தேடுதல்

மறைந்த கொலோம்பிய அதிபர் வேட்பாளர் Miguel Uribe Turbay மறைந்த கொலோம்பிய அதிபர் வேட்பாளர் Miguel Uribe Turbay  (ANSA)

வாழ்க்கை முன்னேற்றத்துக்கு உதவும் பாதை அல்ல வன்முறை

கடந்த ஜூன் 7, சனிக்கிழமையன்று கொலோம்பிய நாடாளுமன்ற அதிபர் வேட்பாளர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த மிகுவல் அவர்கள், மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டு தீவிர மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆகஸ்டு 11, திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

வன்முறை என்பது வாழ்க்கைக்கோ அல்லது முன்னேற்றத்துக்கோ உதவும் ஒரு பாதை அல்ல” என்றும், சமத்துவம், நீதி, நல்லிணக்கம் மற்றும் அமைதியை கட்டியெழுப்புவதற்கான சவால்களை நாம் அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது கொலோம்பிய ஆயர் பேரவை.

ஆகஸ்டு 11 திங்கள்கிழமையன்று மறைந்த 39 வயதான கொலம்பிய அதிபர் வேட்பாளர் மிகுவல் யூரிப் துர்வே அவர்களின் ஆன்மா இறைவனில் நிறையமைதி பெறவும், நாட்டில் வன்முறை அகற்றப்படவும் வலியுறுத்தி செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது கொலோம்பிய ஆயர் பேரவை.

கடந்த ஜூன் 7, சனிக்கிழமையன்று கொலோம்பிய நாடாளுமன்ற அதிபர் வேட்பாளர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த மிகுவல் அவர்கள், மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டு தீவிர மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆகஸ்டு 11, திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவில் 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரண்டும் தேர்தல் பரப்புரைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன, அந்நிலையில் எதிர்க்கட்சியைச் சார்ந்த (கன்சர்வேட்டிவ் டெமோகிரடிக் சென்டர் கட்சி) 39 வயதுடைய எம்பி மிகுவல் யூரிப் போட்டியிட்டு கொலோம்பியாவின் பல்வேறு இடங்களில் பொதுக் கூட்டங்களில் பரப்புரையைத் தொடங்கி அதில் ஈடுபட்டு வந்தார்.

ஜூன் 7, சனிக்கிழமை அன்று கொலம்பியாவின் பகோடாவில் உள்ள ஃபாண்ட்டிபான் என்ற நகரில் உள்ள பூங்கா ஒன்றில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தபோது, மர்ம நபரால் துப்பாக்கியால் தலையில் இரண்டு முறை சுடப்பட்டார்.

மிகுவலுக்கு ஏற்பட்ட படுகொலை பற்றிய உண்மையை தெளிவுபடுத்துவதற்கான முயற்சிகளைத் தொடருமாறு தகுதிவாய்ந்த அதிகாரிகளையும் அரசு நிறுவனங்களையும் கேட்டுக்கொண்டுள்ள ஆயர் பேரவையானது இக்குற்றம் தண்டிக்கப்படாமல் போகாது என்றும் எடுத்துரைத்துள்ளது.

மேலும், சுதந்திரம் மற்றும் ஒழுங்கு  என்ற சின்னத்தின் குறிக்கோளின் அடிப்படையில், கொலம்பிய மக்களின் நம்பிக்கை திருடப்பட விடக்கூடாது என்றும், தேசிய மதிப்புகளை அமைதியாகப் பாதுகாக்க வேண்டும் என்றும் ஆயர்கள் அச்செய்தியில் வலியுறுத்தியுள்ளனர்.

ஒருங்கிணைந்த மனித வளர்ச்சிக்கான சுதந்திரம், வன்முறை இல்லாமல் வேறுபாடுகளுக்கு மரியாதை மற்றும் அதன் அனைத்து வடிவங்களிலும் வாழ்க்கையைப் பாதுகாத்தல், சமூக பங்கேற்பு, நல்லிணக்கம் மற்றும் குடிமக்களின் உரிமைகளுக்கான மரியாதையை உறுதி செய்யும் ஒரு நியாயமான ஒழுங்கு போன்றவற்றையும் வலியுறுத்தியுள்ளனர் ஆயர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 ஆகஸ்ட் 2025, 13:07