நேர்காணல் – அரசியான தூய கன்னி மரியா திருவிழா
மெரினா ராஜ் – வத்திக்கான்
அகிலம் அனைத்தையும் படைத்து பராமரித்து ஆளும் ஆண்டவரின் தாயாக அனைத்துல அரசரின் தாயாக திகழ்பவர் அன்னை மரியா. விண்ணக, மண்ணக அரசியாக கன்னி மரியா விளங்குகின்றார் என்பதை நினைவூட்டும் திருநாளே, அரசியான தூய கன்னிமரியா விழாவாகும். ஆகஸ்டு 22-ஆம் தேதி சிறப்பிக்கப்படும் இவ்விழாவானது, கி.பி.431-ஆம் ஆண்டில் எபேசு பொதுச்சங்கம் அறிக்கையிட்ட, மரியா ‘இறைவனின் தாய்’, ‘அரசி’ என்று அழைத்து பெருமைப்படுத்தியதன் அடிப்படையில் கொண்டாடப்படுகின்றது.
‘வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது; பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலை மீது சூடியிருந்தார்’ (திருவெளிப்பாடு 12:1) என்ற இறைவார்த்தைகள், அன்னை மரியாவின் விண்ணக மாட்சியை சுட்டிக் காட்டுகின்றன. “ஆண்டவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்” (லூக்கா 1:51,52) என்னும் கன்னி மரியாவின் வார்த்தைகள் அதை உறுதி செய்கின்றன. கன்னி மரியாவை விண்ணக அரசியாக போற்றி, நாடுகளை அவரது பாதுகாவலில் ஒப்படைக்கும் வழக்கமானது 10-ஆம் நூற்றாண்டில் தோன்றியது. 11ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெர்மந் நாட்டுக் கவிஞரான ஹெர்மான், “வாழ்க அரசியே!” என்று தொடங்கும் இலத்தீன் செபத்தை (கிருபை தயாபத்து மந்திரத்தை) இயற்றினார். இவ்வாறு, இறைவனின் தாயை ‘விண்ணக அரசி‘ என்று வாழ்த்தும் நடைமுறை நூற்றாண்டுகள் தோறும் தொடர்ந்தது.
1592-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் நாள் வேளாங்கண்ணியில் தோன்றிய அன்னை மரியா, “நான் விண்ணக அரசி” என்று கூறினார். 1954 அக்டோபர் 11ந்தேதி திருத்தந்தை 12ம் பியுஸ், ‘விண்ணக அரசிக்கு’ என்ற சுற்றுமடல் வழியாக அரசியான கன்னி மரியாள் விழாவை மே 31ல் கொண்டாடுமாறு நிறுவினார். இந்த விழாவை ஆகஸ்டு 22ந்தேதி கொண்டாடும் வகையில், 1969ஆம் ஆண்டு திருத்தந்தை 6ம் பவுல் மாற்றம் செய்தார்.
அன்னையின்றி இவ்வுலகம் இயங்காது. ஓரறிவு முதல் ஆறரிவு வரை அன்னையின் அன்பிற்கு மயங்காதவர்கள் எவருமிலர். அம்மா என்ற வார்த்தை புனிதமானது. அம்மா என்ற வார்த்தைக்கு ஈடாக எதுவுமே இருக்க முடியாது. உண்மையான அன்பை தாயின் கண்களில் மட்டுமே காண முடியும். வாழ்க்கையில் எது மாறினாலும், தாயின் அன்பு மட்டும் மாறாத ஒன்றாக இருக்கிறது. இத்தகைய அன்னைக்கெல்லாம் சிறந்த அன்னையாக முன்மாதிரிகையாக இருப்பவர் அன்னை மரியா. அரசியான தூய அன்னை மரியாவின் விழாவைக் கொண்டாடும் இந்நாளில் இவ்விழா பற்றிய கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள இருப்பவர் அருள்தந்தை ஸ்டாலின். மரியின் ஊழியர் சபையைச் சார்ந்த அருள்தந்தை ஸ்டாலின் அவர்கள், சிதம்பரம் அருகில் உள்ள சிலுவைபுரம் என்னும் ஊரைச் சார்ந்தவர். திருஅவை வரலாற்றில் முதுகலைக் கல்வியை கிரகோரியன் திருப்பீடக் கல்லூரியில் பயின்றவர். தற்போது மரியின் ஊழியர் சபை மரியானோ பல்கலைக்கழகத்தில் நூலக உதவியாளராகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் தந்தை அவர்கள் வருகின்ற மாதத்தில் அப்பலகலைக்கழகத்தில் மரியின் ஊழியர் சபை வரலாறு மற்றும் ஆன்மிகம் பயிற்றுவிக்க இருக்கின்றார். தந்தை அவர்களை அரசியான தூய கன்னி மரியா பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்