தேடுதல்

ஒடிசா ஆலயத்தில் செபிக்கும் கிறிஸ்தவ மக்கள் ஒடிசா ஆலயத்தில் செபிக்கும் கிறிஸ்தவ மக்கள்  

ஒடிசாவில் கத்தோலிக்கர்களுக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறைகள்

நான் திருப்பலி நிறைவேற்ற மட்டுமே வந்தேன். இத்தகைய அமைதியான மற்றும் புனிதமான செயலுக்கு இப்படியான பகைமை இருக்கும் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை : ஜோடா பங்கின் அருள்தந்தை ஜோஜோ

ஜெர்சிலின் டிக்ரோஸ்  - வத்திக்கான் 

ஒடிஸாவின், ஜலேஸ்வர் தலத்திருஅவையின், கங்காதர்  கிராமத்திற்கு அருகில் உள்ள மறைப்பணி  நிலையத்திற்கு அருகில் மதமாற்றம் செய்ததாக 2 அருள்பணியாளர்கள்,  2 அருள்சகோதரிகள்  மற்றும் ஒரு மறைக்கல்வியாளர் ஆகியோரை, இந்துத்துவா பஜ்ரங் தளத்தின் உறுப்பினர்கள் தாக்கியுள்ளதாக பீதேஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 6, புதனன்று, கங்காதர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு கத்தோலிக்கர்கள் மரணமடைந்த இரண்டாம் ஆண்டு நினைவுத்  திருப்பலியை நிறைவேற்றுவதற்காக  ஜலேஸ்வர் பங்குத்தந்தை அருள்பணியாளர் நிரப்பேல் மற்றும் பலசோர் மறைமாவட்டத்தின் ஜோடா பங்கில் பணிபுரியும் அருள்தந்தை ஜோஜோ, இரண்டு அருள்சகோதரிகள்  மற்றும் ஒரு மறைக்கல்வியாளர் என 5 பேர் அப்பகுதிக்குச் சென்றதாகக் கூறப்பட்டுள்ளது.

அன்று மாலை 6 மணிக்கு திருப்பலி நிறைவேற்றிவிட்டு, இரவு 9 மணிக்கு அவர்கள் கிராமத்தை விட்டு வெளியேறும்போது  கிராமத்திலிருந்து அரை கிலோமீட்டருக்குக் குறைவான தூரத்தில், குறுகியக்  காட்டுவழியில், பஜ்ரங்க் தள அமைப்பைச் சார்ந்த, ஏறக்குறைய 70 பேர்  காத்திருந்து  அவர்களைத் தாக்கியதாக இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், "நான்  திருப்பலி நிறைவேற்ற  மட்டுமே வந்தேன்; இத்தகைய அமைதியான மற்றும் புனிதமான செயலுக்கு  இப்படியான பகைமை இருக்கும் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை” என்று, காரணமில்லாத இத்தாக்குதலால் மிகவும் அதிர்ச்சியடைந்த ஜோடா பங்கின்  அருள்தந்தை ஜோஜோ கவலைத் தெரிவித்துள்ளதாகச்  செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் அப்பகுதியின் கிறிஸ்தவ மக்களை  அதிர்ச்சியடையச் செய்ததோடு,  அதிகரித்து வரும் இவ்வன்முறைகள்  மிகுந்த கவலையை எழுப்பியுள்ளது என்றும், இத்தாக்குதல் குறித்து இந்திய ஆயர் பேரவை ஆழ்ந்த  வருத்தத்தை தெரிவித்துள்ளதாகவும்    கூறியுள்ளது பீதேஸ் செய்தி நிறுவனம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 ஆகஸ்ட் 2025, 11:51