தேடுதல்

பேரரசர் தாவீது பேரரசர் தாவீது  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 31-2, துன்புறுவோர் மீட்படையட்டும்!

இன்றைய நிலையில் உலகெங்கினும் மனிதர் பல்வேறு நிலைகளில், பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்படுகின்றனர். இவர்கள் மீட்கப்பட வேண்டும்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 31-2 – துன்புறுவோர் மீட்படையட்டும்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில் ‘கடவுளே நமக்கு அடைக்கலம் அருள்பவர்’ என்ற தலைப்பில் 31-வது திருப்பாடலில் 1 முதல் 4 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். அதில் கடவுளே என்றென்றைக்கும் நமது அடைக்கலமாக இருக்கிறார் என்பதைக் குறித்துத் தாவீது அரசருடன் இணைந்து சிந்தித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 5 முதல் 7 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம். “கடவுளே உமது கையில் என் உயிரை ஒப்படைகின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளுனீர். நானோ, பயனற்ற சிலைகளில் பற்றுடையோரை வெறுத்து, ஆண்டவர்மீது நம்பிக்கை வைக்கின்றேன். உமது பேரன்பில் நான் களிகூர்வேன்; அக்களிப்பேன்; என் துன்பத்தை நீர் பார்த்திருக்கின்றீர்;

என் இக்கட்டுகளையும் நீர் அறிந்துள்ளீர்” (வச. 5-3).

இந்த இறைவார்த்தைகள் வெளிப்படுத்தும் மூன்று கருத்துக்களை மையமாகக் கொண்டு நம் சிந்தனைகளைத் தொடங்குவோம். முதலாவதாக, பாவம் செய்வதைவிட சாவதே மேல் என்பதற்கிணங்க, இங்கே தாவீது அரசர் பயனற்ற காரியங்களிலும் இவ்வுலக மாயைகளிலும் மூழ்கிப்போய், கடவுளுக்கு எதிரான சிலைவழிபாடுகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட நேர்மையற்ற மனிதர்களோடு வாழ்வதைவிட தனது இன்னுயிரை இழப்பதே மேல் என்ற முடிவுக்கு வருகிறார். அதனால்தான் உமது கையில் என் உயிரை ஒப்படைகின்றேன் என்கிறார். கடவுளை மட்டுமே தங்களின் அடைக்கலமாகக் கொண்டு வாழ்பவர்கள் அனைவருமே துன்ப காலங்களில் தீயனவற்றில் ஈடுபடுவதைவிட தங்கள் உயிரை இழக்க முன்வருவர். அற்ப சுகங்களுக்கு அடிமைப்பட்டுபோய்விடாமல் கொண்ட கொள்கையில் உறுதியாக நிலைத்து நிற்பர். உண்மை,  நீதி,  நேர்மை, வாக்குப் பிறழாமை, பிரமாணிக்கம் ஆகிய இறைவனின் உயர் மதிப்பீடுகளுக்கும் விழுமியங்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பர் என்பது தெளிவு.

தன்னை அரியணையில் அமர்த்திய ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டிராமல் ஆயுதங்கள்மீது நம்பிக்கை கொண்டிருந்தவர் சவுல் அரசர். தன்னைத் தவிர அந்த அரியணையில் யாரும் அமர்ந்துவிடக் கூடாது என்றெண்ணியவர் அவர். யாருமே வெல்லமுடியாத கோலியாத்தை தாவீது கொன்றழித்தபோது, அதனை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் தாவீதை தன் மிகப்பெரும் எதிரியாகக் கொள்கின்றார் சவுல். தாவீதின் உள்ளத்திலிருந்து வெளிப்படும் வேதனை நிறைந்த வார்த்தைகள் இதனை நமக்கு உறுதி செய்கின்றன. தாவீது நினைத்திருந்தால் சவுலின் தீய எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் சுலபமாக அடிமையாகியிருந்திருக்க முடியும். ஆனால் தாவீது அதைச் செய்யவில்லை. காரணம், சவுலிடம் தஞ்சமடைவதைவிட ஆண்டவரிடம் புகலிடம் தேடுவதே சிறந்தது என்று அவர் எண்ணினார்.

