கோவாவில் நடைபெற்ற மரியன்னை மாநாடு 2025
மெரினா ராஜ் - வத்திக்கான்
கோவாவில் நடந்த மரியன்னை மாநாடு 2025-ஆனது பொது மக்களுக்கும் அருள்பணியாளர்களுக்கும் இடையிலான நல்லிணக்கமான ஒத்துழைப்பையும், கூட்டொருங்கியக்கப் பயணம் கொண்ட திருஅவையின் பார்வையையும் உயிர்ப்பித்தது என்று எடுத்துரைத்தார் திரு. லெஸ்டர் திமெல்லோ.
ஜூலை மாதத்தில் கோவாவில் நடைபெற்ற 70 -ஆம் ஆண்டு மரியன்னை மாநாடு குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார் கோவாவில் உள்ள பாத்திமா அன்னை சங்கத்தாரின் உலகளாவிய (WAF) அமைப்பின் தலைவர் லெஸ்டர் திமெல்லோ.
இரண்டு நாள் மரியன்னை மாநாட்டில் பங்கேற்ற ஒவ்வொருவரும் கூட்டத்தின் இறுதியில் பாத்திமா அன்னையின் அழைப்புச் செய்தியையும், அவர்தம் மக்களாகிய நம்மிடம் ஒப்படைத்த அமைதிப்பணிக்கான புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பையும் தங்களுடன் மக்கள் எடுத்துச் சென்றதாகத் தெரிவித்தார் திமெல்லோ.
அன்னைக்கு அமைதியான முறையில் செலுத்தப்பட்ட மரியாதை மற்றும் ஒற்றுமையின் ஒரு தருணமாகக் கருதப்பட்ட இம்மாநாடானது நம்பிக்கை, பக்தி மற்றும் பாத்திமா அன்னையின் காலத்தால் அழியாத அழைப்பின் உயிருள்ள வெளிப்பாடாகவும் திகழ்ந்தது என்று தெரிவித்துள்ளார் திமெல்லோ.
பாத்திமா அன்னையின் அழைப்புச்செய்தி மற்றும் கூட்டொருங்கியக்கத் திருஅவையில் கவனம் செலுத்தப்பட்ட இம்மாநாட்டில், 150க்கும் மேற்பட்டோர் முதல் நாளிலும் இரண்டாம் நாளில் 200க்கும் மேற்பட்டோரும் பங்கேற்றனர்.
இந்நிகழ்வின் மிக முக்கிய நிகழ்வுகளில் கோவா மற்றும் டாமன் உயர் மறைமாவட்டத்தின் பேராயரும் CCBI எனப்படும் இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவருமான கர்தினால் பிலிப்நேரி ஃபெராவோ அவர்கள் தலைமையேற்று சிறப்புச்செய்தார்.
மரியாவுடன் இணைந்து தலத்திருஅவைகளைப் புதுப்பித்தல், பாத்திமா அன்னையின் முக்கிய செய்தி, "நவீன உலகில் பாத்திமா அன்னையின் செய்தியை வாழ்வது, செபமாலை செபித்தல், குழு செபம், தியானம், "தியான செபமாலையின் ஆற்றலைப் புரிந்துகொள்வது", அன்னை மரியாவின் பக்தர்களின் பாதுகாப்பின் அடையாளம், WAF அமைப்பு வழியாக திருஅவையின் அலகுகளை வளர்ப்பது, சமூகத்தில் செபக் கலங்களை வளர்ப்பது என்பது. குறித்த தலைப்புக்களில் கருத்தரங்குகள் நடைபெற்றன. பல்வேறு கருத்துரையாளர்கள் இதில் பங்கேற்று மக்களுக்குத் தங்களது கருத்துக்களை வழங்கினர்.
திருஅவையில் சாதாரண மக்களின் பங்கேற்பு மற்றும் பணியை வலுப்படுத்துவதற்கான நடைமுறை வழிகாட்டுதலை வழங்கப்பட்டதோடு மட்டுமல்லால், கூட்டொருங்கியக்க மாநாட்டின் இறுதி ஆவணம் மற்றும் CCBI இன் சினோடல் தேவாலயத்தை நோக்கிய பயணம் என்ற தலைப்பில் கருத்துக்களும் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.
திருப்பலியில் ஆற்றிய மறையுரையில் உலக அமைதிக்காக அன்றாடம் செபமாலை செபிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய கர்தினால் ஃபெராவோ அவர்கள், பாத்திமா அன்னையின் செய்தியைக் கேட்டு தங்களது வாழ்வில் அதனை எதிரொலிக்கச்செய்து, மக்கள் தங்கள் பக்தியைப் புதுப்பிக்க ஊக்கமளித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்