அன்னை ஓர் அதிசயம் – துன்ப முடிச்சுக்களை அவிழ்க்கும் அன்னை ஆலயம் - வாலிபாளையம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இன்பமும் துன்பமும் இரண்டறக் கலந்ததுவே வாழ்க்கை. இவை இரண்டும் ஒன்றாக இணைந்து நம்மோடு நம் வாழ்க்கைப் பயணத்தில் பயணிக்கின்றன. நமது வாழ்வில் ஏற்படும் துன்பங்களை துன்ப முடிச்சுக்களை அவிழ்க்கின்றவராக அதனை விலக்குபவராக இருப்பவர் அன்னை மரியா. பரிந்துபேசுபவராக நம்மோடு உடன் நடப்பவராக இருக்கும் அன்னை மரியா இறைவனால் நமக்குக் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய பரிசு. அன்னை ஓர் அதிசயம் என்ற நமது இன்றைய நிகழ்வில் கோயம்புத்தூர் மறைமாவட்டத்தில் உள்ள வாலிபாளையம் துன்ப முடிச்சுக்களை அவிழ்க்கும் அன்னை மரியா ஆலயம் பற்றியக் கருத்துக்களைக் காண இருக்கின்றோம். அன்னை மரியாவிற்கு ஏராளமான பெயர்களை சூட்டி அழகுபார்த்து மகிழ்கின்றனர் அவர்தம் அன்பு மக்கள். தாய் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் அவர்தம் பிள்ளைகள் அவரை அன்புமொழிகூறி அடைமொழி கூறி அழைத்து மகிழ்வதுபோல நம் வாழ்வென்னும் கூட்டில் ஏற்பட்டிருக்கும் துன்பமாகிய முடிச்சுக்களை அவிழ்ப்பவர் அன்னை மரியா. புனித பவுல் கிறிஸ்துவை புதிய ஆதாமுக்கு உருவகப்படுத்தியது போல, மரியன்னையை புதிய ஏவாளுக்கு உருவகப்படுத்தினார். கீழ்ப்படியாமையினால் ஏவாள் மனித குலத்திற்கு சாபம் என்னும் துன்ப முடிச்சை கொணர்ந்தாள். அன்னையோ, தனது கீழ்ப்படிதலின் மூலம் அத்துன்ப முடிச்சை அகற்றினார் என்பதன் அடிப்படையிலேயே அன்னையின் இந்தப் படம் வரையப்பட்டுள்ளது.
நமது வாழ்வில் தீர்வு காண இயலாத பிரச்சனைகளையும் போராட்டங்களையும் நாம் சந்திக்கிறோம். குடும்பங்களிலே அமைதியின்மை, பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே கருத்து வேறுபாடு, அவமரியாதை, வன்முறை, கணவன் மனைவிக்கிடையே உள்மனக் காயங்கள், குடும்பங்களிலே மகிழ்ச்சியும் அமைதியும் இல்லாத நிலை, குடும்பங்களிலே பிரிவினை, கணவன் மனைவியிடையே மோதல், குடி போதைக்கு அடிமை, வியாதி, வருத்தங்கள், இறைப்பற்றின்மை, கருக்கலைப்பு, மன அழுத்தம், வேலையின்மை, அச்சம், தனிமை என எத்தனை எத்தனை துன்ப முடிச்சுகளை நமது வாழ்வில் நாம் சந்திக்கின்றோம். நமது ஆன்மாவிற்கு அழுத்தம் கொடுத்து, மன அமைதியைக் குலைத்து, நம்மை இறைவனிடமிருந்து இத்துன்ப முடிச்சுக்கள் பிரிக்கின்றன. இவற்றிலிருந்து துன்ப முடிச்சுக்களை அகற்றும் அன்னை மரியா நம்மைக் காக்கிறார்.
உரோமன் கத்தோலிக்க திருஅவையினால் 1182ஆம் ஆண்டு ஜெர்மனியின் Augsburg நகரின் மத்தியில் கட்டப்பட்ட St. Peter am Perlach பேராலயத்தில் துன்ப முடிச்சுக்களை அவிழ்க்கும் அன்னை மரியின் திருஉருவப்படமானது தனிப்பட்ட சிறப்புத் தன்மையுடன் வைக்கப்பட்டுள்ளது. இதில் சித்தரிக்கப்படும் காட்சியானது: நிலவின் மேல் கன்னிமரியா நிற்பது போலவும், அவரது காலின் கீழ் பாம்பின் தலை மிதிக்கப்படுவதாகவும் அமைந்திருக்கின்றது. வானதூதர் ஒருவர் சிக்கலான, நெருக்கமான பல முடிச்சுக்களை உடைய கயிறு ஒன்றை அன்னை மரியாளிடம் ஒப்படைக்க, அதை மரியா தனது பொறுமை, முழுமையான அர்ப்பணிப்பின் வழியாக அவிழ்த்து சிக்கல்கள் இல்லாத மென்மையான கயிறாக மற்றொரு வானதூதரிடம் கையளிக்கின்றார். துன்ப முடிச்சுக்களின் அன்னை அல்லது துன்ப முடிச்சுக்களை அவிழ்க்கும் அன்னை மரியா என்ற பெயரில் மக்களால் வணங்கப்படுகின்றார்.
1985 இல் இத்தேவாலயத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் வருகை தந்ததின் பின் இதன் பக்தி வழிபாடு, தென் அமெரிக்காவில் வெகுவேகமாகப் பரவி வருகின்றது. அவ்வகையில் சென்னையில் தாழம்பூரில் துன்ப முடிச்சுக்களை அகற்றும் அன்னை ஆலயமானது ஆசியாவிலேயே அன்னைக்கு அர்பணிக்கப்பட்ட முதல் ஆலயமாக விளங்குகின்றது. கோவை மறைமாவட்டத்தில் உள்ள வாலிபாளையம் துன்ப முடிச்சுக்களை அவிழ்க்கும் அன்னை மரியா ஆலயமுல் அண்மையில் வளர்ந்து அவரும் ஆலயங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது. எனவே இன்றைய நமது அன்னை ஓர் அதிசயம் என்ற நிகழ்வில் அவ்வாலயம் பற்றியக் கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள இருப்பவர் அந்த ஆலயத்தின் பங்குத்தந்தை அருள்பணி ஆண்டனி பெலிக்ஸ். தனது ஆற்றல் மிக்க பேச்சாலும் அளப்பரிய செயல்களாலும் அன்னை மரியாவின் புகழை மக்களுக்கு எடுத்துரைத்து வரும் அருள்தந்தை ஆண்டனி பெலிக்ஸ் அவர்களை எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்