தேடுதல்

ஆற்றுப்படுத்தும் கரங்கள் ஆற்றுப்படுத்தும் கரங்கள்   (©Africa Studio - stock.adobe.com)

தடம் தந்த தகைமை - கை உங்களை பாவத்தில் விழச் செய்தால்

கடவுள் நமக்குக் கைகளைத் தந்திருப்பது கையறுநிலையில் வாடுவோர்க்குக் கைம்மாறு கருதாமல் கொடுத்து உதவிடவே. அக்கைகளால் அடுத்தவரைத் தாக்குவதும், அநாகரீகச் செயல்களைச் செய்வதும், அடுத்தவர்க்குரியதை அபகரிப்பதும் அநியாயமானவை.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குள் தள்ளப்படுவதைவிட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது, (மாற் 9:43) என்கிறார் இயேசு.

கடவுள் நமக்கு உயிரையும் உடலையும் உணர்வையும் கொடையாகவே தந்துள்ளார். உயிரை இறுதியில் அவரிடமே சேர்க்கவும், உடலை மதித்து உறுதியூட்டவும், உணர்வைக் கண்ணியமாய் நெறிபடுத்தவும் நமக்குக் கடமை உண்டு. அதோடு உடலின் உறுப்புகள் ஒவ்வொன்றையும் பொறுப்புடன் கையாளும் உரிமையும் உண்டு. இவற்றை விடுத்து உறுப்புகள் ஒவ்வொன்றையும் விருப்பத்திற்கேற்பச் செயல்பட விடுதல் நம் பொறுப்பற்றத்தனத்தின் பேதைமை.

கடவுள் நமக்குக் கைகளைத் தந்திருப்பது கையறுநிலையில் வாடுவோர்க்குக் கைம்மாறு கருதாமல் கொடுத்து உதவிடவே. அக்கைகளால் அடுத்தவரைத் தாக்குவதும், அநாகரீகச் செயல்களைச் செய்வதும், அடுத்தவர்க்குரியதை அபகரிப்பதும் அநியாயமானவை. அவை ஆண்டவர் பார்வைக்கு அருவருப்பானவை, தண்டனைக்குரியவை. கடவுளைத் தொழும் நம் கைகளைவிடக் கடைநிலையினரைத் தொட்டுத் தூக்கும் கைகளைப் பார்த்தே கடவுள் களிகூர்வார். நம் கைகள் நீள்க, நன்மை செய்ய மட்டும்.

இறைவா! வெறுமையான கைகளோடு வந்த நான் வெறுமையான கைகளோடுதான் திரும்புவேன். அதுவரை வெறுப்பும் வேறுபாடும் காட்டாமல் வாழ வழிகாட்டும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 ஆகஸ்ட் 2025, 11:08