வழிபாட்டுச் சுதந்திரம் குடிமக்களின் அரசியலமைப்பு உரிமை
மெரினா ராஜ் - வத்திக்கான்
மதம் மற்றும் வழிபாட்டு சுதந்திரம் என்பது குடிமக்களின் அரசியலமைப்பு உரிமை என்றும், இந்த உரிமை மீறப்பட்டு கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய அரசு தீர்க்கமாக தலையிட வேண்டிய கடமை உள்ளது என்றும் வலியுறுத்தியுள்ளது இந்தோனேசிய ஆயர் பேரவையின் அறிக்கை.
ஆகஸ்டு 7, வியாழனன்று இந்தோனேசிய ஆயர் பேரவையானது கடந்த மாதங்களில் இந்தோனேசியாவில் கிறிஸ்தவர்களுக்கு ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களை நினைவில் கொண்டு மத்திய அரசிற்கு அனுப்பியுள்ள வேண்டுகோள் அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளது.
கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைச் செயல்கள் குற்றச் செயல்களாகக் கருதப்படும்போது, வன்முறையைக் கடைபிடிப்பவர்களுக்கு எதிராக, நாம் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குறிப்பாக இந்தோனேசியாவில் செபம் மற்றும் வழிபாட்டில் ஈடுபடும் மக்களுக்கு ஊறு விளைவிக்கும் வகையில், கொடுமையான செயல்களைச் செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர் ஆயர்கள்.
கடந்த மாதங்களில் இந்தோனேசிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் திருஅவைச் சமூகங்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மீது பல "தாக்குதல்கள்" நடைபெற்றதைத் தொடர்ந்து, இந்தோனேசிய ஆயர்கள் மாநாடானது ஜகார்த்தாவில் உள்ள மத்திய அரசாங்கத்திற்கு வேண்டுகோள் ஒன்று அனுப்பியுள்ளது.
கத்தோலிக்கத் தலத்திருஅவை ஆலயங்களைக் கட்டுவதை எதிர்ப்பவர்களை மட்டுமல்லாது, பிரிவினை சபை கிறிஸ்தவ பள்ளி மீதான தாக்குதல் மற்றும் அண்மையில் பல கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டதையும் நினைவுகூர்ந்துள்ள ஆயர்கள், "இந்தோனேசிய குடிமக்கள், செபம் மற்றும் வழிபாட்டிற்காகப் பயன்படுத்தும் இடங்களை மறுத்தல், தடுத்தல் அல்லது அழித்தல் போன்ற எந்தவொரு குற்றவியல், வன்முறைச் செயலையும் தடுத்து அரசு அதனை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மக்களிடையே சகிப்புத்தன்மையை நிலைநிறுத்துதல், செபம் மற்றும் வழிபாட்டுத் தலங்களானது அமைதி, பாதுகாப்பு மற்றும் மாண்பிற்கான இடங்களாக இருப்பதை உறுதி செய்தல் போன்றவற்றிற்கு உறுதியளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஆயர்கள், மதத் தலைவர்கள், "தங்கள் மக்கள் பிரிவினைவாதத் தூண்டுதல்களால் தூண்டப்படாமல், அமைதியான, இணக்கமான மற்றும் சகிப்புத்தன்மையுடன் தங்கள் நம்பிக்கையை வாழ வலியுறுத்த வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளனர்.
ஆக்கிரமிப்பு, தடை/மறுப்பு மற்றும் செபம் மற்றும் வழிபாட்டை சீர்குலைத்தல் போன்ற பல்வேறு சம்பவங்கள் சகிப்புத்தன்மை மற்றும் அமைதியான சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கு கடுமையான அச்சுறுத்தலாகும் என்று சுட்டிக்காட்டியுள்ள ஆயர்கள், எந்தவொரு வகையான மிரட்டல், வன்முறை அல்லது மத நடவடிக்கைகளை ஒருதலைப்பட்சமாக கட்டுப்படுத்துவது சட்டத்தை மீறுவதாகவும், ஒரே நாட்டின் குடிமக்களாக ஒன்றாக வாழ்வதன் அடிப்படை மதிப்புகளை அழிப்பதாகவும் அமைகிறது" என்றும் தெரிவித்துள்ளனர். (Fides)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்