அன்பின் வாழ்வை நோக்கிய எதார்த்தத்தின் சான்றுகள் மறைக்கல்வியாளர்கள்
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு என்றுமுள்ள அன்பின் வாழ்வை நோக்கி நகரும் எதார்த்தத்திற்கு நீங்கள் சாட்சிகள் என்று உருகுவே மறைக்கல்வியாளர்களுக்கு அனுப்பிய அறிக்கையொன்றில் கூறியுள்ளார் Melo y Treinta y Tres மறைமாவட்ட ஆயரும், உருகுவே ஆயர் பேரவையின் மறைக்கல்வித்துறைத் தலைவருமான ஆயர் பாப்லோ ஜோர்டன்.
2025, ஆகஸ்ட் 24, அன்று சிறப்பிக்கப்படவிருக்கும் தேசிய மறைக்கல்வியாளர் தினம், மறைக்கல்வியாளர்களின் சந்திப்பு, இறைவேண்டல் மற்றும் புதுப்பித்தலுக்கான வாய்ப்பாக அமையும் என்றும், இவ்வாண்டு மறைக்கல்வியாளர் தினத்தின் கருப்பொருள் நம்பிக்கையின் மீது அடித்தளத்தை அமைத்தல் என்றும் கூறியதுடன், சமூகத்தில் நம்பிக்கையை தாங்கிச் செல்லும் அவர்களின் மதிப்பையும் வலியுறுத்தினார் ஆயர் ஜோர்டன்
நிலைவாழ்வை மையமாகக் கொண்டு, ஒருபோதும் ஏமாற்றம் தராத எதிர்நோக்கில் உறுதியான நம்பிக்கை வைத்தவர்களாக, மகிழ்ச்சியுடன் நற்செய்தியை அறிவிக்கும் மறைப்பணியாளர்களை உருவாக்குவதற்கான அர்ப்பணிப்பை உருகுவே மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார் ஆயர் ஜோர்டன்.
எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது என்ற திருத்தூதர் பவுலின் செய்தியால் தூண்டப்பட்டு, அசாதாரண சூழலிலும், நம்பிக்கையின் விதைகளை இதயங்களில் விதைப்பதற்கான அழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இவ்விழா கொண்டாடப்படுகிறது என்றும் ஆயர் ஜோர்டன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், யூபிலி ஆண்டு நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான ஒரு வாய்ப்பு; அது உறுதியான நங்கூரம் போல், விசுவாசிகளின் வாழ்க்கையை தாங்குகிறது என்று கூறிய முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளையும் தனது அறிக்கையில் மேற்கோள்காட்டியுள்ளார் ஆயர் ஜோர்டன்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்