தடம் தந்த தகைமை - உங்கள் பெயர்கள் விண்ணகத்தில்…
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பது பற்றி மகிழ வேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள், (லூக் 10:20) என தன் சீடர்களிடம் கூறினார் இயேசு.
வானளாவப் போற்றுவதும், புழுதி வாரித் தூற்றுவதும் உலகின் இயல்பு. “என்னை இவ்வாறெல்லாம் போற்றிப் பாராட்டிப் புகழ்ந்தனர்” என பெருமைப்படுவதும், “இப்படியெல்லாம் அவமானப்படுத்தி நோகடித்து இகழ்ந்தனர்” என இடிந்து போவதும் இயேசுவின் சீடருக்கு அழகல்ல. பணிக்கப்பட்டப் பணியை பாசாங்கற்ற மனதோடும் பணிந்த உணர்வோடும் செய்து முடிப்பதே முதிர்ச்சி பெற்ற சீடத்துவம். அதுவே சீடத்துவ மகத்துவம்.
இதோடு இன்னொரு ஆபத்தும் சீடர்கள் மனதுள் முகிழ்வதுண்டு. நான் இதை, இப்படி, இவ்வளவு பெரிதாகச் செய்தேன் எனத் தம்பட்டம் தட்டித் தன்னை உயர்த்தி நிற்கும் மனநிலையே அது. நல்லவை எது செய்தாலும் அது இறைமாட்சியின் அடையாளம். இவற்றைச் செய்வதற்கான வாய்ப்பும், வலிமையும் வழங்கியது கடவுளே. அதைப் பெருந்தன்மைமிக்க பணிவோடு செய்கையில் நம் பெயர் விண்ணிலே. எவரது புகழையும் வைத்து அவரது தகுதியை அளந்திட முடியாது.
இறைவா! புகழினும் இகழினும் உம் பணியே என் வாழ்வெனத் தொடர்ந்து பயணிக்கும் உறுதியான மனம் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்