தேடுதல்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான்   (ANSA)

திருத்தந்தையின் செபங்களுக்கு நன்றி தெரிவித்த பீகார் ஆயர்

பக்ஸர் மறைமாவட்டத்தில் உள்ள சமூகப் பணி மையங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உணவு பொருட்கள், மருந்துகள் என பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன - ஆயர் ஜேம்ஸ் சேகர்.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான்,  நேபாளம்,  இந்தியா ஆகியநாடுகளின் மக்களுக்கு இறைவேண்டல் செய்வதாகவும், பாதிக்கப்பட்ட மக்களோடு தான் ஒன்றித்திருப்பதாகவும் தெரிவித்த திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் வார்த்தைகள்  தங்களுக்கு நலமளிக்கும் மருந்து போல இருந்ததாக பக்ஸர் ஆயர் ஜேம்ஸ் சேகர்  தெரிவித்துள்ளார்.

அண்மைய நாள்களில் ஏற்பட்ட இந்த இயற்கை பேரழிவு  கிராமங்கள் ,நகரங்கள் என முழுவதையும் அழித்துவிட்டது எனவும்,   தண்ணீர் மெதுவாக குறைந்து வருவதால், வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள், அத்தண்ணீரில் மூழ்கிய விவசாய நிலங்கள், கடந்து செல்ல முடியாத சாலைகள் என   சேத மதிப்பீடுகள் தொடங்கப்பட்டுள்ளன எனவும்  கூறியுள்ளார் ஆயர் சேகர் .

வடகிழக்கு இந்தியாவின்  பீகார் மாநிலத்தில் உள்ள பக்ஸர் மறைமாவட்டத்தின்  சமூகப் பணி மையங்கள் இவ்வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உணவு பொருட்கள், மருந்துகள்  என பல்வேறு உதவிகளை வழங்கி  வருவதாகவும் மறைமாவட்டத்தின் ஆயர் ஜேம்ஸ் சேகர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திருத்தந்தையின் ஆசிர்வாதங்களும் , இறைவேண்டல்களும்  தங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், இந்த ஆதரவிற்கு எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்பதாகவும் ஆயர் சேகர் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட  பக்ஸர்  மறைமாவட்டத்தைத்  தொடர்ந்து , காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளத்தில் 60 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும், 80 பேர்  காணாமல் போயுள்ளதாகவும், அவ்வாறு   காணாமல் போனவர்களில் பலர் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர் என்றும்  சில பகுதிகளில் மீட்பு பணியாளர்கள் உடனடியாகச் செயல்பட்டு ஏறக்குறைய  300 பேரை பாதுகாப்பாகக் கொண்டு வந்தனர் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் பாகிஸ்தானில் நிலைமை இன்னும் கடுமையாக உள்ளது என்றும், தற்காலிக கணக்கின் படி  வெள்ளத்தில் குறைந்தது 164 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், மலைப்பாங்கான மான்சேரா மாவட்டத்தில் உள்ள சிறான் பள்ளத்தாக்கில், நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட அந்த பகுதியிலேயே 1,300 பேருக்கு மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேக வெடிப்பு  என்று அழைக்கப்படும் இத்தகைய மிகுந்த மழைப்பொழிவுகள் இந்தியா மற்றும் வட பாகிஸ்தானின் இமயமலைப் பகுதிகளில் அதிகரித்து வருவதோடு , திடீர் வெள்ளம், நிலச்சரிவு போன்றவை ஆயிரக்கணக்கான மலைப்பகுதி மக்களை பாதிக்கின்றன என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .

அண்மைய ஆண்டுகளில் இவ்வாறான இயற்கைப் பேரிடர்கள்  அதிகரித்திருப்பதற்குக் காலநிலை மாற்றம் ஒரு காரணமாக இருந்தாலும்  இம்மலைப்பகுதிகளில் அதிகரித்து வரும் தீவிரமான மற்றும் திட்டமிடப்படாத நகர்ப்புற வளர்ச்சியுமே காரணம்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 ஆகஸ்ட் 2025, 14:03