ஹிரோஷிமா தினத்தின் 80-வது ஆண்டு நினைவுத் திருப்பலி
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
ஆண்டவர் இயேசுவின் தோற்ற மாற்ற விழாவை நினைவு கூறும் அதேவேளை, 1945 -ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஹிரோஷிமா அணு குண்டுத் தாக்குதலால் அழிவுக்குள்ளான 80-ஆம் ஆண்டு நிறைவை இன்று நாம் நினைவு கூறும் நாம் மனித இதயங்களில் உள்ள அழிவிற்கான ஆற்றலை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று சிகாகோ பேராயர் கர்தினால் பிளேஸ் குபிச் தனது மறையுரையில் கூறியுள்ளார்.
அன்று தாபோர் மலையில் ஏற்பட்ட ஒளி நம் அனைவரையும் தந்தைக் கடவுளின் பிள்ளைகளாக அவரது முடிவில்லா மாட்சியில் பங்கு கொள்ள அழைப்பை விடுத்தது, அனால் ஹிரோஷிமாவில் ஏற்பட்ட ஒளி அழிவு, இருள் மற்றும் மரணத்தைக் கொண்டு வந்தது என்றும், ஆண்டவரின் தோற்ற மாற்றத்தின் போது தந்தைக் கடவுள் அன்பு மற்றும் உறுதியூட்டும் வார்த்தைகளைப் பேசினார் ஆனால் ஹிரோஷிமாவில் வானத்திலிருந்து வந்த அணுகுண்டு கற்பனை செய்யமுடியாத அளவிற்கு துன்பத்தையும், வெறுப்பையும் அறிவித்தது என்றும் வேதனை தெரிவித்துள்ளார் கர்தினால் குபிச்.
இந்நாளில் நாம் ஒவ்வொருவரிலும் இருக்கும் அழிவுக்கான ஆற்றலை உணர வேண்டுமெனவும், வெறுப்பு மற்றும் அதிகார விருப்பம் கட்டுப்பாடின்றி வளரும்போது தாபோர் மலை அனுபவத்தையும், இவருக்குச் செவிசாயுங்கள் என்ற தந்தைக் கடவுளின் குரலையும் புறக்கணிக்கிறோம் என்றும் கர்தினால் குபிச் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நடந்த நிகழ்வுகளை நினைவில் கொண்டு, நினைவுகள் கூறும் அமைதிக்கான பாடங்களை ஏற்று, ஒவ்வொருவரும் அவரவர்களுடைய கதைகளுடன் ஒன்றாக பயணித்து, ஆண்டவர் இயேசு எப்போதும் நம்ம்முடனே இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் ஒருவர் மற்றவரைப் பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பாகும் என்ற முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளை தனது மறையுரையில் சுட்டிக்காட்டியுள்ளார் கர்தினால் குபிச்.
இறுதியாக, இன்று, 80 ஆண்டுகளுக்கு முன், மனித அறிவுத் திறனின் தவறான பயன்பாட்டினால், நினைத்துப் பார்க்க முடியாத அழிவை உலகம் கண்டது என்று தெரிவித்த கர்தினால் குபிச் அவர்கள், அழிவு கூறும் படிப்பினைகளை மறக்காமல், ஒளியின் உண்மையான தாபோர் மலை அனுபவத்தை மனதில் நிலைநிறுத்தி, அமைதிக்கான புதிய வழிகளை உருவாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்