விவிலியத் தேடல் : திருப்பாடல் 70-1, இறுதிவரை இறைவனில் நிலைப்போம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'காக்கும் கனிவுமிகு கடவுள்!' என்ற தலைப்பில் 69-வது திருப்பாடலில், 29 முதல் 36 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து அதனை நிறைவுக்குக் கொணர்ந்தோம். இவ்வாரம் 70-வது திருப்பாடல் குறித்த நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்குவோம். "உதவிக்காக வேண்டல்" என்று தலைப்பிடப்பட்டுள்ள இத்திருப்பாடல் மொத்தம் 5 இறைவசனங்களைக் கொண்டுள்ள மிக மிகச் சிறிய பாடல். வாழ்வின் இருள்சூழ்ந்த வேளையில் துணிவுடன் கடவுளை நோக்கி எழுப்பும் இறைவேண்டலாக இத்திருப்பாடல் அமைந்துள்ளது. இத்திருப்பாடலின் 5 இறைவார்த்தைகளும் நாற்பதாவது திருப்பாடலில் உள்ள 13 முதல் 17 வரையுள்ள இறைவசனங்களை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கின்றது. மேலும் இது வாழ்வின் துயர் வேளைகளில் கடவுளை நோக்கி நம்பிக்கையுடன் இறைவேண்டல் எழுப்பத் தூண்டுகிறது. இங்கே தாவீது மூன்று நிலைகளில் கடவுளை நோக்கி தனது இறைவேண்டலை எழுப்புகின்றார். முதலாவது, கடவுள் தனக்கு உதவுவார் என்றும், இரண்டாவதாக, கடவுள் தனது எதிரிகளுக்கு வெட்கக்கேடுகளையும் இழிநிலைகளையும் கொண்டுவருவார் என்றும், மூன்றாவதாக, தனது நண்பர்களுக்கு மகிழ்வை வழங்குவார் என்றும் நம்பிக்கையுடன் கடவுளை நோக்கி குரலெழுப்புகிறார். இப்போது இத்திருப்பாடலின் 5 இறைவசனங்களையும் தியானித்து இன்றே இதனை நிறைவு செய்வோம். இப்போது அவ்வார்த்தைகளை இறை ஒளியில் வாசிப்போம். “கடவுளே! என்னை விடுவித்தருளும்; ஆண்டவரே! எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்! என் உயிரைப் பறிக்கத் தேடுவோர் அனைவரும் வெட்கமும் குழப்பமும் அடைவராக! எனக்குத் தீங்கு வருவதை விரும்புவோர் வெட்கத்தால் தலைகுனிந்து பின்னிட்டுத் திரும்புவராக! என்னைப் பார்த்து, ‛ஆ! ஆ!’ என்று ஏளனம் செய்வோர் பெருங்கலக்கமுற்றுப் பின்னிடுவராக! உம்மை நாடித் தேடும் அனைவரும் உம்மில் மகிழ்ந்து களிகூர்வராக! நீர் அருளும் மீட்பில் நாட்டம் கொள்வோர் ‛கடவுள் மாட்சி மிக்கவர்’ என்று எப்போதும் சொல்வர். நான் சிறுமையுற்றவன், ஏழை; கடவுளே! என்னிடம் விரைந்து வாரும்; நீரே எனக்குத் துணை; என்னை விடுவிப்பவர்; என் கடவுளே! காலந்தாழ்த்தாதேயும்" (வச 1-5).
ஜூனாய்டு என்ற ஞானியிடம் சீடன் ஒருவன் வந்து "உங்களிடம் கடவுள் ஞானம் என்கிற முத்து இருப்பதை உணர்கிறேன். மற்றவர்களும் அதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். அந்த முத்து எனக்குக் கொஞ்சம் தேவை. அதை எனக்கு விலைக்கோ அல்லது இலவசமாகவோ கொடுங்கள்'' என்று கேட்டான். ஞானி என்ன பதில் சொன்னார் தெரியுமா? ''சீடனே, உனக்கு நான் அதை விற்க முடியாது. ஏனென்றால் அதன் விலையை உன்னால் கொடுக்க முடியாது. இனாமாகக் கொடுக்கலாம் என்றால், அதை நீ மதிக்க மாட்டாய். அதனால் என்னைப் போலவே நீயும் கடவுள் என்ற அந்த ஆழ்கடலில் மூழ்கி எழுந்திரு. நீயும் ஒரு முத்து எடுத்து வரலாம்” என்றார். இந்த ஞானியைப் போன்றே தாவீது அரசர் சிறுவயதுமுதல் கடவுளின் அனுபவம் பெறத்தொடங்கியவர். வாழ்வில் வந்த அனைத்துப் பிரச்சனைகளையும், எதிர்ப்புகளையும், சவால்களையும் இறை அனுபவத்தால் வென்றவர் என்றால் அது