன் 2025, 16:15