நமதாண்டவர் இயேசு கிறிஸ்துவும்கூட சதுசேயர், பரிசேயர், மூப்பர்கள், திருச்சட்ட அறிஞர்கள், தலைமைக் குருக்கள் என அனைவரும் தன்னை எதிரியாகக் கொண்ட நிலையிலும் கூட, அவர்களின் அற்ப சுகங்களுக்கு ஆட்பட்டுப்போய்விடாமல் உண்மையை உள்ளவாறு உரைத்து உன்னதத் தந்தையின் பக்கமே இறுதிவரை நின்றார். அதனால்தான் அவர் கொடிய வேதனைகளையும் சாவையும் தழுவிக்கொள்ள வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. அந்நிலையிலும் கூட, “தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்” (லூக் 23:46). என்று உரத்த குரலில் கூறி அன்புத் தந்தையின் கரங்களில்தான் தன் இன்னுயிரைக் கையளித்தார். அவ்வாறே திருத்தூதர் பணிகள் நூலிலும் ஸ்தேவான் தன் எதிரிகளால் கொடிய சாவினை எதிர்கொண்டபோது, “ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்” என்று வேண்டிக் கொண்டார் (திப 7:59) என்று வாசிக்கின்றோம்.

மறைச்சாட்சியாகக் கொல்லப்பட்ட புனித பொலிகார்ப்பைப் பற்றி நாம் நன்கு அறிவோம். இவர் கொல்லப்படுவதற்கு முன்பு, ‘நீ கிறிஸ்துவை மறுதலித்தால் உனக்கு விடுதலைக் கொடுப்பேன்’ என்று முழங்கினான் மன்னன். அதற்கு அவர், “86 ஆண்டுகளாக நான் கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்து வருகிறேன். அவர் எனக்கு எவ்விதத் தீங்கும் இழைக்கவில்லை. அத்தகையவரை நான் பழித்துரைப்பேனா? நான் ஒரு கிறித்தவன்” என்று அச்சமின்றி துணிச்சலாகப் பதிலளித்தார். அப்போது அவருடைய முகம் தெய்வீக ஒளியுடன் காணப்பட்டது. ‘இவன் சுட்டெரிக்கப்படவேண்டும்’ என மன்னன் ஆணை பிறக்கவே, அவருடைய எதிர்ப்பாளர்கள் தீராத வெறியுடன் அங்குமிங்கும் ஓடி விறகுக் கட்டைகளைச் சேகரித்தனர். அந்நிலையிலும் பொலிகார்ப், "நான் அஞ்சி அழுது ஓடமாட்டேன். எனவே என்னைக் கட்டவேண்டாம். எனக்கு உறுதியூட்டும் தெய்வம் நான் அசைவுறாதிருக்க  எனக்கு வரமருள்வார்" என்றார். எனவே அவரின் கைகளை மட்டும் முதுகுப் புறம் கட்டினார்கள். அவ்வேளையில் அங்கு ஓர் அருளடையாளமும் நிகழ்ந்தது. விறகுக் கட்டைகள் விரைவாகப் பற்றி எரிந்தாலும், நான்கு சுவர் எழுப்பி அவரைப் பாதுகாப்பதுபோல் தோன்றியது. தசை வெந்தால் ஏற்படும் தீய நாற்றத்திற்குப் பதிலாக, நறுமணப்புகை வந்துகொண்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த கொடுகோல் மன்னன் அவரை வெளியே கொண்டுவந்து ஈட்டியால் குத்திக் கொல்லக் கட்டளையிட்டான். இதுவும் நிகழாமல் போகவே, இறுதியாக அந்த அரக்க மனம் கொண்ட மன்னன் அவரை எரித்துச் சாம்பலாக்கினான்.

