தேடுதல்

விண்ணேற்பு அன்னை  விண்ணேற்பு அன்னை  

தாயும் தாய்நாடும் அதிசயம் - புறவிடுதலை, அகவிடுதலை குறித்து சிந்திக்க அழைப்பு

இந்தியா, மக்களாட்சியை உலகறியச் செய்த அதே 1950ம் ஆண்டு, நவம்பர் முதல் தேதி, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், இறைவனின் அன்னையான மரியா, உடலோடும், ஆன்மாவோடும், விண்ணகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டார் என்ற உண்மையை, மறுக்கமுடியாத ஒரு கோட்பாடாக அறிவித்தார்.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

ஆகஸ்டு மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது, ஒன்று: அன்னையின் விண்ணேற்பு பெறுவிழா, இரண்டு: இந்திய நாட்டின் சுதந்திர தினவிழா. இவ்விரு விழாக்களும் ஒரே ஆன்மீகத் தாக்கத்தை நமக்கு ஏற்படுத்த வேண்டும். இவ்விழாக்கள் நமக்கு தீயவர்களிடமிருந்து விடுதலையையும், பாவத்திலிருந்து மன்னிப்பையும், அடிமைத்தளையிலிருந்து சுதந்திரத்தையும் தர  வேண்டுமானால் நாம் வாழும் இவ்வுலகில் விடுதலைப்பெற்ற மக்களாக , கடவுளின் அன்பை பகிர்ந்து, வாழ வேண்டும்.

உண்மையான விடுதலை என்பது, நாம் மரியன்னையைப்போல் தூய்மையான வாழ்வு வாழ்வது. பாவத்தை ஒழித்து, எந்த தீமைக்கும் அடிமையாகாமல் வாழ்ந்தால் நாம் இவ்வுலகில் உண்மையான விடுதலைப்பெற்றவர்களாய், நேர்மையாளர்களாய், தீயோரை வென்றவர்களாய், பாவத்தை ஒழித்தவர்களாய், சாவை வென்றவர்களாய், வாழ்வோம். இவ்விரு பெருவிழாக்களும் நம்மை உலகிற்கு ஒளியாய், உப்பாய், புளிப்பு மாவாய், உண்மையிலும், நேர்மையிலும், அன்பிலும், மனிதாபிமானத்திலும், தியாகத்திலும், மகிழ்ச்சியிலும், சகோதரத்துவத்திலும் வாழ்ந்து புனிதமான வாழ்க்கை வாழ இவ்விழாக்கள் நம்மை அழைக்கின்றது.   

 ஆகஸ்ட் 15 அன்று நாம் சிறப்பிக்கும் இரண்டு விழாக்களுமே மனித குலத்தின் விடுதலையைப் போற்றுகின்றன. ஆம். இந்திய தேசத்தின் விடுதலையையும் யூதேயா தேசத்தின் விடுதலைக்கான ஏக்கத்தையும் குறித்து நிற்கின்றன. இரு சூழல்களையும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

இந்திய தேசத்தின் விடுதலை

இந்திய சுதந்திரம் என்பது இப்போதைக்குச் சாத்தியமல்ல என்ற அவநம்பிக்கையில் நாடே துவண்டு கிடந்த தருணத்தில் “என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? என்ற உணர்ச்சி மிக்க பாடல் வரிகளும், ‘அஞ்சி அஞ்சிச் சாவார், இவர் அஞ்சாதப் பொருள் இல்லை அவனியிலே’என்று சொந்த நாட்டிலே அடிமைகளாக வாழ்ந்த மக்களுக்கு விடுதலையை நோக்கி என்ற விருது வாக்கோடு ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்தச் சுதந்திரம் அடைந்துவிட்டோம்’ என்ற பாரதியின் சுதந்திர உணர்வுப் பாடல்கள் விடுதலை காற்றை சுவாசிக்கச் செய்தன. இந்த இந்திய சுதந்திரத்திற்கு நம்  தேசத் தலைவர்களின் தியாகம் நமக்கு அடிமையிலிருந்து விடுதலையை பெற்றுக்கொடுத்தது. இரத்தம் சிந்தி பெற்ற நமது சுதந்திரத்தையும், தியாகிகளையும் நினைத்துப் பார்க்கும் நாளாக ஆகஸ்ட் 15 அமைகின்றது.

