தேடுதல்

கற்பிக்கும் இயேசு கற்பிக்கும் இயேசு  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 32-3 கற்பித்து வழிகாட்டும் இறைவன்!

கடவுள் அறிவுறுத்தி, கற்பித்து, நமக்கு வழிகாட்டும்போது, நாம் அவற்றை உள்வாங்கிக்கொண்டு உன்னதமான வாழ்வு வாழவேண்டும்.
திருப்பாடல் 32-3 கற்பித்து வழிகாட்டும் இறைவன்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'ஆண்டவரே என் புகலிடம்' என்ற தலைப்பில் 32வது திருப்பாடலில் 6,7 ஆகிய இரு இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம், அதனைத் தொடர்ந்து வரும் 8, 9 ஆகிய இரு இறைவசனங்கள் குறித்துத்  தியானிப்போம். முதலில் இறைவார்த்தைகளை அமைந்த மனதுடன் இப்போது வாசிக்கக் கேட்போம். "நான் உனக்கு அறிவு புகட்டுவேன்; நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்னைக் கண்ணோக்கி, உனக்கு அறிவுரை கூறுவேன். கடிவாளம் பூட்டி வாரினால் இழுத்தாலன்றி உன்னைப் பின்தொடர்ந்து வராத குதிரை போன்றோ கோவேறு கழுதை போன்றோ அறிவிலியாய் இராதே!" (வசனம் 8,9) இந்த இரண்டு இறை வசனங்களிலும் அறிவுரை கூறுதல், கற்பித்தல், வழிகாட்டுதல் ஆகிய மூன்று முக்கிய கருத்துக்கள் இடம் பெறுகின்றன.

துறவு மடம் ஒன்றில் பாடம் கற்றுகொள்வதற்காக இளைஞன் ஒருவன் வந்தான். அவன் மிகவும் புத்திக்கூர்மை உடையவன். மனமொன்றி குரு கற்றுக்கொடுத்தப் பாடங்களை எல்லாம் கற்றுக்கொண்டான். அவன் வீட்டிற்குச் செல்வதற்காகக் குருவிடம் விடைபெற வந்தான். அப்போது குரு, "இளைஞனே, நீ கற்றுக்கொள்ளவேண்டிய எல்லாப் பாடங்களையும் நன்றாகக் கற்றுக்கொண்டாய். இனி நீ உன் பெற்றோரிடம் சென்று அவர்களுக்குப் பணிவிடை செய். கடவுள் உனக்குத் துணை இருப்பார்" என்றார். அதற்கு அந்த இளைஞன், "குருவே எனக்கு எல்லாப் பாடங்களையும் கற்றுக்கொடுத்தீர்கள். ஆனால், எந்தக் கடவுளைப் பற்றி இப்போது குறிப்பிட்டீர்களோ அவரை மட்டும் எனக்கு காட்டவே இல்லையே. நான் கண்ணால் காண முடியாத கடவுள் எனக்கு எப்படித் துணை இருப்பார்" என்று எதிர்கேள்வி கேட்டான். “உன் கேள்விக்குப் பின்னர் ஒருநாள் விடையளிக்கிறேன்” என்று கூறிய குரு, “வடக்கு திசையிலுள்ள காட்டு வழியாகச் சென்று என் நண்பர் ஒருவரிடம் நலம் விசாரித்துவிட்டு வா” என்று கூறி அவனை அனுப்பி வைத்தார்.   