இரண்டாவதாக தாவீது அரசர், ‘நீரே என்னை மீட்டருளினீர்’ என்கின்றார். ‘மீட்பு’ என்ற வார்த்தை திருவிவிலியம் முழுவதுமே விரவிக்கிடக்கின்றது. இப்போது அவற்றில் ஒருசிலவற்றை மனதில் உள்வாங்கிக்கொள்வோம். யாக்கோபே, உன்னைப் படைத்தவரும் இஸ்ரயேலே, உன்னை உருவாக்கியவருமான ஆண்டவர் இப்போது இவ்வாறு கூறுகிறார்: அஞ்சாதே, நான் உன்னை மீட்டுக் கொண்டேன்; உன் பெயரைச் சொல்லி உன்னை அழைத்தேன்; நீ எனக்கு உரியவன் (எசா 43:1) என்றும், ஏனெனில், யாக்கோபை ஆண்டவர் மீட்டார்; அவனிலும் வலியவன் கையினின்று அவனை விடுவித்தார்  (எரே 31:11) என்றும், “மரத்தில் தொங்கவிடப்பட்டோர் சபிக்கப்பட்டோர்” என்று எழுதியுள்ளவாறு நமக்காகக் கிறிஸ்து சாபத்துக்கு உள்ளாகி நம்மைச் சட்டத்தின் சாபத்தினின்று மீட்டுக் கொண்டார் (கலா 3:13) என்றும் நாம் திருவிவிலியத்தில் வாசிக்கின்றோம்.

மூன்றாவதாக, “நானோ, பயனற்ற சிலைகளில் பற்றுடையோரை வெறுத்து, ஆண்டவர்மீது நம்பிக்கை வைக்கின்றேன்” என்று தாவீது அரசர் கூறுகின்றார். எவ்வித பயனும் அருளும் தராத சிலைகள் மீது நம்பிக்கைகொண்டோரைதான் பயனற்ற சிலைகளில் பற்றுடையோர் என்று குறிப்பிடுகின்றார். அதாவது, படைத்தவரை மறந்துவிட்டு படைப்பைப் பற்றிக்கொள்ளும் நிலை இது. இதுமட்டுமன்றி, இங்கே சிலைகள் என்பது படைத்தவருக்கு எதிராக மனிதர் அடிமையாகும் தீய நாட்டங்களையும் செயல்களையும் குறிக்கின்றன. ஆக, இப்படிப்பட்ட தீய மனிதரை வெறுத்து ஒரே கடவுளாகிய ஆண்டவர்மீது மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளதாகக் கூறுகின்றார் தாவீது. நான்காவதாக, உமது பேரன்பில் நான் களிகூர்வேன்; அக்களிப்பேன்; என் துன்பத்தை நீர் பார்த்திருக்கின்றீர்;  என் இக்கட்டுகளையும் நீர் அறிந்துள்ளீர்” என்று உரைக்கின்றார் தாவீது. அன்பு, நம்பிக்கை, களிகூர்தல் ஆகிய மூன்றுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. கடவுளிடத்திலும் மனிதரிடத்திலும் நாம் கொள்ளும் உண்மையான உறவினால் இவை நமக்கு எப்போதும் சாத்தியமாகின்றன. அன்பிலிருந்து நம்பிக்கையும், நம்பிக்கையிலிருந்து களிகூர்தலும் ஊற்றெடுக்கின்றன.