யூதேயா தேசத்தின் விடுதலை

2000 ஆண்டுகளுக்கு முன்பாக இதே அடிமைத்தனம் யூதேயா நாடு முழுவதும் இருந்தது. இந்த அடிமைதனத்திலிருந்து சாதாரண ஏழைகுடும்பத்தில் பிறந்த பெண்ணின் சுதந்திர பாடல் மக்களுக்கு விடுதலை காற்றை சுவாசிக்கச் செய்தது. "ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்” என்று விடுதலைக்காண பாடல் பெண்குலத்தையே மேன்மைபடுத்தியது. அடங்கிங் கிடந்த பெண் சமுதாயம் விடுதலையை நோக்கி நகர ஆரம்பித்தது.

அன்னை மரியாவின் விண்ணேற்பை பற்றி பல கதைகள் உண்டு. உதாரணமாக அன்னை மரியாவின் இறுதிக்காலம் நெருங்கியதை அறிந்த திருத்தூதர்கள் எருசலேமுக்கு சென்று, அவரிடம் ஆசி பெற்றனர். இதையடுத்து, மரணம் அடைந்த அன்னையின் உடலை, திருத்தூதர்கள் யூத முறைப்படி கல்லறையில் அடக்கம் செய்தனர். வழக்கம் போல தாமதமாக எருசலேம் சென்ற தோமையார் அன்னை மரியாவின் கல்லறையை பார்க்க விரும்பி அன்னையின் கல்லறையைத் திறந்தபோது, அவரது உடல் அங்கு இல்லை. பின்பு திருத்தூதர் தோமாவுக்கு காட்சி அளித்த அன்னை மரியா, தாம் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்தில் இருப்பதை உறுதி செய்தார். இந்நிகழ்வையே இந்த பெருவிழா சுட்டிக் காட்டுகிறது.

அன்னை மரியாவின் விண்ணேற்பு விழாவையும், நம் நாட்டின் விடுதலைப் பெருவிழாவையும் ஒருசேரக் கொண்டாடும் நாமனைவரும் இந்நாளில் நமது புறவிடுதலை, அகவிடுதலை இரண்டையும் பற்றிச் சிந்திக்க அழைக்கப்படுகிறோம். இத்தகைய ஒரு பின்னணியுடன் இன்று நாம் விண்ணேற்பு மாதாவை, அதாவது, காமநாயக்கன்பட்டி பரலோக மாதாக் குறித்து சிறிது காண்போம்.

காமநாயக்கன்பட்டி மாதா

தூத்துக்குடி மாவட்டம்  கோவில்பட்டியின் வடகிழக்குத் திசையில் ஏறக்குறைய 15 கிலோமீட்டர்  தொலைவில் காமநாயக்கன்பட்டி என்னும் அழகிய ஊர் அமைந்துள்ளது. தமிழகத்தில் இரு ஆலயங்கள் பரலோக மாதாவிற்கு பிரசித்தி பெற்றவை, பாரம்பரியம் மிக்கவை. முதலாவது இத்தாலியர் பெஸ்கி என்னும் வீரமாமுனிவர் தமிழகம் வந்து, மறைப்பணியாற்றி தமிழைக் கற்கத் தூண்டிய  இடமான காமநாயக்கன் பட்டி எனும் ஊர். அடுத்தது தென் நெல்லைமாவட்ட வடக்கன் குளம். இந்த இரு ஊர்களிலும் மிக விமரிசையாக பரலோகமாதா விழா கொண்டாடப்படும்.

