மனித விழுமியங்களை உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும்
மெரினா ராஜ் – வத்திக்கான்
செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மனித விழுமியங்களை உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்றும், தொழில்நுட்பம் மனித மாண்பை மதிப்பிழக்கச் செய்வதால் ஆபத்துக்கள் ஏற்படுகின்றன என்றும் எச்சரித்துள்ளது வத்திக்கானின் தகவல் தொடர்புத் துறை.
ஆப்ரிக்காவின் அக்ராவில் உள்ள கானா பகுதியில் ஆகஸ்டு 10 முதல் 17 வரை நடைபெற்ற பத்திரிக்கை மாநாட்டின் தொடக்கத்தில் பங்கேற்றபோது இவ்வாறு எடுத்துரைத்தார் பேரருள்திரு ஜான்வியர் யாமியோகோ.
சமூகத்தொடர்புக்கான திருப்பீடத்துறையின் தலைவர் பவுலோ ரூபினி அவர்களின் சார்பாக பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய யாமியோகோ அவர்கள், "வரலாற்றை இதயத்தின் புத்திசாலித்தனத்துடன், அன்பின் ஞானத்துடன், அதன் வழிமுறைகள் மற்றும் முடிவுகள், உண்மை மற்றும் பொய்கள், உள்ளுணர்வு மற்றும் கணக்கீடுகளை குழப்பாமல் படித்து சொல்ல வேண்டும் என்றும், இதற்கு நாம் செய்ய வேண்டியது மனிதனாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
"செயற்கை நுண்ணறிவு யுகத்தில் தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் மனித மதிப்புகளைப் பாதுகாத்தலையும் சமநிலைப்படுத்துதல்" என்ற தலைப்பில் நடைபெற்று வரும் ஆப்ரிக்க பத்திரிக்கையாளர்களுக்கான இக்கூட்டத்தில் "'தொடர்பு' என்ற இலத்தீன் வேர்ச்சொல்லானது (‘cum’ (together) ‘munus’ (gift)) ஒன்றாக மற்றும் கொடை என்னும் இரண்டு சொற்களை இணைக்கிறது என்றும், தகவல்தொடர்பு என்பது முதன்மையாக நமது நல்லிணக்கக் கொடை, நாம் ஒருவருக்கொருவர் ஏற்படுத்தும் உறவிலிருந்து பிறக்கும் ஒரு கொடை என்பதை நமக்கு எடுத்துச் சொல்கிறது என்றும் கூறினார் யாமியோகோ.
"ஒரே இதயம் மற்றும் ஒரே ஆன்மா" கொண்ட தொடக்ககால கிறிஸ்தவ சமூகம், ஒற்றுமையிலிருந்து அதன் வலிமையைப் பெற்றது என்றும் திருஅவையின் தகவல்தொடர்பின் இரகசியமாக இது உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் சவால்கள் பற்றி எடுத்துரைக்கையில், "எல்லாவற்றையும் தூள் தூளாக்கி, உண்மையான, நீதியான மற்றும் அழகானவற்றைப் புறக்கணிக்கும் ஆதிக்க அமைப்பின் அபாயம் கொண்டதாக அது இருக்கின்றது என்றும், தனித்துவம், மாண்பு போன்றவை தியாகம் செய்யப்பட்டு, சிந்தனை அடிப்படையிலான அறிவியல் கொள்கைகளுக்கு முரணாக இருக்கின்றது என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்