தேடுதல்

அரேபிய அன்னை மரியா அரேபிய அன்னை மரியா  

சிறிய பேராலயமாக உயர்த்தப்பட்ட அரேபியா அன்னை மரியா ஆலயம்

வளைகுடாவில் கத்தோலிக்க திருஅவையின் உயிர்ச்சக்தி மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சியை பிரதிபலிக்கிறது சிறிய பேராலயமாக உயர்த்தப்பட்ட அரேபியா அன்னை மரியா ஆலயம். - ஆயர் ஃபெரார்டி.

மெரினா ராஜ் – வத்திக்கான்

அஹ்மதியில் உள்ள அரேபியா அன்னையின் (OLA) ஆலயத்தை ஒரு சிறிய பேராலயமாக, திருஅவை உயர்த்திய செய்தி மகிழ்வினை அளிக்கின்றது என்றும், இந்த வரலாற்று அங்கீகாரம் அஹ்மதி மறைமாவட்டத்திற்கு ஒரு பெரிய மரியாதை மட்டுமல்லாது, அரேபிய தீவில் வாழும் கத்தோலிக்க மக்களின் நம்பிக்கையின் ஆழமான உறுதிப்படுத்தல் என்றும் கூறினார் ஆயர் ஆல்டோ பெரார்டி, O.SS.T.

கத்தோலிக்க மக்கள் பல சவால்களைச் சந்தித்துக் கொண்டு இருந்தபோதிலும், தலத்திருஅவைகள் மற்றும் சமூகங்களை உயிர்ப்பிக்கின்ற ஆழமான அன்னை மரியின் பக்தியை  இந்நிகழ்வானது எடுத்துக்காட்டுகிறது என்றும் எடுத்துரைத்தார் வடக்கு அரேபியாவின் அப்போஸ்தலிக் ஆயர் நிர்வாகியான ஆயர் ஆல்டோ பெரார்டி, O.SS.T.

திருவழிபாடு மற்றும் அருளடையாளத்திற்கான திருப்பீடத்துறையால் அறிவிக்கப்பட்ட திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் ஆணையானது இந்த ஆலயத்தை அரேபியாவின் நமது அன்னை மரியா சிறிய பேராலயம் என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட அனுமதி அளித்து இருக்கின்றது என்றும் தெரிவித்தார் ஆயர் ஃபெரார்டி.

இந்த நிகழ்வானது தனது ஆயர்  பணியில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது என்றும், வளைகுடாவில் கத்தோலிக்க திருஅவையின் உயிர்ச்சக்தி மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சியை பிரதிபலிக்கிறது என்றும் எடுத்துரைத்தார் ஆயர் ஃபெரார்டி.

குவைத் மற்றும் அரேபிய தீபகற்பம் முழுவதும் உள்ள கத்தோலிக்க விசுவாசிகளின் ஆன்மிக வாழ்க்கையில் திருஅவையின் தனித்துவமான மற்றும் முக்கிய இடத்தை ஆரம்பத்தில் அங்கீகரித்த ஆயர் பெரார்டி சமர்ப்பித்த முறையான மனுவைத் தொடர்ந்து இந்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

மைனர் பசிலிக்கா அதாவது சிறிய பேராலயம் என்ற பட்டமானது, திருவழிபாட்டு முறை மற்றும் மேய்ப்புப்பணி வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்களுக்கு திருத்தந்தையால் வழங்கப்படுகிறது. ஆலயத்தின் வரலாறு, ஆன்மிக மற்றும் கட்டிடக்கலை தகுதி போன்றவற்றினால் சிறப்புற்று விளங்கும் ஆலயங்கள் உயர் அங்கீகாரம் பெறுகின்றன. இது உரோம் திருஅவை மற்றும் திருத்தந்தையுடன் ஒரு சிறப்பு பிணைப்பையும் ஏற்படுத்துகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 ஆகஸ்ட் 2025, 11:09