கி.பி 1600-ஆம் ஆண்டு காலகட்டத்தில் காமநாயக்கர், எட்டுநாயக்கர் என்ற இருசகோதரர்கள் வரிவசூல் செய்யும் பணிக்காக இந்தப் பகுதியில் குடியேறினர். பின்னர் இவர்களின் பெயரிலேயே காமநாயக்கன்பட்டி என்றும், அருகிலுள்ள ஊருக்கு எட்டுநாயக்கன் பட்டி என்றும் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. கி.பி 1600-களில் மதுரையை மையப்படுத்தி பணிசெய்த ஐரோப்பிய சேசு சபை மறைப்பணியாளர்களின் தன்னலமற்ற நற்செய்திப் பணியால், இப்பகுதியில் கிறிஸ்தவம் துளிர் விட்டு வளரத் துவங்கியது. கி.பி 1600-ஆம் ஆண்டிலேயே காமநாயக்கன்பட்டியில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும், வழிபட ஒரு கிறிஸ்தவ திருக்கூடமும் இருந்ததாக கூறப்படுகிறது.

புனித அருளானந்தர் இங்கு வந்து இரண்டரை ஆண்டுகள் பணியாற்றினார். 1684 ஆம் ஆண்டில் புனித அருளானந்தர் அவர்களால் ஒரு குடிசை ஆலயம் கட்டப்பட்டது. 1688 இல் இயேசு சபையினரின் நிலையான தங்குமிடமாகவும், மக்களுக்கு அருட்சாதனங்களை நிறைவேற்ற மிகச் சிறந்த இடமாகவும் புனித அருளானந்தர் எனப்படும் அருள்பணி ஜான் டி பிரிட்டோ அவர்களால் காமநாயக்கன்பட்டி ஏற்படுத்தப்பட்டது. எட்டயபுரம் ஜமீன்தார் இவ்வாலயத்திற்கு தாராளமாக உதவிகள் செய்ததை, 1690 ஆம் ஆண்டு வைக்கப்பட்ட கல்வெட்டில் இன்றும் காணலாம். 1714 முதல் 1716 வரை இரண்டு ஆண்டுகளுக்கு வீரமாமுனிவர் என்னும் ஜோசப் கான்ஸ்டன்டைன் பெஸ்கி பணிபுரிந்தார். இவர் வந்த பின்னர் இவ்வூர் புது வடிவமும் மலர்ச்சியும் பெற்றது. இரத ஊர்வலம், சப்பர ஊர்வலம் என கிறிஸ்தவ பக்தி முயற்சிகளை இந்தியமயப்படுத்தி, விசுவாசத்தில் மக்களை உறுதிப்படுத்தினார். பல்வேறு சவால்களையும் துன்பங்களையும் வீரமாமுனிவர் இங்கு சந்தித்த போதும், ஒரு துறவியாக மதத்தை மட்டுமே போதிக்காமல், மக்களின் உள் உணர்வுகளை ஆழமாக ஊடுருவிப் பார்த்தார். மக்களுக்கு வெறும் போதனை மட்டும் போதாது. எனவே அவர்கள் வாழும் வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டுவர விரும்பினார். கிறிஸ்தவ மக்களிடம் தொண்டு செய்தாலும், தமிழக மக்களிடம் இருந்து அந்நியராகி விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து, அந்நியப்பட்டிருந்த கிறிஸ்தவ வழிபாட்டு முறைகளில் தமிழ் கலாச்சாரத்தை ஒன்றிணைத்து புதிய  பரிணாமத்தை உருவாக்கினார். 1731 அருட்பணி. பெஸ்கி (வீரமாமுனிவர்) அவர்களின் ஆண்டு நாட்குறிப்பேட்டு தகவலின்படி காமநாயக்கன்பட்டியில் புனித பரலோக அன்னையைப் பாதுகாவலியாகக் கொண்ட ஆலயம் இருந்தது, அதில் வழிபாடுகளும் நடந்து வந்தன என உள்ளது. 1938-இல் உருவான மதுரை உயர் மறைமாவட்டத்துடன் இணைக்கப் பட்டது. 1973-இல் பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் கீழ் வந்தது.  வீரமாமுனிவர் பங்கு குருவாகப் பணியாற்றிய காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா பேராலயத்தில் இவ்வாண்டு விண்ணேற்புப் பெருவிழா பத்து நாள் கொண்டாட்டம் ஆகஸ்ட் 6 அன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.

