விவிலியத் தேடல்: திருப்பாடல் 32-4 –பொல்லார் நிலையிலிருந்து நல்லார் நிலைக்கு...
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இரண்டு அணில்கள் மரத்தில் ஏறி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. அதில் ஒரு அணிலுக்குக் கடவுள் பக்தி அதிகம். எந்தக் காரியத்தைச் செய்தாலும் இறைவனை வணங்கி விட்டுச் செய்வதும், ஒவ்வொரு நன்மையிலும் கடவுளுக்கு நன்றி செலுத்துவதும் அதன் வழக்கம். அதன் தோழனான மற்ற அணிலுக்கோ கடவுள் நம்பிக்கையே கிடையாது. “திட்டமிட்டுச் செயல் புரியும் புத்திசாலிக்குக் கடவுளே தேவையில்லை” என்று அடிக்கடி சொல்லும். அத்துடன் மற்ற அணிலையும் கேலி செய்து சிரிக்கும். கடவுள் பக்தியுள்ள அணில் இதையெல்லாம் கண்டு கொள்வதேயில்லை.
விளையாட்டு மிகவும் விறுவிறுப்பாகத் தொடர்ந்தது. நேரம் போவதே தெரியவில்லை. உற்சாகத்துடன் ஓடிக்கொண்டிருக்கும்போது கடவுள் பக்திகொண்ட அணில் கை பிடி வழுக்கி மரத்திலிருந்து கீழே விழுந்துவிட்டது. காயம் எதுவும் படவில்லையென்ற போதிலும், கொஞ்சம் வயிற்றில் அடிபட்டு வலித்தது. அப்போது, “பெரிய ஆபத்திலிருந்து என்னைக் காப்பாத்திட்டீங்க கடவுளே. உங்களுக்கு நன்றி” என்றது. இதைக் கேட்டதும் மரத்தில் இருந்த அணில் சிரி சிரியென்று சிரித்தது. “கீழே விழுந்து மண்ணைக் கவ்வினாலும் உனக்கெல்லாம் அறிவே வராது. உன் கடவுள் எதுக்காக உன்னைத் தள்ளி விட்டாருன்னு கொஞ்சம் அவர்க்கிட்டேயே கேட்டு சொல்லேன்” என்று சொல்லி மீண்டும் கிண்டலாய் சிரித்தது. அதற்குப் பக்தியுள்ள அணில், “கடவுளை நம்புற நாங்களெல்லாம் துன்புற்றாலும் கைவிடப்படுவதில்லை. கீழேத் தள்ளப்பட்டாலும் மடிந்துபோவதில்லை. அதனால, கடவுள் எங்களைக் கீழேத் தள்ளிவிட்டாலும் அதுலயும் ஒரு காரணம் இருக்கும்” என்றது. “ஆமாமாம்.. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டுறதில்லை” என்று கூறி மீண்டும் விழுந்து விழுந்து சிரித்தது பக்தியற்ற அணில். அப்போது பக்திகொண்ட அணில் கண்களை மூடி விண்ணை நோக்கி, “கடவுளே, இந்த அவமானத்துக்கும், வலிக்கும் ஏதுவாய் நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் என்னை மன்னிச்சிடுங்க” என்று பணிவுடன் கூறியது
இதைக் கேட்டதும் மரத்தில் இருந்த கடவுள் பக்தியற்ற அணில் இன்னும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக் கொண்டிருந்தது. அப்போது அதற்குப் பக்கவாட்டிலிருந்து ஒரு பாம்பு அதை நெருங்கி வந்து கொண்டிருந்தது. உடனே, பக்திகொண்ட அணில், “டேய், உன் பக்கத்துல பாம்புடா” என்று மரத்தின் கீழிருந்து கதறுகிற சத்தம் அதன் காதில் ஏறவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் மரத்தில் இருந்த அணிலை பாம்பு லபக்கென்று கவ்விக் கொண்டது. தன் தோழன் மரத்திலிருந்து தவறி விழுந்ததற்கும் கூட ஒரு காரணம் இருந்திருக்கிறது என்று உணரும்போது பக்தியற்ற அணில் பாம்பால் முழுமையாக விழுங்கப்பட்டிருந்தது. சில வேளையில் பொல்லார் சிலரால் நாம் தடுமாறி விழும்போது அவர்கள் நம்மைப் பார்த்து கேலியாய்ச் சிரிக்கலாம். ஆனால், அது நம்முடைய உயிரைக் காப்பதற்காகக் கூட இருக்கலாம். நமக்கு எது நிகழ்ந்தாலும் இறைவன் அதை நன்மைக்குத்தான் செய்கிறார் என்பதை நாம் உணர்ந்து கொண்டால் கடவுள்மீதான நமது பக்தி இன்னும் ஆழப்படும்.
கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'கற்பித்து வழிகாட்டும் இறைவன்!' என்ற தலைப்பில் 32வது திருப்பாடலில் 8,9 ஆகிய இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 10, 11 ஆகிய இறைவசனங்கள் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவுக்குக் கொண்டு வருவோம். இப்போது இறைபிரசன்னதில் அவ்வார்த்தைகளை வாசிப்போம். பொல்லாருக்கு வரும் துன்பங்கள் பல; ஆண்டவரில் நம்பிக்கை கொள்வோரை அவரது பேரன்பு சூழ்ந்து நிற்கும். நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு அகமகிழுங்கள்; நேரிய உள்ளத்தோரே, நீங்கள் அனைவரும் மகிழ்ந்து பாடுங்கள். (வசனம் 10,11)
ஒழுக்கம், நேர்மை, தீங்கு எண்ணாமை, எளிமையாய் இருத்தல் போன்றவை மனிதர் தனக்குத்தானே வகுத்துக் கொண்ட வாழ்வியல் நெறிமுறைகளில் சில. மனிதர் சமூகமாய் வாழும்போது தன்னால் இயன்றவரை சக மனிதருக்குத் துன்பம் தராமல், தானும் சிறப்புற வாழ்ந்து பிறரையும் அவ்வாறே இன்புற வாழச் செய்வதே சிறந்த வாழ்க்கையாகக் கூறலாம். வருத்தம், கோபம், மனக்குழப்பம், பயம், எரிச்சல் போன்ற மனதைப் பாதிக்கச் செய்யும் எதிர்மறை உணர்ச்சிகள் எல்லோருக்குமே உண்டு. ஏழைக்கும், நடுத்தரவாசிக்கும், மாடமாளிகையில் வாழ்வோருக்கும் இவைகள் பொருந்தும். அளவிற்கதிகமான பணம், பதவி, புகழ், இன்பம், கட்டற்ற அதிகார எல்லைகள் ஆகியவை இந்த எதிர்மறை உணர்ச்சிகளை மரத்துப் போகச் செய்துவிடும் வலிமை படைத்தவை. எப்போது மனிதரின் குற்றவுணர்ச்சிகள் நீர்த்துப் போகின்றனவோ, அப்போது எவ்விதப் பாவச்செயல் புரிந்தாலும் அதன் விளைவுகளிலிருந்து மனிதரின் மனம் விலகியே நிற்கிறது. நேர்மறை உணர்ச்சிகளால் எவ்வித மகிழ்ச்சியான நிலைக்கும் அவர் ஆட்படுவதில்லை. இதனால் ஏற்படும் வெற்றிடத்தைப் போக்கிட அதிகார வெறியும், பணபோதையும், பாவ வழிகளும் பெருமளவில் உதவுகின்றன. இந்நிலையில்தான் நல்லார் பொல்லார் என இருபிரிவினர் தோன்றுகின்றனர். பொல்லார் கடவுளுக்கு எதிரானவர்களாகச் செயல்படுவதோடு நல்லாரை கொடுமையாக வதைப்பவர்களாகவும் மாறுகின்றனர்.
இன்று இலங்கையில் நிலவி வரும் சூழ்நிலைப் பற்றியும் நாம் சற்று ஆராய்ந்து பார்ப்போம். தமிழருக்கு எதிராக நடத்தப்பட்ட உள்நாட்டுப் போரில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். திட்டமிட்டே நிறைவேற்றப்பட்ட இந்த இனப்படுகொலை, உடன்பிறந்த உணர்வுநிலைக் கொண்ட அனைவரின் கண்களிலும் இரத்தக் கண்ணீரை வரவழைத்தது. அவ்வாறே இலங்கையில் கடந்த 2019-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி உயிர்ப்பு ஞாயிறன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 250-க்கும் மேற்பட்ட இறைமக்கள் உடல் சிதறி பலியாயினர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். ஆட்சி அரியணையில் அமர்வதற்காக ஆட்சியாளர்கள் திட்டமிட்டே இக்குண்டுவெடிப்பை நடத்தியுள்ளனர் என்று கூறி இன்றுவரை அனைத்து மக்களும் அங்கு நீதிகேட்டுப் போராடி வருகின்றனர். இந்நிலையில் அந்நாடு மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. ஒரே உள்ளமுடன் அனைவரும் ஒன்றுதிரண்டு வந்து போராடுவதால், கொடுங்கோலர்களாகக் கருதப்பட்ட இராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே மற்றும் அவர்தம் குடும்பத்தார் அனைவரும் நாட்டைவிட்டே ஓடவேண்டிய அகோர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உலக வரலாற்றை ஒருமுறை புரட்டிப் பார்த்தோமென்றால் இந்த உண்மை நமக்குப் புலப்படும். தங்களின் பதவி மோகத்தாலும், அதிதீவிர அதிகார வெறியினாலும் கட்டுக்கடங்காமல் ஆட்டம்போட்ட ஹிட்லர், முசோலினி, இடியமீன் ஆகிய பொல்லார் அனைவரும் அழிந்துபோயினர் என்பதை நாம் அறிவோம். சொல்லொண்ணா துயரத்தால் மக்களினம் வடிக்கும் கண்ணீரே ஆட்சியாளர்களின் அரியணை பறிபோவதற்குக் காரணமாகிவிடுகிறது என்பது எத்தனை பெரிய உண்மை! இதனைத்தான், 'தோற்றத்தால் பொல்லார்; துணை இலார்; நல்கூர்ந்தார்; மாற்றத்தால் செற்றார்' என, வலியார் ஆட்டியக்கால், ஆற்றாது அவர் அழுத கண்ணீர் அவை அவர்க்குக் கூற்றமாய் வீழ்ந்து விடும்’ (இன்னா செய்யாமை - பழமொழி நானுறு) என்கிறது பழமொழி நானுறு என்னும் தமிழ் இலக்கிய நூல். அதாவது, எளியார் அழுத கண்ணீர் அவர்தம்மை நலிந்தார்க்குக் கூற்றாய் முடியும் என்பது இதன் பொருளாக அமைகிறது.
