செபம் மற்றும் நோன்பிற்கான நாளானது பெரும் ஆற்றலைக் கொண்டது
மெரினா ராஜ் - வத்திக்கான்
உக்ரைனின் இலத்தீன் வழிபாட்டுமுறை திருஅவையானது அமைதியை நோக்கிய திருத்தந்தையின் ஒவ்வொரு முயற்சியையும் நம்பிக்கையுடன் வரவேற்கின்றது என்றும், செபம் மற்றும் நோன்பிற்கான நாளானது பெரும் ஆற்றலைக் கொண்டது என்றும் எடுத்துரைத்தார் ஆயர் Vitalij Skomarovsky
ஆகஸ்டு 22, வெள்ளிக்கிழமை உலக அமைதிக்கான செபம் மற்றும் நோன்பு நாளைக் குறித்து வத்திக்கான் செய்திகளுக்குப் பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார் உக்ரைன் இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர் பேரவையின் தலைவர் ஆயர் Vitalij Skomarovsky
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து கடினமான சூழ்நிலையில் வாழும் மக்களுக்கு, அந்நேரத்தில் நம்பிக்கை மற்றும் ஆறுதலின் வார்த்தைகள் மிகவும் தேவை என்றும், அவ்வார்த்தைகள் வழியாக, கடவுள் அவர்களின் இதயங்களில் செயல்படுகிறார் என்றும் கூறினார் ஆயர் Vitalij Skomarovsky
நம்பிக்கை மற்றும் ஆறுதலான வார்த்தைகள் குடும்பங்களில் பல்வேறு இழப்புகளை அனுபவித்தவர்களுக்கு உதவுகின்றன, ஏனென்றால் அவை கடவுளின் வார்த்தைகள், வெறும் மனித வார்த்தைகள் அல்ல. அவை கடவுளின் வார்த்தைகளாக இருப்பதால், அவை எப்போதும் ஆறுதல் அளிக்கின்றன, பலப்படுத்துகின்றன என்றும் எடுத்துரைத்தார் ஆயர் Skomarovsky
பிரிவு என்பது நிலையானது அல்ல, நம் அன்புக்குரியவர்களையும் நம் குடும்பங்களையும் மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையை அவை எப்போதும் அளிக்கின்றன என்று வலியுறுத்திய ஆயர் Vitalij Skomarovsky அவர்கள், போரில் இறந்தவர்களின் தியாகம் வீணானது அல்ல, அது அவர்கள் தங்கள் தாய்நாட்டின் மீதும், மக்கள் மீதும் வைத்துள்ள அன்பின் வெளிப்பாடு என்றும் தெரிவித்தார்.
இறப்போடு வாழ்க்கை முடிவடைவதில்லை, நமக்கு நித்திய வாழ்வு இருக்கிறது என்று சுட்டிக்காட்டிய ஆயர் அவர்கள், மறைந்த விசுவாசிகளின் இறுதிச் சடங்கில் பங்கேற்கும்போது, அன்புக்குரிய அவர்கள் கடவுளின் முகத்திற்கு முன்பாக இருக்கிறார்கள், அவர்களின் வெகுமதியைப் பெற்றிருக்கிறார்கள் என்ற நம்பிக்கையினை நாம் பெறுகின்றோம் என்றும் தெரிவித்தார்.
உலக அமைதி மற்றும் நீதிக்கான திருத்தந்தையின் இந்த செப நாளுக்கான விண்ணப்பமானது அசாதாரண ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும், நற்செய்தியின் வார்த்தைகளுக்கு ஒரு பிரதிபலிப்பாக இருக்கும் செபம் மற்றும் நோன்பிற்கான நாளானது வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது என்றும் கூறினார் ஆயர் Vitalij Skomarovsky.
பன்னாட்டு உயர் அதிகாரிகள்பொது ஒன்றியத்தின் (UISG) முன்முயற்சியின் பேரில், உலக அமைதிக்காக, குறிப்பாக உக்ரைனில், செபம் மற்றும் நோன்பு நாளானது, ஆகஸ்ட் 14 , வியாழனன்று கொண்டாடப்பட்டது என்று கூறிய ஆயர் Vitalij Skomarovsky அவர்கள், உக்ரேனிய கிரேக்க கத்தோலிக்க திருஅவை மற்றும் உக்ரைனில் உள்ள உரோமன் கத்தோலிக்க திருஅவை இந்த வேண்டுகோளில் இணைந்தன என்றும் எடுத்துரைத்தார்.
நம்பிக்கையாளர்களாக நாம் ஒவ்வொரு நாளும் கடவுளில்தான் முதன்மையான நம்பிக்கையைக் காண்கிறோம் என்றும், கடவுள் மேல் நாம் கொண்ட இந்த நம்பிக்கை ஒருபோதும் நம்மை ஏமாற்றுவதில்லை. மாறாக அது நிலையான உறுதியான மாற்றத்தை நமக்குக் கொடுக்கும் என்றும் கூறினார் ஆயர் Vitalij Skomarovsky.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்