புதுமைகள்

1690-ஆம் ஆண்டு, ஒரு பெண் திறந்தவெளி கிணற்றில் விழுந்து இறந்ததாகக் கூறப்படுகிறது, அந்நிலையில் அப்பெண்ணின்  பெற்றோரும், கிராம மக்களும் அன்னை மரியாவிடம் மன்றாடியதால் இறந்த அப்பெண் அற்புதமாக உயிர் பெற்றதாகவும் அதனால் அப்பகுதி மக்கள் கிறிஸ்துவில் அதிக விசுவாசம் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு திருடர்கள் ஆலயத்தினுள் புகுந்து, நகைகளை திருட முயன்ற போது ஒருவனுக்கு கண் பார்வை போயுள்ளது. இந்த நேரத்தில் ஆலய உபதேசியாரின் கனவில் மாதா தோன்றி காதில் மணியோசையை கேட்கச் செய்ய, அவரும் விரைந்து ஆலயம் வந்த போது கண்பார்வை போன திருடன் உபதேசியாரின் காலைப்பிடித்து கண்ணீர் வடித்து மன்னிப்பு கேட்டுள்ளான். அவரும் மன்னிக்க, மற்றொரு திருடன் ஓடி தப்பித்துள்ளான். தப்பித்து ஓடியவன் சில நாட்களில் நோய்வாய்ப்பட்டு இறந்து போயுள்ளான்.

மாதாவின் கருணையால் வெளிநாட்டில் நல்ல வேலை கிடைத்து வாழ்ந்து வந்தவர், எதிர்பாராத விதமாக பெரிய விபத்து ஏற்பட்டு நடக்கவும் பேசவும் இயலாமல் தாய்நாடு திரும்பினார். குடும்பத்தினர் தொடர்ந்து ஆலயம் வந்து மாதாவிடம்  நம்பிக்கையுடன் ஜெபிக்க, எழுந்து நடக்கவும் பேசவும் மாதா கருணை புரிந்தார். தொடர்ந்து ஆலயம் வந்து சாட்சி கூறி நன்றி செலுத்தினர். ஓர் ஆண்டாக தொலைந்து போன மனநலம் பாதித்த தனது சகோதரனை, தம்மிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று ஜெபித்த சகோதரிக்கு, எவ்வித பாதிப்புமில்லாமல் சகோதரனை கொண்டு வந்து சேர்த்த புதுமையை எண்ணி நன்றி செலுத்தி சென்றனர். மேலும் குழந்தை வரம், நோய்களில் இருந்து விடுதலை என பல்வேறு புதுமைகள் மாதாவின் வழியாக நடந்து வருகின்றது.

கன்னி மரியா விண்ணேற்பு அடைந்தது பற்றிய கோட்பாடு

1947-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 14 நள்ளிரவு 12 மணிக்கு, அதாவது, ஆகஸ்ட் 15 புலர்ந்த அந்த முதல் மணித்துளிகளில், இந்தியா, ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது. 1950, சனவரி 26ம் தேதி, இந்தியாவை இனி ஆளப்போவது மக்களே, என்று உலகறியச் சொன்னோம். இந்தியா, மக்களாட்சியை, உலகறியச் செய்த அதே 1950ம் ஆண்டு, நவம்பர் முதல் தேதி, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், இறைவனின் அன்னையான மரியா, உடலோடும், ஆன்மாவோடும், விண்ணகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டார் என்ற உண்மையை, மறுக்கமுடியாத ஒரு கோட்பாடாக அறிவித்தார். கன்னி மரியா விண்ணேற்பு அடைந்தார் என்ற  அறிக்கை வந்து 75 ஆண்டுகளே ஆகின்றன. ஆனால், மரியாவின் விண்ணேற்புத் திருவிழாவை, கிறிஸ்தவர்கள், 8 அல்லது 9ம் நூற்றாண்டிலிருந்தே கொண்டாடிவருகின்றனர்.

