தேடுதல்

பேராயர் பால் ரிச்சர்டு காலகர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் 

இந்தியாவின் கேரளாவில் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்

வணக்கத்திற்குரிய பேராயர் மார் இவானியோஸ், தனது சகோதரர்களை கிறிஸ்துவுடன் தனிப்பட்ட உறவை வளர்த்துக் கொள்ளவும், அன்றாட வாழ்க்கையில் தூய்மையைப் பேணவும் தன்னலமின்றி சேவை செய்யவும் ஊக்குவித்தார்.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

வணக்கத்திற்குரிய பேராயர் மார் இவானியோஸ், இன்றும் விசுவாசிகளை தூய்மையைப் பின்பற்றவும், கிறிஸ்துவில் ஆழமாக வேரூன்றவும் அழைப்பு விடுக்கிறார் என்று தெரிவித்துள்ளார் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.

ஜூலை 13 முதல் 19 வரை ஒரு வாரம் இந்தியாவின் கேரளாவில் பயணம் மேற்கொண்டுள்ள பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் காலகர் அவர்கள், ஜூலை 15, இச்செவ்வாயன்று திருவனந்தபுரத்தில் கொண்டாடப்பட்ட வணக்கத்திற்குரிய பேராயர் மார் இவானியோஸ் அவர்களின் ஆண்டு நினைவுத் திருப்பலியைத் தலைமேற்று வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில், திருவனந்தபுரம் பேராயர் கர்தினால் பாசிலியோஸ் க்ளீமிஸ் அவர்களின்  வழிநடத்துதலில் இறைவேண்டல்கள், வழிபாடுகள் மற்றும் திருவிழிப்பு செபங்கள் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் வாழ்த்துக்களையும், அப்போஸ்தலிக்க ஆசீரையும் திருப்பலியில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் தெரிவித்து தனது மறையுரையைத் தொடங்கிய பேராயர் காலகர் அவர்கள், இவ்விடம்  திருத்தூதரான புனித தோமையாரின் காலத்திலிருந்தே கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தை தீவிரமாக பாதுகாத்து வந்துள்ளது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

வணக்கத்துக்குரிய பேராயர் மார் இவானியோஸ் அவர்கள், வெறுமனே திருஅவையின் ஒரு தலைவராகவோ அல்லது கல்லவியாளராகவோ மட்டுமில்லாமல், ஒன்றிப்பு, தூய்மை மற்றும் சேவைக்கான நற்செய்தியின் அழைப்பை உள்ளடக்கிய ஒரு தொலைநோக்குப் பார்வை  கொண்டவர் என்றும், இன்றுவரை அவரது வாழ்வும் பணியும் அனைவரையும் ஊக்கப்படுத்துகின்றன என்றும் எடுத்துரைத்துள்ளார் பேராயர் காலகர்.

மேலும் வணக்கத்திற்குரிய பேராயர் மார் இவானியோஸ் அவர்கள், கிறிஸ்துவுடன் தனிப்பட்ட உறவை வளர்த்துக் கொள்ளவும், அன்றாட வாழ்க்கையில் தூய்மையைப் பேணவும், தன்னலமின்றி மற்றவர்களுக்கு சேவை செய்யவும் தனது சகோதரர்களை ஊக்குவித்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார் பேராயர் காலகர்.

இறைவேண்டல், கல்வி, ஒன்றிப்பு மற்றும் சேவை வழியாக, நமது வாழ்க்கைச் சூழலில் அவரதுப் பணியைத் தொடர நாம் ஒவ்வெருவரும் அழைக்கப்படுகிறோம் என்றும் கூறியுள்ளார் பேராயர் காலகர்.

இறுதியாக, கிறிஸ்துவின் உண்மையுள்ள சீடர்களாகவும், துணிவுள்ள தலைவர்களாகவும், இரக்கமுள்ள ஊழியர்களாகவும், மேலும் ஒன்றிப்பு, அமைதி மற்றும் அன்பு ஆட்சி செய்யும் ஒரு திருஅவையையும், உலகத்தையும் கட்டியெழுப்பத் தேவையான அருளை நல்ல மேய்ப்பரான கிறிஸ்து நமக்கு அருள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் பேராயர் காலகர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 ஜூலை 2025, 12:32