பாகிஸ்தானில் 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த கத்தோலிக்கர்
சுஜிதா சுடர்விழி - வத்திக்கான்
தெய்வ நிந்தனை குற்றத்திற்காக 23 ஆண்டுகள் மரண தண்டனை அனுபவித்த மனநலம் பாதிக்கப்பட்ட கத்தோலிக்கர் அன்வர் கென்னத்தை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அண்மையில் விடுவித்துள்ளது.
சிறையிலிருந்த கென்னத்தை மருத்துவர்கள் சோதித்து அவரது மனநோயை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு குற்றவியல் ரீதியாக தண்டனை வழங்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து அவரை விடுவித்துள்ளது.
தற்போது 72 வயதாகும் கென்னத், நபிகள் நாயகம் மற்றும் குர்ஆன் பற்றி கடிதங்கள் எழுதியதாகக் கூறி 2001இல் கைது செய்யப்பட்டு, ஜூலை 2002இல் லாகூரில் உள்ள நீதிமன்றத்தால், தெய்வ நிந்தனை குற்றத்திற்காக மரண தண்டனை தீர்ப்புடன், 17,985 அமெரிக்க டாலர் அபராதமும் விதிக்கப்பட்டார்.
லாகூரில் உள்ள அமைதி மையத்தின் இயக்குநரான அருள்தந்தை டொமினிகன் ஜேம்ஸ் சன்னன் அவர்கள், திரு.கென்னத் விடுவிக்கப்பட்ட செய்தியை வரவேற்றதாகவும், நீதி வழங்கியதற்காக உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், நீதி தாமதமானலும் நீதி நிலைநாட்டப்பட்டது என்றும், கென்னத் தனது வாழ்க்கையின் விலைமதிப்பற்ற 23 ஆண்டுகளை இழந்துவிட்டார் என்பதை நினைத்து தான் வருந்துவதாகவும், பொய்யாக குற்றம் சாட்டியவர்களை குறைந்தது 23 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் அருள்தந்தை பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
அதிகாரிகளும் சட்டமியற்றுபவர்களும் தெய்வ நிந்தனைச் சட்டங்களின் தவறான பயன்பாட்டைக் கவனிக்க வேண்டும் எனவும், தனிப்பட்ட வெறுப்புகளைத் தீர்த்துக் கொள்ள இச்சட்டம் பயன்படுத்தப்படுவதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அருள்தந்தை தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்