மரியாவை, அன்னையாக, கன்னியாக சிறப்பிக்க, ஆண்டுதோறும் பல விழாக்களைக் கொண்டாடுகிறோம். அவற்றில், 19 திருவிழாக்கள், கத்தோலிக்க உலகம் அனைத்திற்கும் பொதுவான திருவிழாக்கள். இவையன்றி, திருத்தலங்களில் கொண்டாடப்படும் திருவிழாக்களும் உண்டு. வேளாங்கண்ணி, பாத்திமா, லூர்து, குவாதலூப்பே, என்று, உலகின் பல நாடுகளில் உருவாக்கப்பட்டுள்ள அன்னையின் திருத்தலங்களில், ஆண்டு முழுவதும் அன்னையின் பக்திக்குச் சான்று பகரும் பல நிகழ்வுகள் நடந்தவண்ணம் உள்ளன. மரியன்னைக்கென நாம் கொண்டாடும் அனைத்து திருநாள்களின் மகுடமாக அமைவது, ஆகஸ்ட் 15ம் தேதி, நாம் கொண்டாடும் விண்ணேற்புப் பெருவிழா.

இவ்விழா தரும் பாடம்

அன்னை மரியாவை மையப்படுத்தி நாம் கொண்டாடும் ஒவ்வொரு விழாவன்றும், அவரது வாழ்வை, கொஞ்சமாகிலும் புரட்டிப்பார்க்க, அவரது வாழ்வு சொல்லித்தரும் பாடங்களை, சிறிதாகிலும் கற்றுக்கொள்ள, நமக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. இருபது நூற்றாண்டுகளுக்குமுன், வரலாற்றில் வாழ்ந்த மரியாவை, இன்று சந்திக்க முயல்வோம். கலிலேயாவின் நாசரேத் கிராமத்தில் வாழ்ந்த இளம்பெண் மரியா, மிக எளிய கிராமத்துப் பெண். மரியா கண்டுவந்த கனவெல்லாம் ஒன்றுதான். தினம் தினம் செத்துப்பிழைக்கும் தானும், தன் மக்களும், உரோமையக் கொடுமைகளிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்பதே. உரோமைய வீரர்களின் அட்டகாசங்கள், அத்துமீறல்கள், பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததைக்கண்ட அந்த இளம்பெண், தனக்கும், தன் மக்களுக்கும் எப்போது விடுதலை கிடைக்கும் என்று ஏங்கிவந்தார். அந்த விடுதலைக்காக இறைவனை அவர் வேண்டாத நாளே இல்லை. அவரது வேண்டுதல் கேட்கப்பட்டது. அவர் ஏங்கிய விடுதலை வந்தது. ஆனால், எப்படி வந்தது? ஒரு பெரும் இடியென வந்திறங்கியது, அந்த விடுதலை. மரியாவின் ஏக்கங்களுக்கு, அவர் தினமும் எழுப்பி வந்த செபங்களுக்கு, இறைவன் பதில் தந்தார். "உனக்கும், உன் மக்களுக்கும் விடுதலை வழங்க, என் மகனை அனுப்புகிறேன். ஆனால், என் மகனுக்கு நீ தாயாகவேண்டும்" என்று இறைவன் அனுப்பிய செய்தியைக் கேட்டு, மரியா, நிலைகொள்ளாமல், ஆடிப்பாடியிருக்கமாட்டார். நிலைகுலைந்து, நொறுங்கிப்போயிருப்பார்.

