இளைஞர்களே திருஅவையின் நம்பிக்கையாக உள்ளனர்
மெரினா ராஜ் – வத்திக்கான்
சமூகத்திலும் திரு அவையிலும் மாற்றத்தைக் கொண்டு வர இளைஞர்களால் தான் முடியும் என்றும், இளைஞர்களே திருஅவையின் நம்பிக்கையாக உள்ளனர். இளைஞர் இயேசு எவ்வாறு தான் வாழ்ந்த சமூகத்தில் நிலவிய அநீதிகளை கவனித்து செயலாற்றினாரோ, அதேபோல இன்றைய இளைஞர்களும் தங்களை சுற்றி நிகழும் சமூக அநீதிகளை கவனித்து அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார் செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் A. நீதிநாதன்.
ஆகஸ்டு 17, ஞாயிறன்று "இயேசுவின் இறையாட்சியும், எதிர்நோக்கும், இளைஞர் பங்களிப்பும்" என்ற தலைப்பில், செங்கல்பட்டு மறைமாவட்ட இளைஞர் பணிக்குழு முன்னெடுத்த மாபெரும் யூபிலி 2025 கொண்டாட்டத் திருப்பலிக்குத் தலைமையேற்று மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் A.நீதிநாதன்
ஆகஸ்டு 17, ஞாயிற்றுக்கிழமை அன்று பல்லாவரம் புனித செபஸ்தியார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வானது இளைஞர் பணிக்குழு செயலர் அருள்பணி. லாரன்ஸ் அவர்கள் வழிகாட்டுதலில் செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் A. நீதிநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தொடக்கமாக யூபிலி சிலுவை ஏந்தி ஆயர் அவர்கள் முன்னாள் செல்ல ஆயரோடு அருட்தந்தையர்களும் சிறப்பு விருந்தினர்களும் அரங்கிற்குள் சென்று இளைஞர் யூபிலி கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்தனர். ஆயர் அவர்கள் தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் கொடியினை ஏற்றினார்.
தொடக்க அமர்வில் செங்கல்பட்டு மறைமாவட்டத்தைச் சேர்ந்த செல்வி. கேத்தரின் சரண்யா IAS அவர்கள் தனது வாழ்த்துரையில் "இளைஞர் இயேசு எவ்வாறு ஒரு புரட்சியாளராக, சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடினாரோ அதே போல் நாமும் இயேசுவை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டும்" என்று கூறினார். மேலும் "இன்றைய சூழலில் இயேசுவைப் போல் பல துறைகளில் சிறந்து விளங்க வேண்டும். இளைஞர் இயேசு எவ்வாறு இலக்குத் தெளிவோடு மூன்று ஆண்டுகளுக்குள் தன் இலக்கை அடைந்தாரோ அதேபோல நாமும் நமக்கான இலக்கை முடிவு செய்து அதனை அடைய தீவிரமாக உழைக்க வேண்டும்" என்று இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் இயக்குனர் அருள்பணி. எடிசன் அவர்கள் பேசுகையில் "கடந்த ஜூன் 15, அன்று அருளாளர் பட்டம் பெற்ற ஃப்ளோரிபர்ட் ப்வானா சூய் என்கிற காங்கோ நாட்டு இளைஞரைப் பற்றி கூறி, அவர் எவ்வாறு தனது இலக்குத் தெளிவு மிக்க வாழ்வால் கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்தாரோ அதேபோல நாமும் நேர்மையாக வாழ வேண்டும்" என்று அழைப்பு விடுத்தார். மேலும் "மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் "கிறிஸ்து வாழ்கிறார்" திருத்தூது மடலில் குறிப்பிட்டுள்ளது போல இளைஞர் பணியின் முகவர்களாக இளைஞர்களே திகழ வேண்டும் என்பதற்கு இணங்க ஒருங்கிணைக்கப்படாத இளைஞர்களை ஒருங்கிணைக்க நன்கு பயிற்சி பெற்ற இளைஞர்கள் குழுவை மறைமாவட்ட அளவில் உருவாக்கி தொடர்ந்து பங்கு சந்திப்பில் ஈடுபடுத்த வேண்டும்" என்று மறைமாவட்ட இளைஞர் பணிக்குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து நடைபெற்ற கருத்துரை அமர்வில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறையின் மேனாள் தலைவர் திரு பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் "இளைஞர்கள் தங்களுக்கான இலக்குகளை முடிவு செய்து அதனை அடைய தொடர்ந்து உழைக்க வேண்டும். இன்றைய காலத்தின் அறிகுறிகளை அறிந்து அதற்கு ஏற்ப தங்களுக்கான துறையை தேர்ந்தெடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்
சேலம் மறைமாவட்டத்தின் நிதி நிர்வாக தந்தை அருள்முனைவர். டேவிட் ஸ்டான்லி குமார் அவர்களோடு இணைந்து செங்கல்பட்டு மறைமாவட்ட சொத்து கண்காணிப்பாளர் அருள்பணி செபஸ்டின் ஜார்ஜ் அவர்கள் நடத்திய கலந்துரையாடலில் இளைஞர்களின் கேள்விக்கு பதிலளித்தனர். அப்போது "வீதிக்கு வராத விவிலியம் வீணானது" என்றும் "எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்கிற சமத்தும் தான் யூபிலி நமக்குத் தரும் முதல் செய்தி. சாதி இன மத வேறுபாடு இன்றி அனைவரிடமும் சகோதரத்துவம் பாராட்ட வேண்டும். மனிதருக்கு மட்டுமன்றி இயற்கையின் அனைத்து படைப்புகளின் மீதும் அன்பு கொண்டு மண்வளம் காத்து இயற்கையைப் பேண வேண்டும் என்பதும் யூபிலி நமக்குத் தரும் முக்கிய செய்தியாகும்" என்றும் கூறினர்.
மதியம் அனைத்து மறைவட்டங்களின் இளைஞர்களும் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து ஆயரின் தலைமையில் சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. திருப்பலியின் போது பல மொழிகளை தாய் மொழியாக கொண்ட இளைஞர்களை உள்ளடக்கிய இயக்கம் என்பதன் வெளிப்பாடாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நம்பிக்கையாளர் மன்றாட்டுக்கள் வாசிக்கப்பட்டன.
திருப்பலிக்குப் பிறகு வந்திருந்த இளைஞர்களில் பத்து பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆயர் அவர்களால் நம்பிக்கையின் திருப்பயணிகளாக அறிவிக்கப்பட்டனர். இவர்கள் இந்த ஆண்டின் இறுதிக்குள் தமிழ்நாட்டின் முக்கிய இடங்களுக்கு திருப்பயணமாக அழைத்துச் செல்லப்படுவர்.
மேலும் செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் மல்லிகாபுரம் பங்கைச் சேர்ந்த பல முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாடகர், பாடல் ஆசிரியர், நடிகர் என தனது திறமைகளின் மூலம் எளிய மக்களின் குரலாக செயல்பட்டு வரும் சொல்லிசைப் பாடகர் VJ விஜய் அவர்களின் Friend En Trend என்ற பாடலை ஆயர் அவர்களும் சிறப்பு விருந்தினர்களும் வெளியிட்டனர்.
நிறைவாக செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் அனைத்து மறைவட்டங்களுக்கும் விழாவிற்காக கடினமாக உழைத்த அனைவருக்கும் யூபிலி மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மறைமாவட்ட இளைஞர் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் செல்வன். ஸ்டீபன் மற்றும் இளைஞர் இயக்க தலைவர் செல்வி. பிரிஸ்கா நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்