மிகையாகாது. "ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்; தூயவராகிய அவரைப்பற்றிய உணர்வே மெய்யுணர்வு" (காண்க. நீமொ 9:10) என்று நீதிமொழிகள் நூலில் கூறப்பட்டுள்ள இறைவார்த்தைகளுக்கேற்ப இறையச்சமும், இறைநம்பிக்கையும் கொண்டு வாழ்ந்தவர் தாவீது. தனது எதிரிகளைப் பழிவாங்கியே தீர வேண்டும் என்ற எண்ணத்தை விடுத்து அவர்களை தனது உண்மை நீதி அரசராம் கடவுளின் திருவுளத்திற்கு விட்டுவிட்டவர். எதையும் நேர்பட பேசிப் பழகிவர். தன்மீது காழ்ப்புணர்வு கொண்டு தன்னைக் கொல்லத் தேடிய தனது மன்னர் சவுலை பழிவாங்காமல் அவரது உயிரைக் காப்பாற்றியவர். கடவுளால் திருப்பொழிவு செய்யப்பட்ட அவர்மீது கைவைக்கக் கூடாது என்பதில் உறுதியான மனம் கொண்டிருந்தவர். குறிப்பாக, தனது மகன் அப்சலோம் தனக்கு எதிராக வெகுண்டெழுந்து ஆட்சியைக் கைப்பற்ற முனைந்தபோதும் கூட அவனை அழித்துவிட மனமில்லாது தனது ஆட்களுடன் காட்டிற்குத் தப்பிச் சென்றவர். தான் ஒரு பேரரசர், தனக்கு எதையும் செய்ய அதிகாரமுண்டு என்று கர்வம் கொள்ளாது பத்சேபாவுடன் தான் புரிந்த பாவத்திற்காக மனமுடைந்து அழுது கண்ணீர் சிந்தியவர். இப்படியாக, தாவீது நேரிய உள்ளத்துடன் வாழ்ந்த ஒரே காரணத்தால் அவர் இறுதிவரை கடவுளின் விருப்பப்படி நீண்ட வாழ்வு வாழ்ந்தார். நாம் தியானிக்கும் இந்தத் திருப்பாடலிலும் “கடவுளே! என்னை விடுவித்தருளும்; ஆண்டவரே! எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்! என் உயிரைப் பறிக்கத் தேடுவோர் அனைவரும் வெட்கமும் குழப்பமும் அடைவராக! எனக்குத் தீங்கு வருவதை விரும்புவோர் வெட்கத்தால் தலைகுனிந்து பின்னிட்டுத் திரும்புவராக! என்னைப் பார்த்து, ‛ஆ! ஆ!’ என்று ஏளனம் செய்வோர் பெருங்கலக்கமுற்றுப் பின்னிடுவராக!" என்று கடவுளிடம் முறையிட்டு மன்றாடுவதைப் பார்க்கின்றோம். அதாவது, இன்றைய உலகின் தலைவர்களைப் போல எடுத்தோம் கவிழ்த்தோம் என்றல்லாமால் அவர்களை இறைபதம் ஒப்படைத்து அவர்காட்டும் வழியைப் பின்பற்றி செயல்படுகிறார் தாவீது. தனக்கு உகந்ததை செய்ய வேண்டும் என்பதை விடுத்து கடவுளுக்கு உகந்ததையே செய்யவேண்டும் என்று ஆசிக்கின்றார். இத்தகைய உன்னதமான ஒரு பண்பை உலகை ஆளும் நாடுகளின் தலைவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.
இரண்டாவதாக, "உம்மை நாடித் தேடும் அனைவரும் உம்மில் மகிழ்ந்து களிகூர்வராக! நீர் அருளும் மீட்பில் நாட்டம் கொள்வோர் ‛கடவுள் மாட்சி மிக்கவர்’ என்று எப்போதும் சொல்வர்" என்று உரைக்கின்றார் தாவீது. தனது எதிரிகளின் நிலைகுறித்து விளக்கும் தாவீது, நேரிய உள்ளத்துடன் அவரைத் தேடுவோர் எப்படிப்பட்ட மனநிலைக் கொண்டிருப்பர் என்றும் எடுத்துக்காட்டுகின்றார். இறுதியாக, "நான் சிறுமையுற்றவன், ஏழை; கடவுளே! என்னிடம் விரைந்து வாரும்; நீரே எனக்குத் துணை; என்னை விடுவிப்பவர்; என் கடவுளே! காலந்தாழ்த்தாதேயும்" என்று தன்னைப்பற்றிக் கூறி இந்தத் திருப்பாடலை நிறைவு செய்கின்றார். இங்கே நாம் ஒரு முக்கியமான விடயத்தைக் கவனிக்க வேண்டும். அதாவது, தான் ஒரு பேரரசர் என்ற நிலையிலிருந்து இரங்கி, தான் ஒரு சிறுமையுற்றவன், ஏழை, எளியவன் என்ற நிலைக்குத் தன்னையே தாழ்த்திக் கொள்கின்றார். இதுவும் தாவிதிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான பாடம்.
