தேடுதல்

கோணான்குப்பத்தில் வீற்றிருக்கும் பெரியநாயகி அன்னை கோணான்குப்பத்தில் வீற்றிருக்கும் பெரியநாயகி அன்னை  

அன்னை ஓர் அதிசயம் - பெரியநாயகி அன்னை கோணான்குப்பம்

தமிழரின் கலாச்சாரப்படியே சேலை உடுத்தி, ஆபரணங்கள் அணிவித்து, சிரசில் கிரீடத்தை கொண்டவளாக, கையில் இயேசு பாலனை ஏந்தியவாறு காட்சி தருகிற அன்னையின் சித்திரத்தை வீரமாமுனிவர் தம் கைப்பட வரைய ,அதனடிப்படையில் பெரியநாயகி அன்னையின் திருஉருவச்சிலை உருவாக்கப்பட்டது.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான் 

கி.பி முதல் நூற்றாண்டிலேயே திருத்தூதர் புனித தோமையார் வழியாக வட தமிழ்நாட்டில் இறையாட்சி விழுமியங்கள் மக்களால் அறியப்பட்டு, கிறிஸ்தவம் பரவப் தொடங்கியது. புனித தோமையாருக்குப் பின்னர் கிறிஸ்தவத்தை தன்முனைப்போடு செயல்படுத்த , பொறுப்புணர்வோடு உழைக்க, சீர்திருத்த விளைவுகளை நிலைநாட்டிட, சீரிய வழியில் வழிநடத்திட தகுந்த தலைமையின்மையால் கிறிஸ்துவம் வீழ்ச்சியடையத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக பிற தமிழக பகுதியில் வாழ்ந்திருந்த கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்தவ கலாச்சார மதிப்பீடுகள், திருஅவையின் தொடர்பின்மை போன்ற காரணங்களாலும் கிறிஸ்தவம் தேய்பிறையானது. ஆனால் இவ்வேளைகளில் சேர நாட்டின் (கேரளா) அரசியல் - பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையான சந்தை வாணிபத்திற்கும், முழுமுதற் காரணமாக இருந்த கிறிஸ்தவத்தை சேர மன்னர்கள் வெண்சாமரம் வீசி வரவேற்றனர். இதனால் மக்களிடையே சமத்துவம், சகோதரத்துவம், நீதி, கடமை, அன்பு, மாண்பு, பொறுமை அனைத்தும் ஏற்பட்டு எழுச்சியடைந்தனர். இவ்வெழுச்சியை கண்ணுற்று வெறுப்புற்ற தஞ்சையை மையமாகக் கொண்டு கோலேச்சிய சோழர்கள், சேரர்கள் மீது கொண்டிருந்த பகைமையால் வெளிப்படையாக கிறிஸ்துவ மறையை வளர விடவில்லை. இத்தகைய கடும் எதிர்ப்பினால் ஏறக்குறைய 15 நூற்றாண்டுகள் தமிழகத்தின் வடபகுதிகளில் கிறிஸ்தவ சமயப் பணிகள் மேற்கொள்ளப் படாமல், கிறிஸ்துவத்தின் இருண்ட காலமாக திகழ்ந்தது. 16 ம் நூற்றாண்டில் இயேசு சபையினர், போர்ச்சுகீசியர், பிரெஞ்சு வேத போதக சபையினர்களால் கிறிஸ்தவம் மீண்டும் துளிர் விடத் துவங்கியது. குறிப்பாக இயேசு சபையின் அருள்பணியாளர்களான புனித சவேரியார், இராபர்ட் தெ நொபிலி, புனித அருளானந்தர், வீரமாமுனிவர் ஆகியோரின் நற்செய்தி அறிவிப்பால் இருளில் வாழ்ந்த மக்கள் வெளிச்சத்தை காணத் துவங்கினர்.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டைக்கு அருகே மங்கலம் பேட்டையை அடுத்து அமைந்துள்ளது கோணான் குப்பம் என்கிற சிறிய கிராமம். இந்த கிராமத்தில்தான், இயேசு சபைத் துறவியான வீரமாமுனிவர், முதன் முதலாகக் கட்டிய தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பு என்னவென்றால், இங்கு வீற்றிருக்கும் அன்னை மரியா, புடவையும், நகைகளும் அணிந்திருப்பார். இந்த மாதாவுக்குப் பெரியநாயகி அன்னை என்று பெயர். வீரமாமுனிவர் வரைந்த ஓவியத்தின் அடிப்படையில் இந்த திருஉருவச்சிலை உருவாக்கப்பட்டது. இந்த தேவாலயம் கட்டப்பட்டதன் பின்னணியில் சுவாரசியமான கதை ஒன்று உண்டு.

