ஜப்பானில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நினைவு தினத் திருப்பயணம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் அணுகுண்டுகளால் சிதைக்கப்பட்டதன் 80- ஆண்டு நிறைவை முன்னிட்டு அமெரிக்க கத்தோலிக்க ஆயர்கள் ஜப்பானில் இறைவேண்டல், உரையாடல் மற்றும் அணு ஆயுதங்களை ஒழிக்கும் விதமாக அமைதிக்கான திருப்பயணம் ஒன்றில் பங்கேற்க உள்ளதாக ICN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் பாக்ஸ் கிறிஸ்டி எனப்படும் உலகக் கத்தோலிக்க அமைப்பு மற்றும் அணு ஆயுதங்களற்ற உலக அமைப்பு சார்பாக கர்தினால் Cupich மற்றும் McElroy, மற்றும் பேராயர்கள் Wester மற்றும் Etienne ஆகியோர் ஜப்பானிய கத்தோலிக்கத் தலைவர்களுடன் இணைந்து பங்குபெறுவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
அணு ஆயுத ஒழிப்பில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் பேராயர் ஜான் வெஸ்டர் அவர்கள், அணுஆயுதங்கள் "ஒழுக்கமற்றவை" என்றும், அவற்றை ஒழிப்பது நலமான வாழ்வை ஆதரிக்கும் ஒரு சிறப்பு அம்சமாக அமையும் என்றும் சுட்டிக்காட்டியதையும் குறிப்பிட்டுள்ளது அச்செய்தி நிறுவனம்.
இந்தத் திருப்பயணத்தில் இறைவேண்டல் வழிபாடுகள், கல்வி சம்பந்தமான நிகழ்வுகள் மற்றும் மதங்களுக்கு இடையிலான கூட்டங்கள் உள்ளடங்கியுள்ளன என்றும், இது அமைதியை உருவாக்குதல், தலைமுறைகளுக்கு இடையிலான நீதி மற்றும் அணு ஆயுத வரலாற்றில் அதனை அழித்தொழிப்பதில் உலகலாவியத் திருஅவையின் பங்களிப்பு குறித்த கண்ணோட்டத்தை அடிப்டையாகக் கொண்டது என்றும் எடுத்துக்காட்டியுள்ளது அச்செய்தித் தொகுப்பு.
இதற்கிடையில், இந்த இருபெரும் குண்டுவெடிப்புகளில் தப்பிப்பிழைத்து உயிர்வாழும் நபர்களுக்கு செய்தியொன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், அணு ஆயுதங்களை மனிதநேயம் மற்றும் படைப்பு மீதான ஆபத்து என்று வர்ணித்துள்ளதுடன், ஆயுதங்களற்ற ஓர் அமைதியான உலகைக் கட்டியெழுப்புவதில் உலகலாவியத் தேவையையும் கோடிட்டுக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்