தேடுதல்

பெல்சாட்சரின் விருந்து பெல்சாட்சரின் விருந்து  

தடம் தந்த தகைமை : பெல்சாட்சரின் விருந்து

அவர்கள் திராட்சை மது குடித்துக்கொண்டே பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, மரம், கல் ஆகியவற்றாலான தங்கள் தெய்வங்களைப் புகழ்ந்தார்கள்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பெல்சாட்சர் என்ற அரசன் உயர்குடி மக்கள் ஆயிரம் பேருக்குப் பெரியதொரு விருந்து வைத்தான்; அந்த ஆயிரம் பேருடன் அவனும் திராட்சை மது குடித்தான். அவ்வாறு குடித்துக்கொண்டிருந்தபொழுது, அரசன் தானும் தன் மனைவியரும் வைப்பாட்டிகளும் குடிப்பதற்கென்று, தன் தந்தையாகிய நெபுகத்னேசர் எருசலேம் திருக்கோவிலிருந்து கொண்டு வந்திருந்த பொன், வெள்ளிக் கிண்ணங்களைக் கொண்டுவரச் சொன்னான். அதன்படி, எருசலேமிலிருந்த கடவுளின் கோவிலிருந்து கொண்டுவந்த பொன் கிண்ணங்களை எடுத்து வந்தார்கள்; அரசனும் அவனுடைய உயர்குடி மக்களும், அவனுடைய மனைவியரும், வைப்பாட்டியரும் அந்தக் கிண்ணங்களிலிருந்து குடித்தார்கள். அவர்கள் திராட்சை மது குடித்துக்கொண்டே பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, மரம், கல் ஆகியவற்றாலான தங்கள் தெய்வங்களைப் புகழ்ந்தார்கள்.

திடீரென்று ஒரு மனிதனுடைய கைவிரல்கள் தோன்றி அரசனது அரண்மனை உட்சுவரில் விளக்குத் தூணுக்கு எதிரே எழுதத் தொடங்கின. அவ்வாறு எழுதும்போது அரசன் அந்த உள்ளங்கையைப் பார்த்தான். அதைக்கண்டு அரசன் முகம் கறுத்து, நெஞ்சம் கலங்கி, குலைநடுங்கி, தொடை நடுக்கமுற்றான். உடனே அரசன் மாயவித்தைக் காரரையும் கல்தேயரையும் சோதிடரையும் கூட்டிவரும்வடி உரக்கக் கத்தினான். அரசன் பாபிலோனிய ஞானிகளை நோக்கி, “இந்தச் சொற்களைப் படித்து, இவற்றின் உட்பொருளை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ அவனுக்கு அரச உடை உடுத்தி கழுத்தில் பொன் மாலையும் அணிவித்து என் அரசின் மூன்றாம் நிலையில் அமர்த்துவேன்” என்றான். பிறகு அரசனின் ஞானிகள் எல்லாரும் உள்ளே சென்றனர்; ஆனால் அந்த சொற்களைப் படிக்கவோ அவற்றின் உட்பொருளை அரசனுக்கு விளக்கவோ அவர்களால் இயலவில்லை. அதைக் கண்ட பெல்சாட்சர் அரசன் மிகவும் மனக்கலக்க முற்றான்; அவனது முகம் வெளிறியது. அவனுடைய உயர்குடி மக்களும் திகைத்து நின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 ஆகஸ்ட் 2025, 08:17