தேடுதல்

நெகிழிகளை அகற்றும் வியட்நாம் மக்கள் நெகிழிகளை அகற்றும் வியட்நாம் மக்கள்   (AFP or licensors)

சுற்றுச்சூழல் இயக்கத்திற்கு உதவும் வியட்நாம் கத்தோலிக்க மக்கள்

உலகின் முன்னணி பிளாஸ்டிக் மாசுபாடு கொண்ட நாடுகளில் ஒன்றான வியட்நாம், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்படி, ஆண்டுதோறும் ஏறக்குறைய 18 இலட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்குகிறது

மெரினா ராஜ் - வத்திக்கான்

வியட்நாமின் ஹூ மறைமாவட்டத்தில் உள்ள தலத்திருஅவை உறுப்பினர்கள், நாட்டின் மிக முக்கியமான சவால்களில் ஒன்றான நெகிழி (பிளாஸ்டிக்) மாசுபாட்டை எதிர்கொள்கின்றனர் என்றும், அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வமுள்ள உள்ளூர் கத்தோலிக்கர்கள் தலைமையில் ஓர் அமைதியான சுற்றுச்சூழல் இயக்கம் நடந்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார் அன்டன் லு வான் ஃபூக்.  

வியட்நாமின் கடற்கரையில் ஏற்பட்டு வரும் சுற்றுச்சூழல் மாசுபாட்டினை சுட்டிக்காட்டி யுகான் செய்திகளுக்கு இவ்வாறு தெரிவித்துள்ள 52 வயதான மீனவரான அன்டன் லு வான் ஃபூக் அவர்கள், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது நமது கடமை என்றும், அதனைக் காக்க நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த தலைமுறை பாதிக்கப்படும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.  

நம்பிக்கை மற்றும் ஒரே நோக்கத்தால் ஒன்றுபட்ட சமூகமாக ஏறக்குறைய 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து கடற்கரையைச் சுத்தம் செய்து வருகின்றனர் என்றும், கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது பிற மதங்களைச் சேர்ந்தவர்களும், சுத்தம் செய்வதற்கு மட்டுமல்லாது, நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி உலக மக்களுக்குக் கல்வி கற்பிப்பதற்கும் உறுதிபூண்டுள்ளனர் என்றும் எடுத்துரைத்துள்ளார் பூக்.

இது எளிதானது அல்ல, ஆனால் அதைச் செய்வது சரியானது என்பதை நாங்கள் அறிவோம்  என்று கூறியுள்ள பூக் அவர்கள், கடல் நமக்கு எல்லாவற்றையும் தருகிறது. இப்போது நாம் திருப்பித் தர வேண்டிய நேரம் இது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

உலகின் முன்னணி பிளாஸ்டிக் மாசுபாடு கொண்ட நாடுகளில் ஒன்றான வியட்நாம், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்படி, ஆண்டுதோறும் ஏறக்குறைய 18 இலட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்குகிறது என்றும் குறிப்பிட்டுள்ள பூக் அவர்கள் உள்ளூர் கத்தோலிக்க மக்களின் உதவியாலும் முயற்சியாலும் சுற்றுச்சூழல் காக்கப்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் இயக்கத்தின் தாக்கம் கடற்கரையில் மட்டுமல்ல, மக்களின் வீடுகளிலும் பழக்கவழக்கங்களிலும் தெளிவாகத் தெரிகிறது என்றும், பல தலத்திருஅவை உறுப்பினர்கள் மறுசுழற்சி, உரம் தயாரித்தல், மரங்களை நடுதல், மீண்டும் பயன்படுத்தக்கூடிய கொள்கலன்களைப் பயன்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

பிளாஸ்டிக் மாசுபாடு கடலுக்கு அப்பால் சுகாதார விளைவுகளை ஏற்படுத்துகிறது என்றும்,  மோசமான கழிவு மேலாண்மை மற்றும் தொழில்துறை மாசுபாடு சுவாச நோய்கள், தோல் தொற்றுகள் மற்றும் செரிமான பிரச்சினைகள் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளது என்றும் நலவாழ்வுப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

"மாசுபட்ட தண்ணீரைக் குடித்தல், மாசுபட்ட காற்றை சுவாசித்தல், போன்றவற்றினால் மக்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர்," என்றும், சுகாதார நெருக்கடியினால் பல குழந்தைகள் நாள்பட்ட மூச்சுக்குழாய் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் எடுத்துரைத்துள்ளார் ஹாங்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 ஆகஸ்ட் 2025, 11:08