அந்தத் துறவு மடத்திலிருந்து உணவு பொட்டலங்களை எடுத்துக்கொண்டு புறப்பட்ட அவ்விளைஞன், குரு சுட்டிக்காட்டிய காட்டை அடைந்தான். அப்போது அவனுக்குத் தாகம் எடுத்தது. அந்நேரத்தில் பார்வையற்ற முதியவர் ஒருவர், அங்குள்ள செடிகளில் உள்ள இலைகளைத் தன் கைகளால் தடவிப் பறித்து, அவற்றை நுகர்ந்துபார்த்து தன் பைகளில் சேகரித்துக்கொண்டிருந்தார். "ஐயா என்ன செய்துகொண்டு இருக்கீறிர்கள்" என்று அவரைப் பார்த்துக் கேட்டான். அதற்கு அந்த முதியவர், "நான் இந்தக் காட்டில் வாழ்ந்துகொண்டிருப்பவன். முகர்ந்து பார்த்து மூலிகைச் செடிகளைப் பறித்துக்கொண்டிருக்கிறேன்" என்றார். "நீங்கள் இப்போது கையில் வைத்திருப்பது என்ன மூலிகை" என்று கேட்ட அவ்விளைஞனிடம், "இது பாம்பு கடிக்கான மூலிகைச் செடி. பாம்பு கடித்தவர்கள் இதைத் தின்றால் நஞ்சு நீங்கி உயிர்பிழைத்து கொள்வர்"  என்றார். மேலும், "நீ காட்டு வழியில் பயணம் செய்வதால், இது உனக்கும் பயன்படும். இதனை நீயும் கொஞ்சம் வைத்துக்கொள்" என்று கூறி, அச்செடியின் இலைகள் சிலவற்றைக் கொடுத்தார். "ஐயா, எனக்குத் தாகமாக இருக்கிறது. எங்கே தண்ணீர் கிடைக்கும்” என்று கேட்டான். "இன்னும் சற்று தூரம் நடந்து சென்றால் அங்கே ஒரு கிணறு இருக்கிறது. அதில் நீர் அருந்திக்கொள்” என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். அக்கிணற்றைக் கண்டு அதில் நீர் அருந்திய அவ்விளைஞன், அங்கேயே ஒரு மரத்தடியில் உணவு அருந்திவிட்டு அப்படியே அயர்ந்து உறங்கிவிட்டான். திடீரென அவன் முதுகில் யாரோ முட்டுவதுபோல் இருந்தது. விழித்துப்பார்த்தபோது, அது முயல் என்பதைக் கண்டுகொண்டான். அப்போது மரத்திலிருந்து கிளை ஒன்று முறிந்துவிழும் சப்தம் கேட்டு, உடனே எழுந்து ஓடிச்சென்று தப்பித்துக்கொண்டான். அதன்பின்னர் ஒரு கிராமத்தின் சத்திரத்தை அடைந்த அவன், வயதான ஒருவர் பாம்பு கடியால் அலறியதைக் கண்டு, தான் வைத்திருந்த அந்த மூலிகைச் செடியை அவருக்குத் தின்னக்கொடுத்து அவரைக் காப்பாற்றினான். அந்த வயதானவர் அந்நாட்டு மந்திரி என்றும், மாறுவேடமிட்டு அப்பகுதி மக்களின் குறைகளைக் கேட்கவந்தவர் என்றும் அவன் அறிந்தபோது மகிழ்ந்தான். "இப்போதே என்னோடு வா... என் உயிரைக் காப்பாற்றிய உனக்கு மன்னரிடம் கூறி அரண்மனையில் வேலை வாங்கித் தருகிறேன்" என்று அந்த மந்திரி அழைத்தபோது, தனது குரு கொடுத்த வேலையை முடித்துவிட்டு பின்னர் வருவதாகக் கூறினான். இறுதியாக குருவின் நண்பரைச் சந்தித்து நலம் விசாரித்துவிட்டு மீண்டும் குருவிடம் திரும்பினான்.

அப்போது குரு அவனிடம்," கண்ணால் காண முடியாத கடவுள் எனக்கு எப்படி உதவுவார் என்று கேட்டாயே, இப்போது அந்தக் கடவுளைப் பார்த்துவிட்டாய் அல்லவா" என்று கேட்டார். அதற்கு அவன், "நான் எங்கே கடவுளைப் பார்த்தேன். அவரை நான் பார்க்கவே இல்லையே" என்றான். அப்போது குரு, “எந்தப் பார்வையற்ற மனிதர் உனக்கு மூலிகைச் செடியை கொடுத்தாரோ அவர் கடவுள். காட்டில் பயணம் செய்பவர்களுக்குத் தண்ணீர் தேவைப்படும் என்று எண்ணி அக்காட்டில் கிணற்றை வெட்டி வைத்தாரே ஒருவர், அவர் கடவுள். உன்னை ஆபத்திலிருந்து காப்பாற்றிய அந்த முயல் கடவுள். பாம்பு கடிக்கப்பட்ட அந்த மந்திரியின் உயிரை நீ காப்பாற்றினாயே, அவருக்கு நீ கடவுள். இவ்வளவு உருவகங்களில் கடவுளைக் கண்ட பிறக்குமா நீ இன்னும் கடவுளைக் காணவில்லை என்கிறாய்" என்று கேட்டார் அந்தக் குரு. ஞானம் பெற்ற அவ்விளைஞன்  கடவுளின் உண்மையான இருப்பைக் குறித்து அறிந்துகொண்டான். அதன் பிறகு வீட்டை அடைந்த அவன், தனது பெற்றோரை அழைத்துச் சென்று அந்த மந்திரியைச் சந்தித்து, புதிய வேலையைப் பெற்றுக்கொண்டு இறுதிவரை இறைநம்பிக்கையோடு வாழ்ந்தான்.

