காசாவில் அமைதி நிலவ திருத்தந்தையின் செப விண்ணப்பம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும், தொடர்ந்து பயத்தில் வாழ்ந்து, ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலைகளில், தங்கள் நிலங்களிலிருந்து கட்டாயப்படுத்தப்பட்டு வெளியேறி உயிர் பிழைக்கின்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை.
"கொலை செய்யாதே" என்று கட்டளையிட்ட எல்லாம் வல்ல இறைவனுக்கு முன்பாகவும், முழு மனித வரலாற்றின் வெளிச்சத்திலும், ஒவ்வொரு நபருக்கும் எப்போதும் மீற முடியாத மாண்பு உள்ளது, அது எப்போதும் மதிக்கப்பட வேண்டும் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
போர்நிறுத்தம், பிணையக்கைதிகளை விடுவித்தல், பேச்சுவார்த்தை வழியாக இராஜதந்திர தீர்வு மற்றும் பன்னாட்டு மனிதாபிமான சட்டத்தை முழுமையாக மதிக்க வேண்டும் என்ற தனது வேண்டுகோளையும் புதுப்பித்த திருத்தந்தை அவர்கள், அமைதி மற்றும் நீதியின் விடியல் விரைவில் விடியட்டும் என்று எனது இதயப்பூர்வமான பிரார்த்தனையில் சேர அனைவருக்கும் அழைப்புவிடுத்தார்.
இறுதியாக, இளைஞர்கள், நோயாளிகள் மற்றும் புதுமணத் தம்பதிகள் ஆகியோரை நினைவுகூர்ந்து வாழ்த்தி, எப்போதும் நற்செய்தியின் இலட்சியத்திற்கு உண்மையாக இருங்கள், அதை உங்கள் அன்றாட நடவடிக்கைகளில் கடைப்பிடியுங்கள் என்று வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், புனித இராபர்ட் பெல்லார்மின் திருநாளை நினைவுகூரும் இந்நாளில் தனக்கு நாமவிழா வாழ்த்து கூறி செபித்த அனைவருக்கும் தனது நன்றியினையும் தெரிவித்தார் இராபர்ட் பிரவோஸ்ட் என்னும் இயற்பெயர் கொண்ட திருத்தந்தை பதினான்காம் லியோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்