தேடுதல்

கிழக்கு திமோர் அருள்பணியாளர்கள் கிழக்கு திமோர் அருள்பணியாளர்கள்   (ANSA)

அழைத்தல் வாழ்வை மகிழ்வுடன் வாழும் அருள்பணித்துவ மாணவர்கள்

25 ஆண்டுகளைக்கொண்டாடும் திலி புனித பேதுரு பவுல் குருத்துவ இல்லத்தில், மறைமாவட்ட மற்றும் துறவற சபை அருள்பணித்துவ மாணவர்கள் என மொத்தம் 989 பேர் இவ்வில்லத்தில் படித்து பயிற்சி பெற்றுள்ளனர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

கிறிஸ்துவை தினமும் பின்பற்றுவதன் வழியாகவும், ஒவ்வொரு நாளும் திருஅவைக்குப் பணியாற்றுவதன் வழியாகவும் இளம் அருள்பணித்துவ மாணவர்கள் தங்களது அழைத்தல் வாழ்வை மகிழ்வுடன் வாழ்கின்றார்கள் என்றும் தெரிவித்தார் அருள்தந்தை Alessandro Brandi.

ஜூலை 13 ஞாயிறன்று கிழக்குதிமோரின் திலியில் உள்ள புனித பேதுரு பவுல் குருத்துவ இல்லமானது தனது 25ஆவது ஆண்டு வெள்ளிவிழாவைச் சிறப்பித்த நிலையில் அத்திருப்பலியில் பங்கேற்று அருள்பணித்ஹ்துவ மாணவர்களைச் சந்தித்து உரையாற்றியபோது இவ்வாறு எடுத்துரைத்தார் திருத்தூதர் பேதுரு திருப்பீடச்செயல்களுக்கான அலுவலர் அருள்தந்தை Alessandro Brandi.

வெள்ளி விழாத் திருப்பலிக்குத் Maliana மறைமாவட்ட ஆயரும் கிழக்கு திமோர் ஆயர் பேரவையின் தலைவருமான ஆயர் Norberto do Amaral அவர்கள் தலைமையேற்றார். Baucau மறைமாவட்ட ஆயர் Leandro Maria Alves அவர்களும் உடனிருந்து திருப்பலியினை நிறைவேற்றினார்.

90 விழுக்காட்டிற்கும் அதிகமான கத்தோலிக்க மக்களைக் கொண்ட கிழக்கு திமோரானது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சிறிய நாடு என்றும், கடந்த ஆண்டு இங்கு வருகை தந்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திலியில் உள்ள அருள்பணித்துவ மாணவர்களைச் சந்தித்ததையும் நினைவுகூர்ந்தார் அருள்தந்தை Brandi.

25 ஆண்டுகளைக்கொண்டாடும் குருத்துவ இல்லத்தில் மறைமாவட்டம் மற்றும் துறவற சபை அருள்பணித்துவ மாணவர்கள் என மொத்தம் 989 பேர் படித்து பயிற்சி பெற்றுள்ளனர் என்றும், இவர்களில் 118 பேர் குருவாக அருள்பொழிவு பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார் அருள்தந்தை Brandi.

தற்போது குருத்துவ இல்லத்தில் 245 அருள்பணித்துவ மாணவர்கள் பயில்கின்றனர் என்று குறிப்பிட்ட அருள்தந்தை Brandi அவர்கள், மகிழ்ச்சியான குருத்துவ மாணவர்களாக இருங்கள், உங்கள் ஆசிரியர்களுடன் எப்போதும் நேர்மறையான நல்ல உறவைப் பேணி வளர்த்துக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைத்தார்.

நான்கு திருப்பீட மறைப்பணிச் சங்கங்களின் பணிகள் மற்றும் செயல்பாடுகளை அருள்பணித்துவ மாணவர்களுக்கு விளக்கிய அருள்தந்தை Brandi அவர்கள், குறிப்பாக அருள்பணித்துவ மாணவர்களை உருவாக்குவதற்குத் தேவைப்படும் நிதி எவ்வாறு திரட்டப்படுகிறது என்பது குறித்து கவனம் செலுத்தும், POSPA எனப்படும் திருத்தூதர் பேதுரு திருப்பீட மறைப்பணி செயல்கள் பற்றியக் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டார். (FIDES)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 ஜூலை 2025, 13:02