தடம் தந்த தகைமை : அரசர் பெல்சாட்சரின் முன்னிலையில் தானியேல்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
அரசனும் உயர்குடி மக்களும் எழுப்பிய கூச்சலைக் கேட்டு, அரசி விருந்துக்கூடத்திற்குள் விரைந்து வந்து, “அரசரே! நீர் நீடூழி வாழ்க! நீர் வீணாக அச்சமுற்று, முகம் வெளிறவேண்டாம். புனிதமிகு கடவுள் ஆவி நிறைந்த மனிதன் ஒருவன் உமது அரசில் இருக்கிறான். உம் தந்தையின் ஆட்சிக் காலத்தில் அறிவொளியும் நுண்ணறிவும் தெய்வங்களுக்கொத்த ஞானமும் அவனிடம் திகழ்ந்தது தெரிய வந்தது. எனவே உம் தந்தையாகிய நெபுகத்னேசர் அரசர் அவனை மந்திரவாதிகளுக்கும் மாயவித்தைக்காரருக்கும் கல்தேயருக்கும் சோதிடருக்கும் தலைவனாக்கினார். அந்தத் தானியேல் வியத்தகு விவேகமும் அறிவும் உடையவன்; கனவுகளுக்கு விளக்கம் கூறும் அறிவாற்றல் படைத்தவன்; விடுகதைகளுக்கு விடைகூறும் ஆற்றல் உடையவன்; சிக்கல்களைத் தீர்க்கும் திறமை வாய்ந்தவன்; அவனுக்கு அரசர் ‘பெல்தெசாச்சார்’ என்று பெயரிட்டுள்ளார். அவன் உடனே இங்கு அழைக்கப்படட்டும்; அவன் விளக்கம் கூறுவான்” என்றாள்.
அவ்வாறே அரசன் முன்னிலைக்குத் தானியேல் அழைத்து வரப்பட்டார். அரசன் அவரைப்பார்த்து, “என் தந்தையாகிய அரசன் யூதாவிலிருந்து சிறைப் பிடித்துவந்தவர்களுள் ஒருவனாகிய தானியேல் என்பவன் நீதானே? உன்னிடத்தில் புனிதமிகு கடவுளின் ஆவியும் அறிவொளியும் நுண்ணறிவும் சிறந்த ஞானமும் உண்டென உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். இப்பொழுது இந்தச் சொற்களைப் படித்து இவற்றின் உட்பொருளை எனக்கு விளக்கிக் கூறுமாறு, இந்த ஞானிகளும் மாயவித்தைக்காரரும் என்முன் அழைத்து வரப்பட்டனர். ஆனால், அவர்களால் இந்தச் சொற்களின் உட்பொருளை விளக்கிக்கூற முடியவில்லை. விளக்கங்கள் கூறவும் சிக்கல்களைத் தீர்க்கவும் உன்னால் முடியும் எனக் கேள்விப்படுகிறேன். இப்பொழுது நீ இந்தச் சொற்களைப் படித்து இவற்றின் உட்பொருளை விளக்கினால், உனக்கு அரச உடைஉடுத்தி, கழுத்தில் பொன்மாலை அணிவித்து, என் அரசில் மூன்றாம் நிலையில் உன்னை அமர்த்துவேன்” என்றான்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்