ஓர் ஊரில் தொடர்ந்து சில ஆண்டுகளாக மழை பெய்யவே இல்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் ஒன்று கூடி வந்தனர். “ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர்கள், குழந்தைகள் என்ன செய்வார்கள். நீங்கள்தான் எதாவது உதவி புரிய வேண்டும்” என வேண்டினர். இரக்க மனம் படைத்த அந்தப் பெரியவர் “இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு ரொட்டி கிடைக்குமாறு ஏற்பாடு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து அவற்றை எடுத்துச்செல்லுங்கள்” என்றார். மாளிகை திரும்பிய பெரியவர் தன் வேலைக்காரனை அழைத்தார். “இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்துக்கொள். ஆளுக்கொரு ரொட்டி கிடைக்க வேண்டும். கூடவும் வேண்டாம். குறையவும் வேண்டாம்” என்று கட்டளையிட்டார். உடனே வேலைக்காரன் அனைவருக்கும் ரொட்டி வாங்கிக்கொண்டு வந்து மாளிகை வாசலில் குழந்தைகளின் வரவுக்காகக் காத்திருந்தான். சிறிது நேரத்தில் ஊரில் உள்ள குழந்தைகள் அனைவரும் வேலைக்காரனை சூழ்ந்துகொண்டு பெரிய ரொட்டியை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டிப்போட்டனர். ஒரே ஒரு சிறுமி மட்டும் அங்கே அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக மிஞ்சி இருந்த ஒரு சிறிய துண்டை மட்டும் தான் எடுத்துக்கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் வீட்டிற்குச் சென்றாள்.

இப்படியே நான்கு நாள்களும் நிகழ்ந்தன. எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தார் அந்தச் செல்வர். ஐந்தாம் நாளும் அப்படியே நிகழ்ந்தது. எஞ்சியிருந்த சிறிய ரொட்டியை மட்டும் எடுத்துக்கொண்டு புறப்பட்டாள் அந்தச் சிறுமி. தன் வீட்டிற்கு வந்ததும் அந்த ரொட்டியை தன் தாய்க்குக் கொடுத்தாள். அத்தாய் அதனை உடைத்தபோது, அதிலிருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது. அந்தத் தங்கக் காசை எடுத்துக்கொண்டு சிறுமி செல்வரின் வீட்டிற்கு ஓடி வந்து, “ஐயா இது உங்கள் தங்கக் காசு, ரொட்டிக்குள் இருந்தது பெற்றுக்கொள்ளுங்கள்” என்றாள். ‘குழந்தாய் உன் பொறுமைக்கும் நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. இதை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் வீட்டிற்குச் செல்!’ என்றார் அந்தச் செல்வந்தர். துள்ளிக்குதித்தபடி ஓடிவந்த அவள் நடந்ததை அப்படியே தன் தாயிடம் சொல்லி குதூகலித்தாள்!  

துன்பத்தில் வாடுவோர் பொறுமையுடன் இறைவனிடத்தில் வேண்டுதல் செய்யும்போது, அல்லது, அவரின் உதவியை நாடும்போது அவர் அவர்களைக் கைவிடுவதில்லை என்பதை உணர்ந்துகொள்வோம். ஆகவே, நமது அன்றாட வாழ்விலும் துன்பத்தில் உழல்வோரைக் காணும்போது அவர்களுக்கு உதவியும், மீட்பும், பாதுகாப்பும்  அளிக்கவேண்டியது மிகவும் அவசியத்தேவை என்பதை உணர்வோம். இன்றைய நிலையில் உலகெங்கினும் மனிதர் பல்வேறு நிலைகளில், பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்படுகின்றனர். இவர்கள் மீட்கப்பட வேண்டும். இவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தேடி ஓட வேண்டாம். அவர்கள் நாம் வாழும் ஊர்களிலும் தெருக்களிலும் வீடுகளிலும் இருக்கின்றனர் என்பதை உணர்வோம். கடவுள் துன்புற்றுக்கொண்டிருந்த தாவீதின் உயிரை மனமிறங்கி மீட்டதுபோல, நாமும் துன்புறுவோரை இரக்கமனம் கொண்டு மீட்போம். அதற்கான அருளை இறைவனிடம் இந்நாளில் இறைஞ்சுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 ஜூலை 2025, 11:41