ஆரியனூர் என்று இப்போது அழைக்கப்படும் கோணான்குப்பம், பழங்காலத்தில் செழிப்பான குறுங்காடாக இருந்தது. அங்கு அதிகமாக வாழ்ந்த ஆடு மேய்ப்பவர்களின் காரணமாக, “கோனார்குப்பம்” என்ற பெயர் பெற்றது. அது பின்னர் “கோணான்குப்பம்” என மாறியது. இந்தக் காட்டில் பெரிய ஆலமரம், அருகில் ஒரு குளம், அதைச் சுற்றி முட்புதர்கள், வனமல்லிகைச் செடிகள், இலுப்பை மரங்கள், பலவித காட்டு மரங்கள் நிறைந்து காணப்பட்டன. விலங்குகளும் மிகுந்தன. அப்பகுதி மக்கள் பெரும்பாலும் ஏழைகள்; ஆடுமாடுகளை மேய்ப்பதையும், விவசாயத்தையும் தொழிலாகக் கொண்டிருந்தனர். காடு பாளையக்காரர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அங்கிருந்த விறகுகளைப் பயன்படுத்தி மக்கள் எளிமையாக வாழ்ந்து வந்தனர்.

வீரமாமுனிவர் சிறு வயதிலிருந்தே அன்னையின் மீது பேரன்பும், விசுவாசமும் கொண்டவர். மரியன்னையின் புகழைப் பரப்பும் நோக்கில், தமது பணித்தலத்திலிருந்து தோள்பையில் இரண்டு மாதா திருவுருவங்களைக் கொண்டு, கையில் கோல் பிடித்தபடி, இந்தியத் துறவி உடையணிந்து கால்நடையாகப் பயணித்தார். அந்தப் பயணத்தில் ஆரியனூரின் குறுங்காட்டை கடக்க நேர்ந்தது. களைப்பால் சோர்ந்து, காட்டின் அழகில் மகிழ்ந்து, ஆலமரத்தடியில் அமர்ந்த அவர், மார்போடு இரண்டு திருஉருவச்சிலைகளையும் அணைத்தவாறே தூங்கினார். அப்போது அங்கு ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள், முனிவரின் கையில் இருந்த அழகிய மாதா திருவுருவச்சிலைகளைப் பார்த்து ஆச்சரியமடைந்தனர். முனிவர் தூங்கிக்கொண்டிருப்பதைப் பயன்படுத்தி, இரண்டு திருவுருவச்சிலைகளில் ஒன்றை எடுத்துச் சென்று அடர்ந்த முட்புதருக்குள் மறைத்துவிட்டனர். பிறகு விழித்த வீரமாமுனிவர், ஒரு திருவுருவச்சிலை காணாமல் போனதை அறிந்து வருந்தினார். தேடியும் கிடைக்காததால், மன வேதனையுடன் மீதமிருந்த ஒரே திருவுருவச்சிலையை ஏந்திக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார்.

