சிலேசியா மரியன்னை திருத்தலத்திற்குப் பெண்கள் திருப்பயணம்
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
"நீங்கள் அன்புகூரும் மற்றும் சந்திக்கும் அனைவரின் வாழ்விலும் கடவுளின் முகமும் அன்பும் வெளிப்படுமாறு கவனியுங்கள்” என்று ஆகஸ்ட் 17 ஞாயிறன்று, சிலேசியாவிலுள்ள Piekary Śląskie மரியன்னை திருத்தலத்திற்கு திருப்பயணமாக வந்திருந்த போலந்து நாட்டின் பல்லாயிரக்கணக்கான பெண்களிடம் அழைப்பு விடுத்துள்ளார் போலந்திற்கான திருத்தந்தையின் அரசுத் தூதர், பேராயர் Antonio Guido Filipazzi.
குடும்பம், நண்பர்கள் மற்றும் சமூகத்திற்கு கிறிஸ்தவ நம்பிக்கையின் மறைபணியாளர்களாகத் திகழ வேண்டும் என்றும், அன்றாட வாழ்வில் இறைவனின் உடனிருப்பை வெளிப்படுத்த வேண்டுமெனவும் அப்பெண்களை ஊக்கப்படுத்தினார் பேராயர் Filipazzi.
சமூகத்தில் பெண்களின் பங்களிப்பை எடுத்துரைத்த Katowice உயர் மறைமாவட்டத் துணை ஆயர் Marek Szkudło அவர்கள், பெண்கள் உண்மையும் அன்பும் நிறைந்த இறைவாக்கினர்கள் என்றும், அவர்கள் மென்மையும் உறுதியும் கொண்ட வழிகாட்டிகள் என்றும் பாராட்டினார்.
போலந்தின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பெண்கள் பாரம்பரிய உடைகள் அல்லது தங்கள் பணித் தளத்தில் அணியும் உடைகளுடன் இத்திருப்பயணத்தில் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த ஆண்டு Katowice உயர் மறைமாவட்டத்தின் 100 ஆண்டு நிறைவாகவும், நீதியம், சமூக அன்பும் உடைய அன்னையின் ஆலயம் என்று அழைக்கப்படும் Piekary Śląskie அன்னையின் திருஉருவத்தின் முடிசூட்டு விழாவின் நூற்றாண்டாகவும் அமைந்துள்ளது.
கஸ்தல் கந்தோல்போவில் மூவேளை செப உரைக்குப் பின் திருத்தந்தை 14-ஆம் லியோ போலந்தின் அத்திருப்பயணிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதோடு தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.
திருப்பயணத்தில் பங்கேற்ற பெண்களை திருத்தந்தைக்காக இறைவேண்டல் செய்யுமாறு அழைப்புவிடுத்த பேராயர் Filipazzi அவர்கள், அன்னை மரியே நம்பிக்கையின் ஆசிரியர் என்பதையும் நினைவூட்டினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்