ஆகஸ்டு 14, உலக அமைதிக்கான செப நாளாக கொண்டாடப்பட UISG அழைப்பு
மெரினா ராஜ் - வத்திக்கான்
காசா, சூடான், உக்ரைன், ஹைட்டி, காங்கோ ஜனநாயக குடியரசு, சிரியா, மியான்மர் நாடுகளைச் சார்ந்த மக்களின் துன்பத்தால் அடையாளப்படுத்தப்பட்ட முகங்கள், வீடுகள் அழிக்கப்படுதல், சமூகங்கள் பிளவுபடுதல் போன்றவற்றில் நமது உலகின் காயங்கள் தெளிவாகத் தெரிகின்றன என்றும் பெண்களும் குழந்தைகளும் பெரும்பாலும் அதிகம் பாதிக்கப்படும் இந்நிலை கண்டு நாம் அமைதியாக இருக்க வேண்டாம் என்றும் அழைப்பு விடுத்துள்ளது உலகளாவிய பெண் துறவு சபைகளின் தலைவர்கள் அமைப்பு.
வருகின்ற ஆகஸ்டு 14, வியாழனன்று அமைதிக்கான உண்ணாவிரதம் மற்றும் செப நாளை அனுசரிக்க அழைப்புவிடுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளது UISG எனப்படும் உலகளாவிய பெண் துறவு சபைகளின் தலைவர்கள் அமைப்பு.
ஆகஸ்டு 15, வெள்ளியன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட இருக்கும் அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவிற்கு முந்தின நாள் உலக அமைதிக்கான உண்ணாவிரதம் மற்றும் செப நாளை கடைபிடிக்க உலகளாவிய பெண் துறவற சபைகளுக்கு அழைப்புவிடுத்துள்ளது
உலகின் எல்லைகளில் இருக்கின்ற, மனிதகுலத்தின் துன்பத்தில் மூழ்கியிருக்கும் அமைதியின் பெண்களாக, “நமது குரல்களை எழுப்பவும், நம் இதயங்களை ஒன்றிணைக்கவும், செபிக்கவும், நடவடிக்கை எடுப்பதற்கான அவசரத் தேவையை உணர்ந்து இந்த செப நாளை கடைபிடிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது அவ்வறிக்கை.
1. தற்போதைய போர்கள் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளின் வெளிச்சத்தில், ஒன்றாக செபித்து கடவுளின் வார்த்தையைப் பற்றி சிந்தியுங்கள்.
2. நீதி மற்றும் நல்லிணக்கத்திற்கான அழைப்பு, அமைதி, போர் நிறுத்தம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பாதைகளைத் தொடர சிவில் மற்றும் தலத்திரு அவை அதிகாரிகளை வலியுறுத்துதல்.
3. வரவேற்பு மற்றும் மனிதாபிமான உதவி வலையமைப்புகள் வழியாக துன்பப்படுபவர்களை ஆதரிப்பதன் மூலம், உறுதியான ஒற்றுமையில் ஈடுபடுங்கள். என்னும் மூன்று உறுதியான நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளன:
வன்முறையால் குறிக்கப்பட்ட உலகில், நற்செய்தி, நீதி மற்றும் உடன்பிறந்த உணர்வின் ஒளியானது இன்னும் பிரகாசிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள UISG அறிக்கையானது, உலகில் அமைதி கட்டமைக்கப்பட வேண்டும் ஒன்றிணைந்துக் கட்டமைக்கப்பட வேண்டும், என்ற வேண்டுகோளையும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்