தேடுதல்

கர்தினால்  கார்டு இலாசரஸ் யூ ஹியூங்-சிக் கர்தினால் கார்டு இலாசரஸ் யூ ஹியூங்-சிக் 

தென்கொரிய உலக இளைஞர் மாநாட்டில் திருத்தந்தை கலந்து கொள்ள எதிர்பார்ப்பு

அருள்பணியாளர்களுக்கான திருப்பீடத்துறை தலைவர் கர்தினால் கார்டு இலாசரஸ் யூ ஹியூங்-சிக்கை சந்தித்த தென் கொரிய அரசுத் தலைவர், திருத்தந்தை அவர்களை விரைவில் சந்திக்கும் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

சுஜிதா சுடர்விழி - வத்திக்கான்   

அருள்பணியாளர்களுக்கான திருப்பீடத்துறை  தலைவர் கர்தினால்  கார்டு இலாசரஸ் யூ ஹியூங்-சிக் அவர்களைச் சந்தித்த தென் கொரிய அரசுத் தலைவர், திருத்தந்தை அவர்களை விரைவில் சந்திக்கும் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவில் 2027ஆம் ஆண்டு நடக்கும் உலக இளைஞர்கள் மாநாட்டில் திருத்தந்தை கலந்து கொள்வது, கொரிய தீபகற்பத்தில் அமைதியை நோக்கிய ஒரு வரலாற்று படியாக இருக்கும் என்று அவர் நம்புவதாகவும் கர்தினாலிடம் கூறினார்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய கர்தினால், உலக இளைஞர்கள் மாநாடு இளைஞர்களுக்கு தியாக உணர்வைத் தெரியப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்றும், ஓர் அருள்பணியாளர்  மகிழ்ச்சியாக இருக்கும்போது, ​​அவர் சந்திக்கும் மக்களுக்கும் அது அதிக மகிழ்ச்சியைக் கொடுப்பதாகவும்,   இதன்வழி பல இளைஞர்களை அருள்பணித்துவத்திற்கு ஈர்க்க முடியும் என்றும்  கர்தினால் கார்டு யூ அவர்கள் எடுத்துரைத்தார்.

அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கங்களின் துணிச்சலான நடவடிக்கைகளுடன் மக்களுடனான நல்லிணக்கமும் தொடங்க வேண்டும் என்றும், அவர்கள் மக்களின் குரலுக்கு அதிகமாக செவிசாய்த்து, உரையாடல் வழியாக பாலங்களை உருவாக்கி, பலவீனமானவர்களுக்கு  தங்களை உண்மையாக அர்ப்பணித்து, பிளவுபட்ட சமூகத்தை குணப்படுத்துவதில் ஒரு முக்கிய பங்களிப்பைச் செய்ய முடியும் என்றும் கர்தினால் சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது  

41வது உலக இளைஞர்கள் மாநாட்டில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் வருகை உறுதி செய்யப்பட்டால், 1995இல் பிலிப்பைன்ஸுக்குப் பிறகு ஆசியாவில் இரண்டாவது முறையாக உலக இளைஞர்கள் மாநாட்டிற்கென வருகை தரும் திருத்தந்தையாக இவர் இருப்பார். மேலும், தென் கொரியாவில் திருப்பயணம் மேற்கொள்ளும் மூன்றாவது திருத்தந்தையாக இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1984ஆம் ஆண்டு தூய இரண்டாம் ஜான் பால் அவர்களும்,  2014ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் தென் கொரியாவிற்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 ஜூலை 2025, 15:17