திருமணம் ஆகாமல் தாயாகும் ஒரு பெண்ணுக்கு யூத சமுதாயத்தில் என்ன நடக்கும் என்பதை மரியா நேரில் பார்த்தவர். ஊருக்கு நடுவே, அந்தப் பெண் கல்லால் எறியப்பட்டுக் கொல்லப்படுவார். அதுவும், தங்கள் ஊர், உரோமைய வீரகளால் ஆக்கிரமிக்கப்பட்டபின், இந்தக் கல்லெறிக் கொலைகள் அடிக்கடி நடந்ததையும் பார்த்தவர் மரியா. உரோமையக் கொடுமைகளிலிருந்து விடுதலைதாராயோ என்று இளம் பெண் மரியா இறைவனிடம் எழுப்பிவந்த வேண்டுதலுக்கு விடையாக வந்த விடுதலைச்செய்தி, மரணதண்டனைக்கு இட்டுச்செல்லும் ஓர் அழைப்பாக இருந்தது. அந்த அழைப்பு இறைவனிடமிருந்து வந்ததால், மரியா ‘ஆம்’ என்று சம்மதம் சொன்னார்.

இறுதியில், தன் மகன் அநியாயமாக சிலுவையில் அறையப்பட்டபின், அவர் அடைந்த கொடிய வேதனைகளைக் கண்டும், அந்தச் சிலுவைக்கடியில் ஒன்றும் செய்யமுடியாமல் நிற்கவேண்டியிருந்தது. தவிர்க்கமுடியாததாகத் தெரிந்த இந்தச் சூழ்நிலைகளிலெல்லாம், மனதுக்குள், அந்த அன்னையின் நம்பிக்கை குறையவில்லை. அந்த நம்பிக்கை, அந்த வீரம், அந்த அன்னையின் உடலோடு, பூமிக்குள் புதைந்துவிடக் கூடாதென்றுதான், அந்த அன்னை, இறந்ததும், அவரை, உடலோடும், ஆன்மாவோடும், இறைவன் விண்ணகத்தில் ஏற்றுக்கொண்டார். அந்த அற்புதத்தைத்தான், ஆகஸ்ட் 15 அன்று அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவாகக் கொண்டாடுகிறோம்.

ஆகஸ்ட் 15, ஆஙகிலேயர் ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலை பெற்ற நாள். இந்த நாள் இந்தியாவுக்கு மட்டும் விடுதலை நாள் அல்ல. லிபேரியா, தென் கொரியா, காங்கோ குடியரசு உட்பட பல நாடுகள் விடுதலை உணர்வுகளில், எண்ணங்களில் ஊறித் திளைக்கும் ஒரு நாள், ஆகஸ்ட் 15. இவ்வேளையில், உண்மையான விடுதலையைக் குறித்து சான்றோர் கூறிய சில எண்ணங்களை நினைவில் கொள்வோம்:

சான்றோரின் வாக்குகள்

அடிமை ஒருவர், இனி, தான் அடிமையாக வாழப்போவதில்லை என்று தீர்மானிக்கும்போது, அவரது விலங்குகள் அறுந்துவிழுகின்றன. விடுதலை, அடிமைத்தனம் இரண்டும் மனநிலைகளே. இதைச் சொன்னவர், மகாத்மா காந்தி. தங்களைச் சிறைபடுத்தும் சங்கிலிகளை வணங்கும் முட்டாள்களுக்கு விடுதலை அளிப்பது கடினம் என்ற எச்சரிக்கையை விடுத்தவர் வோல்ட்டேர். விடுதலை என்பது மனிதர்கள் மேல் இறங்கி வராது, மனிதர்கள்தான் விடுதலையை நோக்கி மேலெழுந்து செல்லவேண்டும் என்று சொன்னவர், சார்ல்ஸ் கேலப் கோல்ட்டன்.

மேலெழுந்து செல்லும் விடுதலைக்கு உயர்ந்ததோர் அடையாளமாக விளங்கும் அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவன்று, இந்திய நாடும், இன்னும், உலகின் அனைத்து நாடுகளும், உண்மையான விடுதலையை நோக்கி உள்ளங்களை உயர்த்தும் அறிவையும், ஆற்றலையும் பெறவேண்டும் என்ற வேண்டுதலை அன்னைமரியாவின் பரிந்துரையோடு மேற்கொள்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 ஆகஸ்ட் 2025, 15:08