வழியில், அந்தக் காட்டுக்குச் சொந்தக்காரான கச்சிராயர் என்ற பாளையக்கார ஜமீனை மரியாதை நிமித்தமாக வீரமாமுனிவர் சந்தித்துப் பேசினார். அப்போது, தன்னிடமிருந்த மாதா திருவுருவச்சிலைகளில் ஒன்று காணாமல் போனதை அவரிடம் கூறி, அன்னையின் புகழைப் பற்றி பேசினார். கச்சிராயர், செல்வமும் அதிகாரமும் கொண்டிருந்தாலும் தனக்கு ஓர் ஆண் வாரிசு இல்லாத வேதனையை வீரமாமுனிவரிடம் பகிர்ந்தார். அதற்கு வீரமாமுனிவர், “அன்னையிடம் வேண்டுங்கள், அவள் உங்களுக்குக் குழந்தையை அருளுவாள்” என்று நம்பிக்கையுடன் சொன்னார். அதன் பிறகு ஒருநாள் ஆண்வாரிசு இல்லையே என்ற ஏக்கம், கவலையுடன் கச்சிராயர் தூங்கிக் கொண்டிருந்த வேளையில், நிறை வெளிச்சத்தில் அழகுருவமாய், அன்பு ததும்ப, கச்சிராயரின் கனவில் அன்னை தோன்றி, "கச்சிராயரே..! நான் கானகத்தில் தனித்திருக்கிறேன்..! எனக்கொரு ஆலயம் அமைத்து கொடுத்தால் உம் குலம் விளங்க ஓர் ஆண் மகனைத் தருவேன்" என்று அருள் வாக்குரைத்து மறைந்தார். வியப்புடன், கச்சிராயர் அன்னையைத் தேடி காட்டிற்குள் சென்றார்.

குறுங்காடான கோணான்குப்பத்தை கச்சிராயர் அடைந்து, தமது பணியாளர்களிடம் தூய்மைப் படுத்தும் படி கட்டளையிட, காடு சீர்செய்யப் பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், ஆடு மேய்க்கும் சிறுவர்கள் அன்றொரு நாள் வீரமாமுனிவரிடமிருந்து எடுத்து மறைத்து வைத்த அன்னையின் திருவுருவச்சிலை இருந்த புதருக்கருகில் இரத்தம் பீரிட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இச்செய்தி அறிந்து பாளையக்கார கச்சிராயர், அவ்விடத்தை மிகவும் கவனமாக தூய்மைப் படுத்த சொல்ல ஆலமரமும், குளமும் கொண்ட அங்கே அன்னையின் அன்னையின் திருவுருவச்சிலை இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்து, ஆனந்தத்தில் கண்ணீர் விட்டார். தாம் கனவில் கண்ட அன்னையின் உருவமும், புதரிலிருந்து கண்டெடுக்கப்பட்ட திருவுருவச்சிலையும் ஒரே மாதிரியாய் இருப்பதைக் கண்டு வியப்படைந்தார். அவ்விடத்தில் அன்னையின்  திருவுருவச்சிலையை வைத்து அன்று முதல் வழிபடத் தொடங்கினார். அன்னையின் வாக்குக்கிணங்கிய அற்புதத்தை நினைத்து, கச்சிராயர் அந்த இடத்திலேயே சிறு ஆலயமொன்றைக் கட்டினார். வீரமாமுனிவர் பின்னர் அந்த இடத்துக்குத் திரும்பியபோது, தாம் இழந்த அன்னையின்  திருவுருவச்சிலையை மக்கள் ஆலயத்தில் வழிபடுவதைப் பார்த்து மகிழ்ந்தார். அங்கே மக்கள் கொண்டிருந்த பக்தியைக் கண்டு, பெரிய ஆலயம் அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பணியைத் தொடங்கினார். மக்களின் ஒத்துழைப்புடன், 1720-ல் இன்றும் நாம் காணும் அழகிய ஆலயம் கட்டப்பட்டது. இது வீரமாமுனிவர் கட்டிய முதல் ஆலயம்.

