தேடுதல்

அறுவடைக்குத் தயாராக இருக்கும் கோதுமை மணிகள் அறுவடைக்குத் தயாராக இருக்கும் கோதுமை மணிகள் 

தடம் தந்த தகைமை - அறுவடை மிகுதி; வேலையாட்களோ குறைவு

இயேசு எனும் ஒளியால் ஈர்க்கப்பட்ட மக்கள் ஒருங்கிணைக்கப் படுவதும், தொடர்ந்து வழிநடத்தப்படுவதும் கட்டாயத் தேவை. அவர்களைப் புரிந்து, கரிசனையோடு அணுகி, இறையாட்சி நெறியில் வாழச் செய்யத் தன்னர்ப்பணமிக்க வழிகாட்டிகள் தேவை.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

அறுவடை மிகுதி; வேலையாட்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள், (மத் 9:37&38) எனக் கேட்டார் இயேசு.

இயேசு இருள் நடுவே ஒளிர்ந்த ஒளி. கல்வியின்மை, வேலையின்மை, விழிப்பின்மை எனும் இருள் தீமைகள் யூத சமூகச் சாமானியரை ஒருசேரக் கவ்விப் பிடித்திருந்தன. அவர்கள் அறியாமையிலும், மூடத்தனங்களிலும் முடங்கிக் கிடக்க வேண்டுமென்பதே ஆள்வோரின் ஆவலாக இருந்தது. ஆனால் அதே சமூகத்தில் பிறந்து வளர்ந்த இயேசுவின் வாழ்வும், போதனைகளும், பணிகளும் அச்சமூகத்தின் இருள் கிழித்த ஒளிக்கீற்றுகளாயின. அதுவரை அமிழ்த்தப்பட்டிருந்த பாமரர்கள் விழிப்பு எனும் ஒளி பெறலாயினர். இயேசு எனும் ஒளியால் ஈர்க்கப்பட்ட மக்கள் ஒருங்கிணைக்கப் படுவதும், தொடர்ந்து வழிநடத்தப்படுவதும் கட்டாயத் தேவை. அவர்களைப் புரிந்து, கரிசனையோடு அணுகி, இறையாட்சி நெறியில் வாழச் செய்யத் தன்னர்ப்பணமிக்க வழிகாட்டிகள் தேவை. அத்தகு வழிகாட்டிகள் வெறும் வார்த்தைகளால் அன்றி தங்கள் வாழ்வால் வழிகாட்டக் கடன்பட்டவர்கள். வாழ்வின் வழிகாட்டிகள் அன்று தேவைப்பட்டதுபோல் என்றும் தேவைப்படுகின்றனர்.

இறைவா! மக்களை ஒருங்கிணைத்து வழிநடத்துமுன் நான் என்னை உம்மில் ஒன்றிணைத்து உம் வழி நடக்க வரம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 ஆகஸ்ட் 2025, 14:59