பொல்லார் நிலை குறித்து எசாயா புத்தகத்தில் வாசிக்கின்றோம். இவ்விடத்தில் பொல்லாருக்கான அழிவும், நல்லாருக்கான கடவுளின் நன்மையும் குறித்துக் காட்டப்படுகின்றன. அழித்தொழிப்பவனே, உனக்கு ஐயோ கேடு! நீ இன்னும் அழித்தொழிக்கப்படவில்லையே! நம்பிக்கைத் துரோகியே, உனக்கு எவரும் துரோகம் செய்யவில்லையா! நீ அழித்தொழிப்பதை முடித்ததும், நீயும் அழிந்தொழிவாய்; நீ நம்பிக்கைத் துரோகம் செய்தவுடன், உனக்கும் துரோகம் செய்வார்கள். ஆண்டவரே, எங்கள்மீது இரக்கமாய் இரும்; நாங்கள் உமக்காகக் காத்திருக்கிறோம்; அதிகாலைதோறும் எங்களைக் காக்கும் கரமாகவும், துன்ப வேளைகளில் எங்களை விடுவிப்பவராகவும் இருப்பீராக! (எசாயா 33:1-2). மேலும், இரண்டாம் மக்கபேயர் புத்தகத்தில் அருமையான நிகழ்வு ஒன்று வருகிறது. சகோதரர்கள் எழுவரும் அவர்களுடைய தாயும் கைதுசெய்யப்பட்டு சாட்டைகளாலும் வார்களாலும் அடிக்கப்பட்டுச் சட்டத்துக்கு முரணாகப் பன்றி இறைச்சியை உண்ணும்படி மன்னனால் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அந்தக் கொடுங்கோல் அரசன் அத்தாயின் பிள்ளைகளை ஒவ்வொருவராகக் கொன்றொழிக்கின்றான். இறுதியாக, எல்லாருக்கும் இளையவர் தான் கொல்லப்படுவதற்கு முன்பு, அந்தப் பொல்லாத அரசனை நோக்கி இவ்வாறு கூறுகிறார். “இழிந்தவனே, எல்லா மனிதருள்ளும் கேடுகெட்டவனே, விண்ணக இறைவனின் மக்களை நீ தண்டிக்கும்போது செருக்குறாதே; உறுதியற்றவற்றை நம்பித் திமிர் கொண்டு துள்ளாதே. எல்லாம் வல்லவரும் அனைத்தையும் காண்பவருமான கடவுளின் தண்டனைத் தீர்ப்பினின்று நீ இன்னும் தப்பிவிடவில்லை. என் சகோதரர்கள் சிறிது துன்பப்பட்டபின் கடவுளுடைய உடன்படிக்கைக்கு ஏற்ப என்றுமுள வாழ்வில் பங்கு கொண்டார்கள்; ஆனால் நீ கடவுளின் தண்டனைத் தீர்ப்பால் உன்னுடைய ஆணவத்திற்கு ஏற்ற தண்டனையைப் பெறுவாய்” (2 மக் 7:33-36).
இறுதியாக, நற்பெயர் பெற்றவர் யார் என்ற தலைப்பில் அமைந்துள்ள முதல் திருப்பாடலிலேயே பொல்லார் நல்லார் குறித்து தாவீது அரசர் எடுத்துக்காட்டுகிறார். நற்பேறு பெற்றவர் யார்? அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர் (வசனம் 1) என்று கூறும் தாவீது, பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர். பொல்லார் நீதித் தீர்ப்பின்போது நிலைநிற்க மாட்டார்; பாவிகள் நேர்மையாளரின் மன்றத்தில் இடம் பெறார். நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும் (வசனம் 4-6) என்று கூறி இத்திருப்பாடலை நிறைவு செய்கின்றார் தாவீது அரசர். ஆகவே, நமது அன்றாட வாழ்வில், நாம் பொல்லார் நிலையிலிருந்து நல்லார் நிலைக்கு மாறுவோம். இந்நிலையே தீமையிலிருந்து நன்மைக்கும், இருளிலிருந்து ஒளிக்கும், சாவிலிருந்து வாழ்வுக்கும் நம்மை கொண்டு செல்லும். இவ்வருளுக்காக, இந்நாளில் இறைவனை நோக்கி இறைவேண்டல் செய்வோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்