தடம் தந்த தகைமை - உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது உங்கள் உறவு தொடரும். இல்லையென்றால் “இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்” என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு போங்கள். அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும், (மத் 18:15&17) என்றார் இயேசு.
தவறுதல் மனித இயல்பு. தவறுகளைத் திருத்துதல் மாமனித இயல்பு. யார் பிறரது தவறுகளைத் தவறெனத் தெரிந்தும், அதனால் பாதிப்புகள் அதிகமெனப் புரிந்தும் அதனைக் கண்டுகொள்ளவில்லையோ அவர் பெருந்தவறு இழைத்தவராவார். இன்று உலகம் இப்பெருந்தவறில்தான் புரள்கிறது. தவறியவரைத் திருத்த இயேசு காட்டும் வழி ஓர் உளவியல் அணுகுமுறை.
பிறரைக் காயப்படுத்தாமல் - கருணையோடும், மனம் நோகச் செய்யாமல் - மாண்போடும், பகைத்து ஒதுக்காமல் - பாச உணர்வோடும் அணுகுதல் அவரது ஆளுமைக்கு நாம் வழங்கும் மரியாதை. இந்தப் படிநிலை அணுகுமுறை இச்சமூகத்துள் பஞ்சமாகிப் போனது. இதில் கொஞ்சம் கவனம் செலுத்தலாமே! தன்னைச் சரிசெய்வது உலகையே சரிசெய்வதாகும்.
இறைவா! பிறரின் பெருந்தவறைத் திருத்த முயன்றால் என் பெயர் கெடும் என ஒதுங்காமல் செயல்படும் மனவுறுதி தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்