வடக்கு காசா பகுதி மக்கள் திருக்குடும்ப ஆலயம் அருகில் குடியேற்றம்
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
காசாவின் திருக்குடும்ப கத்தோலிக்கக் கோவிலின் சுற்றுப் பகுதியிலிருந்து முழுமையாக வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் வசிக்கக் கூடாரங்கள் வழங்கப்படுவதாகவும் திருக்குடும்ப பங்கு தளத்தின் பங்கு தந்தையான அருள்பணி. கபிரியேல் ரோமானெல்லி தெரிவித்துள்ளார்.
இஸ்ரயேல் இராணுவம், திருக்குடும்ப பங்குத் தளம் அமைந்துள்ள வடகாசாவிலிருந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களை தெற்குப் பகுதிகளுக்குக் இடமாற்றம் செய்வதற்கான திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், அப்பகுதியில் வசிக்கும் இலட்சக்கணக்கான மக்கள் தங்குவதற்கு இடமிருக்கிறதா என்றும் அருள்பணி. ரோமானெல்லி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையில், ஆகஸ்ட் 17 ஞாயிறன்று காசா நகரின் அல்-அஹ்லி மருத்துவமனை மீதான இஸ்ரயேலிய விமானத் தாக்குதலால் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குடியேற்றத் திட்டம் காசா நகர் பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே என்று இஸ்ரயேல் இராணுவம் விளக்கினாலும், ஹமாஸ் அமைப்பு இத்திட்டத்தை நிராகரித்துள்ளதுடன், தெல் அவீவ் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் இதற்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர்.
மேலும் கடந்த ஜூலை 17 அன்று காசாவின் திருக்குடும்பக் கோவில் தாக்கப்பட்டு மூவர் உயிரிழந்து பலர் காயமடைந்ததை நினைவு கூர்ந்த அருள்பணியாளர் ரோமானெல்லி அவர்கள், தொடர்ந்து நடைபெற்றுவரும் மோதல்களினால் பொதுமக்கள் குறிப்பாக, குழந்தைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக கவலைத் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்