இந்த அழகிய ஆலயத்தை போர்ச்சுக்கீசிய பாணியில் கட்டி முடித்த வீரமாமுனிவர் அன்னையின் திருவுருவச்சிலையானது இந்திய கலாச்சாரப்படியே இருக்க வேண்டும் என்ற ஆவலில், தமிழ் மரபுப்படி சேலை உடுத்தி, ஆபரணங்கள் அணிவித்து, சிரசில் கிரீடத்தை கொண்டவளாக, கையில் இயேசு பாலனை ஏந்தியவாறு காட்சி தருகிற சித்திரத்தை தம் கைப்பட வரைந்து, சென்னை மயிலை பேராயரிடம் சென்று இதற்கான ஒப்புதலையும் பெற்று, அத்துடன் நில்லாமல் தாம் வரைந்த அன்னையின் ஓவியத்தை, திருவுருவச்சிலையாக பிலிப்பீன்ஸ் நாட்டின் மணிலா நகரிலிருந்து செய்து தர வேண்டும் என்று கோரிக்கையும் வைத்தார். ஆயரும் சம்மதிக்க மணிலாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 10 அடி உயரம் கொண்ட மரக்கட்டையால் செய்யப்பட்ட அழகிய அன்னையின் திருவுருவச்சிலைக்கு புனித பெரியநாயகி அன்னை என்று பெயரிட்டு மகிழ்ந்தார். இந்த திருவுருவச்சிலை தற்போது வீரமாமுனிவர் கட்டிய ஆலயத்தின் பீடத்திற்கு பின்புறமாக உயரத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

இன்று வரை பெரியநாயகி அன்னை எண்ணற்ற அற்புதங்களால் மக்களை ஆசீர்வதித்து வருகிறார். போர்ச்சுக்கீசிய பாணியில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் சுவர் ஏறக்குறைய 3 அடி கனம் கொண்டது. ஒரே நேரத்தில், 50 பேர் மட்டுமே இங்கு அமர்ந்து வழிபாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியும். இவ்வாலயத்தின் சிறப்பு என்னவெனில் வீரமாமுனிவர் தமது பணி வாழ்வில் கட்டிய ஆலயங்களில் முதல் ஆலயம் இதுவேயாகும். ஆலயத்தின் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் பின்னர் பணிபுரிந்த அருட்தந்தையர்கள் சில பராமரிப்பு பணிகளைச் செய்திருந்தாலும், போர்ச்சுக்கீசிய பாணியில் கட்டப்பட்ட ஆலயத்தின் அழகும் அமைப்பும் வீரமாமுனிவர் கட்டியவாறே இன்றும் மாற்றப்படாமல் பொலிவுடன் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

பின்பு பீரமாமுனிவர் கட்டியக் கோவிலைச் சுற்றி சிலுவைப்பாதை நிலைகள், அருங்காட்சியகங்கள், ஆராதனை ஆலயம், ஆலயத்தில் பெரியநாயகி அன்னையின் வரலாற்று ஓவியங்களை அமைத்தல் எனப் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டதோடு, செண்பகனூரில் உள்ள ஆய்வுக்கூடத்திலிருந்து வீரமாமுனிவர் ஆலயத்தைப் பற்றி எழுதிய கல்வெட்டு பெறப்பட்டு, கோவிலின் வலது புறத்தில் வைக்கப்பட்டது.

அன்னையின் இரக்கத்தையும் அன்பையும் பரிந்து பேசுதலையும் நம்பும் எண்ணற்ற குழந்தை செல்வம் இல்லாத தம்பதியர், அன்னையிடம் வேண்டி குழந்தை செல்வத்தை பெற்று வருகின்றனர். திருமண வரன் அமையாதவர்களுக்கு அன்னையின் கருணையால் திருமணம் நடந்து வருவதால், புது மணத்தம்பதிகளாக கோணான்குப்பம் வந்து நன்றி செலுத்துகின்றனர்.  அவ்வளவு அற்புதங்கள் நாள்தோறும் நடந்து வருகின்றன. இதனால் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பல  மக்கள் அன்றாடம் வந்து இறைவேண்டல் செய்து  பெரியநாயகியி அன்னையின் ஆசீர்வாதங்களை பெற்றுச் செல்கின்றனர். நாம் ஒவ்வொருவரும் இறையன்பை விட்டு விலகாதிருக்க நம்மை நோக்கி வரும் அன்னை மரியின் பாசத்தை உணர்ந்தவர்களாக அன்பில் நிலைத்திருப்போம்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 ஆகஸ்ட் 2025, 13:28