தேடுதல்

தெற்கு அரேபியாவில் உள்ள தலத்திருஅவை ஆலயம் தெற்கு அரேபியாவில் உள்ள தலத்திருஅவை ஆலயம்   (Copyright (c) 2024 demesafrankc/Shutterstock. No use without permission.)

புதிய வழிபாட்டு நாள்காட்டியைப் பெறும் தெற்கு அரேபியா

சிறப்பு வழிபாட்டு நாள்காட்டியானது, அரேபிய தலத் திருஅவையின் முக்கியத்துவம் வாய்ந்த புனிதர்களை உள்ளடக்கியதுடன் திருஅவையின் வரலாற்றையும் பிரதிபலிக்கிறது.

ஜெர்சிலின் டிக்ரோஸ் -வத்திக்கான்

புதிய பாதுகாவலர்களைக் கொண்டுள்ள அரேபிய தீபகற்பத்தில், தெற்கு அரேபியாவின் அப்போஸ்தலிக்க மறைவட்டத்தின் இறை வழிபாட்டு நாள்காட்டியை,  திருவழிபாடு மற்றும் அருளடையாளங்கள் ஒழுங்குமுறைக்கான திருப்பீடத்துறை அங்கீகரித்துள்ளது.

இந்த சிறப்பு நாள்காட்டி தலத் திருஅவையின் முக்கியத்துவம் வாய்ந்த புனிதர்களை உள்ளடக்கியதுடன் குறிப்பிட்ட பகுதியில் திருஅவையின் வரலாற்றைப் பிரதிபலிக்கிறது என்றும்  ஃபீதேஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆணையின் முக்கிய அம்சங்களில் ஒன்று, புனித பேதுரு மற்றும் புனித பவுல் ஆகியோர் தெற்கு அரேபியாவின் அப்போஸ்தலிக்க மறைவட்டத்தின் பாதுகாவலர்களாகவும், புனித கன்னி மரியாவை வளைகுடா நாடுகள் அனைத்திற்குமான பாதுகாவலியுமாக அறிவித்துள்ளது என்றும், இவர்களது திருவிழாக்கள் முறையே ஜூன் 29 மற்றும் ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்கு விழாவிற்கு பின் வரும் சனிக்கிழமை  கொண்டாடப்படும் என்றும் அச்செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

தெற்கு அரேபியாவின் அப்போஸ்தலிக்க மறைவட்டத்தின் இந்த வழிபாட்டு நாள்காட்டி, அரேபிய  நாட்டோடு நேரடித் தொடர்பு கொண்ட புனிதர்களையும், அப்பகுதியில் கிறிஸ்தவம் பரவ, தங்கள் பங்களிப்புகளை வழங்கிய மன்னர்களையும், அப்பகுதியின் மறைசாட்சியாளர்களையும், மறைப்பணியாளர்களின் நினைவு நாட்களையும் கொண்டுள்ளது.

மேலும், "எம்பர் நாட்கள்" எனப்படும் சிறப்பு நோன்பு மற்றும் இறைவேண்டல்களுக்கான  காலங்களும் உள்ளன. ஆண்டின் நான்கு காலங்களில் ஒரே வாரத்தின் புதன், வெள்ளி, சனி நாள்களில்  இவை கடைப்பிடிக்கப்படுகின்றன. AVOSAவில், இந்நாட்களில் நிலத்தின் கனிகள் மற்றும் இறையழத்தலுக்காகச் செபிக்கப்படுகிறது.

மேலும், மார்ச் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை, தவக்காலத்தின் போது AVOSA இல் உள்ள திருஅவையின்  தேவைகளுக்காக, குறிப்பாக அமைதிக்காகவும், அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக , ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களின் முதல் வெள்ளிக்கிழமைகள் முறையே கோடை மற்றும் குளிர்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும், படைப்பின் பரிசுகள், பூமியின் கனிகள் , சாதகமான வானிலைக்கான விண்ணப்பங்கள் மற்றும் பூமியின் வளங்களின் பொறுப்பான மேற்பார்வைக்கான இறைவேண்டல்களுக்கு அர்ப்பணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 ஆகஸ்ட் 2025, 14:13