தடம் தந்த தகைமை : என்னை நோக்கி ஆண்டவரே, ஆண்டவரே!
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
அந்நாளில் பலர் என்னை நோக்கி, “என்னை நோக்கி, ஆண்டவரே, ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்." (மத் 7:21) என்கிறார் இயேசு.
எல்லாவற்றிலும் கடவுள் பெயரைப் பயன்படுத்தி சக மனிதரைக் கபளீகரம் செய்யும் வித்தை வீதியெங்கும் உலா வருகின்றது. கடவுளின் பெயரைச் சொன்னால் நம்பி விடுவர் என்ற தந்திர மனதோடு வாழும் போலிக்கூட்டம் அன்றும் இன்றும் எங்குமுள்ளது. அதுமட்டுமன்றி, பக்திமான் என்றும் நீதிமான் என்றும் காட்டி, மக்கள்முன் கடவுளைத் துதித்துப் பாடித் தங்கள் கஜானாவை நிரப்புவோர் மக்களுக்கு மட்டுமல்ல கடவுளுக்கும் எதிரிகள்.
இயேசு உருவாக்கிய இயக்கம் செயல்வடிவம் கொண்டது. வெறும் ஆரவார செபங்கள், பக்தி கமழும் பஜனைகள், பூசாரித்தனச் சடங்குகள், மனம்போல் மறைவிளக்கங்கள் இதில் கிடையாது. பல யுக்திகளில் காணிக்கைகள் பெற்று வான் தொடும் கோபுரங்களைக் கட்ட அவர் கேட்கவில்லை. விழிப்பு, உபவாசம், பகல் நேர செபம் மற்றும் நோன்புகளோடு மக்கள் அன்றாட வேலைக்குப் போகாமல் தன்னை நோக்கிக் கதறிக் கதறிக் கூவி அழைக்க வேண்டுமெனக் காத்திருக்கும் கடவுளும் அவரல்லர். இயேசு சுட்டிய இறையாட்சிக்கு உகந்த செயல்களே சிறந்த செபம். சொந்த நலனுக்காகச் செய்யப்படும் செபம் மலிவானது, திருட்டுக்குச் சமமானது. கூவிக் கூப்பாடு போட்டு செபிப்போரைப் பார்க்கும்போது என்னுள் எழும் எண்ணங்கள் என்னென்ன?
இறைவா! நீர் மதிப்பீடுகளின் கடவுள். இந்த உண்மையை மனதில் தேக்கி உம் திட்டங்களுக்கு உயிரூட்டும் வலிமை தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்