கடவுள்மீது ஆழமான பக்திகொண்டிருந்த ஏழை மனிதர் ஒருவர் இருந்தார். அவர் ஒருநாள் கடவுளிடம், “உங்களுக்காக எதையும் செய்யா நான் தயாராக இருக்கிறேன், நான் என்ன செய்யவேண்டுமென எனக்குக் கட்டளையிடுங்கள்” என்றார். அப்போது அவர்முன் தோன்றிய கடவுள், "உன் வேண்டுதலை நான் ஏற்றுக்கொண்டேன். நீர் போகுமிடமெல்லாம் இதனைச் சுமந்துகொண்டு போ" என்று கூறி மூட்டை ஒன்றை அவரிடம் கொடுத்தார். மேலும், "நான் சொல்லும்வரை இந்த மூட்டையை எக்காரணம் கொண்டும் பிரித்துப் பார்க்கக் கூடாது என்றும் அப்பக்தருக்குக் கட்டளையிட்டார். அந்த மூட்டை பார்ப்பதற்கு மிகவும் அழுக்கடைந்ததாகவும், அதிகம் பாரம் கொண்டதாகவும் தோன்றியது. ஆயினும், கடவுள்மீது தான் கொண்டிருந்த நம்பிக்கையாலும் அன்பினாலும் அதனை அவர் சுமந்துகொண்டு நடந்தார். இடையில் அவ்வப்போது சோர்வடைந்தார். அவர் அந்த மூட்டையைச் சுமந்து சென்றபோது, வழியில் அவரைப் பார்த்த அனைவரும் அவரைக் கேலியும், கிண்டலும், பரிகாசமும் செய்யத் தொடங்கினர். “இதெல்லாம் குருட்டு நம்பிக்கை என்றும், இந்த அழுக்கு மூட்டையை பேசாமல் தூக்கி எறிந்துவிட்டு போகவேண்டியதுதானே” என்றும் எள்ளிநகையாடினர். ஆனால் அந்த ஏழைப் பக்தர் அதுகுறித்தெல்லாம் சிறிதும் கவலைகொள்ளாமல், அதனை தூக்கிக்கொண்டு போனார். பல மாதங்கள் பயணித்தப் பிறகு ஓரிடத்தில் மிகவும் சோர்வாக வந்து அமர்ந்தார். அப்போது, அவர் முன் தோன்றிய கடவுள், “அன்பு மகனே, என் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, பல சிரமங்களுக்கு மத்தியில் இந்த மூட்டையை நீர் செல்லுமிடமெல்லாம் சுமந்து வந்திருக்கிறாய். நீ மட்டும் அதை சுமந்து வரவில்லை. மாறாக உன்னோடு சேர்ந்து நானும் அதனைச் சுமந்து வந்திருக்கிறேன். உன்னை நான் தன்னந்தனியாளாய் விட்டுவிடவில்லை. இப்போது அந்த மூட்டையைத் திறந்து பார்” என்றார். அதனைத் திறந்து பார்த்த அவருக்கு மிகப்பெரிய வியப்பொன்று காத்திருந்தது. ஆம்... அந்த மூட்டை முழுவதும் தங்கக் காசுகளும், வெள்ளியும் பொன்னும் நிறைந்திருந்தன. அப்போது கடவுள் அப்பக்தரைப் பார்த்து, “நீ, முணுமுணுக்காமல் மகிழ்ச்சியுடன் இந்த மூட்டையைச் சுமந்ததற்கான பரிசுதான் இது” என்று கூறிவிட்டு மறைந்தார்.
வாழ்க்கை என்பது, அழுக்கடைந்த ஒரு மூட்டை போன்றதுதான். அதனை கடவுள் நம் ஒவ்வருவருக்கும் கொடுத்து சுமக்கச் சொல்கின்றார். இறுதிவரை நம்பிக்கையோடு சுமப்பவர்கள் அதற்கான பரிசாகக் கடவுளின் என்றுமுள்ள கனிந்த பேரன்பையும், பரிவிரக்கத்தையும், வழிநடத்துதலையும், உடனிருப்பையும், உற்சாகத்தையும், உளம்நிறை மகிழ்ச்சியையும், அமைதியையும், நீடித்த வாழ்வையும் கொடையாகப் பெற்றுக்கொள்கின்றனர். மற்றவர்களோ, அவநம்பிக்கை எனும் தீயில் மாய்ந்து போகின்றனர். தாவீது அரசர் முதல் வகையைச் சேர்ந்தவர். வாழ்வின் இறுதிவரை இறைவன் கொடுத்த அத்தனை சவால் நிறைந்த மூட்டைகளையும் சலிக்காமல், முக்காமல் முனகாமல் சுமந்தவர். இதனை அவர் எவ்வித எதிர்பார்ப்புமின்றி செய்தார். இது அத்தனைக்கும் காரணம், தூய பவுலடியார் கூறியதுபோன்று, வாழ்வின் இறுதியில் கடவுள் தனக்குரிய வெற்றிவாகையை நிச்சயம் தருவார் என்பதன் அடிப்படையில்தான். இதன் காரணமாகவே, “ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்; மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்” (காண்க திபா 23:1-4) என்று பாடுகின்றார். ஆகவே, தாவீது அரசரைப் போன்று இறையச்சம் கொண்டவர்களாக நேரிய உள்ளமுடன் வாழ்ந்து நம் ஆண்டவராம் கடவுள் அருளும் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்வோம். இவ்வருளுக்காக இந்நாளில் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்