தடம் தந்த தகைமை : தானியேல்மீது பொய்க்குற்றச்சாட்டு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இந்த மேற்பார்வையாளரும் தண்டல்காரரும் தங்களுக்குள் கூடிப்பேசி அரசனிடம் வந்து அவனிடம், “தாரியு அரசரே! நீர் நீடூழி வாழ்க! அதிகாரிகள், தண்டல்காரர்கள், அமைச்சர், ஆளுநர் ஆகிய நாங்கள் அனைவரும் கலந்தாலோசித்துக் கூறுவது: முப்பது நாள் வரையில் அரசராகிய தங்களிடமன்றி வேறெந்தத் தெய்வத்திடமோ மனிதனிடமோ யாதொரு விண்ணப்பமும் செய்கின்ற எந்த மனிதனும் சிங்கக் குகைக்குள் தள்ளப்படுவான் என்று நீர் சட்டம் இயற்றித் தடையுத்தரவு போடவேண்டும். ஆகையால், அரசரே! இப்பொழுதே அச்சட்டத்தை இயற்றித் தடையுத்தரவில் கையெழுத்திடும்; அப்பொழுதுதான் மேதியர், பாரசீகரின் சட்டங்கள் மாறாதிருப்பது போல, இச்சட்டமும் மாறாதிருக்கும்” என்றார்கள். அவ்வாறே தாரியு அரசன் சட்டத்தில் கையொப்பமிட்டுத் தடையுத்தரவு பிறப்பித்தான்.
தானியேல் இந்தச் சட்டம் கையொப்பமிடப்பட்டதை அறிந்தபின், தம் வீட்டுக்குச் சென்றார். அவர் வீட்டு மேலறையின் பலகணிகள் எருசலேமை நோக்கித் திறந்திருந்தன. தமது வழக்கப்படி நாள்தோறும் மூன்று வேளையும் தம் கடவுளுக்கு முன்பாக முழந்தாளிலிருந்து மன்றாடி அவருக்கு நன்றி செலுத்துவார். முன்னரே கூடிப் பேசிக்கொண்டபடி, அந்த மனிதர்கள் உள்ளே நுழைந்து தானியேல் தம் கடவுளிடம் வேண்டுவதையும் மன்றாடுவதையும் கண்டார்கள். உடனே அவர்கள் அரசனை அணுகி, அவனது தடையுத்தரவைப் பற்றிக் குறிப்பிட்டு, “அரசரே! முப்பது நாள்வரையில் அரசராகிய உம்மிடமன்றி வேறெந்தத் தெய்வத்திடமோ மனிதனிடமோ யாதொரு விண்ணப்பமும் செய்கின்ற எந்த மனிதனும் சிங்கக் குகையில் தள்ளப்படுவான் என்ற தடையுத்தரவில் கையொப்பமிட்டுள்ளீர் அல்லவா?” என்றார்கள். அதற்கு அரசன், “ஆம், மேதியர், பாரசீகரின் சட்டங்கள் மாறாதிருப்பதுபோல், இதுவும் மாறாததே” என்றான். உடனே அவர்கள் அரசனை நோக்கி, “யூதாவிலிருந்து சிறைப்பிடித்துக் கொண்டு வரப்பட்டவர்களுள் ஒருவனாகிய தானியேல் உம்மை மதியாமல், நீர் கையொப்பமிட்டுள்ள தடையுத்தரவை மீறி நாள்தோறும் மூன்று வேளையும் வேண்டுதல் செய்கிறான்” என்றார்கள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்