இறைஊழியர் Alcide De Gasperi அவர்களின் நினைவுத் திருப்பலி
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
ஆகஸ்ட் 19 செவ்வாயன்று இத்தாலியின் முன்னாள் பிரதமர் இறை ஊழியர் Alcide De Gasperi அவர்களின் 71 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு உரோமை நகரின் வெரோனாவில் உள்ள புனித இலாரன்ஸ் ஆலயத்தில் கர்தினால் பால்தோ ரெய்னா தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
அனைவரின் வாழ்விலும் இறைவனின் முகமும் அன்பும் வெளிப்படுமாறு செய்வீர் என்று தனது மறையுரையில் கூறிய கர்தினால் ரெய்னா அவர்கள் இறை ஊழியர் Alcide De Gasperi அவர்களின் சாட்சிய வாழ்வை உலகினருக்கு பரப்புவதில் அர்ப்பணிப்புடன் செயல்படுவோருக்கு தனது நன்றியையும் தெரிவித்தார் .
திருப்பலியில் வாசிக்கப்பட்ட இறைவாக்கினர் கிதியோனைப் போலவே இறைஊழியர் Alcide De Gasperi அவர்களும் போரின் சிதைவுகளுக்குப் பிறகு தனது தாழ்மையான இறைவேண்டலின் வழியாக இறைவனில் நம்பிக்கை வைத்து, இத்தாலியின் மறுக்கட்டமைப்பில் ஈடுபட்டார் என்று கர்தினால் ரெய்னா உரைத்தார்.
சிறைத் தண்டனை, வறுமை, அவமானம், துரோகம் போன்ற கடின அனுபவங்களைச் சந்தித்தும், தே காஸ்பெரி கிறிஸ்தவ நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு நாட்டை வழிநடத்தினார் என்றும், அவரது அரசியல் வலிமை உலகியலான உத்திகளில் மட்டுமல்ல, ஆழ்ந்த ஆன்மீகத்திலிருந்தும் வந்தது என்றும் வலியுறுத்தினார்.
கிறிஸ்தவ நம்பிக்கை தனிப்பட்ட வாழ்க்கையிலேயே அல்லாமல் சமூக, அரசியல் முடிவுகளிலும் பிரதிபலிக்க வேண்டும் என்ற சிந்தனையை, அப்போஸ்தலிக்க நூலகத்தில் பணிபுரிந்த இருண்ட காலத்தில் தே காஸ்பெரி வளர்த்துக் கொண்டதாக கர்தினால் எடுத்துரைத்தார்.
சமூக நீதி, சுதந்திரம், பொதுநலன் ஆகியவை இறைவார்த்தையின் அடிப்படையில் சாத்தியமாகும் என்றுணர்ந்த இறைஊழியர் அவர்களின் கண்ணோட்டமே இன்று ஐரோப்பாவுக்கும், உலகிற்கும் மிகவும் தேவையானது என்றும் சுட்டிக்காட்டினார் கர்தினால் ரெய்னா.
பொறாமை, பேராசை, தற்காலிக இலாபங்களில் மட்டுமே சிக்கிக் கொண்டால் மனித மாண்பும் ஆன்மாவும் இழக்கப்படும் ஆபத்து உள்ளது என எச்சரித்த கர்தினால் ரெய்னா அவர்கள்,இறைஊழியர் தே காஸ்பெரி, கனவு கண்டது போல, ஐரோப்பா மீண்டும் தனது கிறிஸ்தவ வேர்களையும் மனிதாபிமான பாரம்பரியத்தையும் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இறுதியாக, இன்றைய சூழ்நிலையில் துணிவுடன் சவால்களை எதிர்கொண்டு, இறையாட்சி விதையை விதைக்கும் அல்சிதே தே காஸ்பெரி போன்ற ஆண்களையும் பெண்களையும் இறைவன் நமக்கு அருளட்டும் என்று கர்தினால் பால்தோ ரெய்னா தனது மறையுரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்