இந்தக் கதையில் அறிவுரை கூறுதல், கற்பித்தல், வழிகாட்டுதல் ஆகிய மூன்று விடயங்களும் காணக்கிடக்கின்றன. யாவே இறைவன் தான் தெரிந்துகொண்ட இஸ்ரயேல் மக்கள் தன்னை விட்டு விட்டு வழிமாறிச் சென்றபோதெல்லாம் இந்த மூன்று காரியங்களையும் முன்னிறுத்தி செயல்படுவதைப் பார்க்கின்றோம். பொதுவாக நமது தமிழ் இலக்கியங்கள் அனைத்துமே அறிவுரை கூறுதல், கற்பித்தல், வழிகாட்டுதல் ஆகியவைக் குறித்துப் பேசுகின்றன. தமிழரின் தனிப்பெரும் சிறப்புகளாக அமைந்துள்ள இத்தகைய நூல்கள், மனித வாழ்வுக்குத் தேவையான வாழ்வியல் நெறிமுறைகளைக் கற்பிக்கின்றன. உலகப் பொதுமறையாகக் கருதப்படும் திருக்குறளில் மேற்கண்ட மூன்று பண்புகளும் சிறப்பாக எடுத்துரைக்கப்படுகின்றன. பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல் (குறள் 675). என்ற குறள், ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்போது தனக்கும் தன் எதிரிக்கும் இருக்கும் செல்வம், சாதனங்கள், ஏற்ற காலம், செயல்திறம், பொருத்தமான இடம் ஆகிய ஐந்தையும் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு மன்னர் போருக்குப் போவதாக வைத்துக்கொள்வோம். அவர் இந்த ஐந்து காரியங்களையும் குறித்துத் தீவிரமாக ஆலோசிக்க வேண்டும். இல்லையென்றால், அவர் போரில் தோல்வியுற்றப் பிறகு வெட்கித் தலைகுனிய நேரிடும்.

இயேசு தான் கூறும் உவமைகளில் இந்த முப்பெரும் பண்புகளை முன்னிறுத்துகின்றார். குறிப்பாக, லூக்கா நற்செய்தியில் சீடத்துவ வாழ்வைக் குறித்துப் பேசும்போது, இரண்டு முக்கிய உவமைகள் வழியாக இதனைத் தெளிவாக வலியுறுத்துகின்றார். “உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா? இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, ‘இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால், முடிக்க இயலவில்லை’ என்பார்களே! “வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேட மாட்டாரா? அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது. (லூக்  14: 28-33)

இரண்டாவதாக, கடிவாளம் பூட்டி வாரினால் இழுத்தாலன்றி உன்னைப் பின்தொடர்ந்து வராத குதிரை போன்றோ கோவேறு கழுதை போன்றோ அறிவிலியாய் இராதே!" என்ற இந்த இறைவார்த்தைகளில், கழுதையையும் குதிரையையும் உவமைகளாகக் காட்டுகின்றார் தாவீது அரசர். அதாவது, இவை இரண்டுமே மனிதரால் இயக்கப்படுபவை. மனிதர் ஆட்டுவிப்பது போல ஆடும். ஒரு நிகழ்வை எடுத்துக்காட்டாகக் கூறுவார்கள். ஒரு குதிரைக்கு முன்னால் ஒரு கோலில் காரட் என்ற உணவுப்பொருளைத் கட்டித்தொங்கவிட்டு, ஒருவர் அந்தக் குதிரை வண்டியை ஓட்டிச்செல்வார். குதிரையானது அவ்வுணப்பொருளைப் பிடித்து உண்ணும் எண்ணமுடன் அதனை துரத்துவதுபோல் ஓடிக்கொண்டே இருக்கும். அதனுடன் வண்டியும் ஓடிக்கொண்டே இருக்கும். அவ்வாறே கழுதையும் தனது நடவடிக்கைகளில் செயல்படும். இதனை மனதிற்கொண்டே கடவுளால் படைக்கப்பட்ட மனிதரும் இவைகள் இரண்டையும் போன்று அறிவிலியாய் இராமல், நன்மையானது எது தீமையானது எது என்று அறிந்துகொண்டு செயல்படவேண்டும் என்கிறார் தாவீது அரசர். ஆகவே, கடவுள் அறிவுறுத்தி, கற்பித்து, நமக்கு வழிகாட்டும்போது, நாம் அவற்றை உள்வாங்கிக்கொண்டு உன்னதமான வாழ்வு வாழவேண்டும் என்பதை உணர்ந்துகொள்வோம். இவ்வருளுக்காக இந்நாளில் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 செப்டம்பர் 2025, 14:03