தேடுதல்

கேரளா புனித வியாகுல அன்னை மரியா ஆலயம் கேரளா புனித வியாகுல அன்னை மரியா ஆலயம்  

அன்னை ஓர் அதிசயம் – புனித வியாகுல அன்னை ஆலயம் - திரிசூர் கேரளா

திருச்சூர் என்பது கேரளத்தின் திரிசூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகரமாகும். கேரளத்தின் கொல்லத்துக்கு அடுத்ததாக ஐந்தாவது பெரிய நகரமாகவும், கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து 290 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த நகரம்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

புத்தன்பள்ளி என மலையாளத்தில் அழைக்கப்படும் புனித வியாகுல அன்னை பேராலயம் இந்தியாவின் கேரளாவில் உள்ள திருச்சூரில் உள்ளது. சிரோ-மலபார் கத்தோலிக்க தலத்திருஅவையைச் சார்ந்த இவ்வாலயம், இந்தியாவின் மிக உயரமான ஆலயமும் ஆசியாவின் மூன்றாவது உயரமான ஆலயமும் ஆகும்.

திருச்சூர் என்பது கேரளத்தின் திருசூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகரமாகும். கேரளத்தின் கொல்லத்துக்கு அடுத்ததாக ஐந்தாவது பெரிய நகரமாகவும், கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து 290 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த நகரம். இங்கு நடைபெறும் திருசூர் பூரம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நகரத்தில் ஏறத்தாழ 3.2 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். 'திருச்சிவப்பேரூர்' என்பதே மருவி திருச்சூர் என ஆயிற்று எனக் கருதப்படுகின்றது. இலக்கியம் கலைகளுக்கு தரமான வாசகர்கள் நிறைந்த ஊர். கேரளத்தின் அதிகமான எழுத்தாளர்கள் திருச்சூரைச் சுற்றியே வாழ்கிறார்கள்.

ஆலயத்தின் கட்டிடக்கலை

கோதிக் பாணி கட்டிடக்கலையில் கட்டப்பட்ட பிரபலமான இந்த ஆலயத்தின் பரப்பளவு, 25,000 சதுர அடி (2,300 மீ2)ஆகும். நேர்த்தியான இந்தோ-கோதிக் பாணியில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் நுழைவாயிலில் உயர்ந்த மணிக்கூண்டுகள் உள்ளன. ஆலயத்தின் உள்புறம் நீண்ட நடுப்பகுதி மற்றும் இடையில் குறுக்காக வலது இடது என இருபுறமும் பிரிக்கப்பட்டு இரண்டு மாடிகளாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் நடுப்புறம் பெரிய நடுப்பீடம் மற்றும் வலப்புறம் 5 இடப்புறம் ஐந்து என 10 சிற்றாலயப்பீடங்கள் என மொத்தம் 11 பீிடங்கள் உள்ளன. கேரளாவின் மிகப்பெரிய ஆலயமான இதன் உள்புறத்தில் அற்புதமான அலங்காரங்களில் சுவரோவியங்கள், சின்னங்கள் மற்றும் புனிதர்களின் சிலைகள் மற்றும் திருவிவிலியக் காட்சிகளின்  வடிக்கப்பட்டுள்ளன.

ஆலயத்தின் முதல் கட்டிடமானது 1814-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கோட்டை வாயில்களுக்குள் உள்ள திருச்சூரில் உள்ள முதல் கிறிஸ்தவ ஆலயம் என்ற பெருமையினையும் இது பெறுகின்றது. புனித அந்தோணியாருக்கான சிரோ-மலபார் ஆலயம்  ஒல்லூரில் கி.பி. 1718-ஆம் ஆண்டு திருச்சூர் நகராட்சியில் கட்டப்பட்டது. இது பல ஆண்டுகளாக இப்பகுதியில் உள்ள புனித தாமஸ் கிறிஸ்தவர்களுக்கு ஒரு மையமாக இருந்தது. 1874 ஆம் ஆண்டில், சிரோ-மலபார் கிறிஸ்தவர்களின் வேண்டுகோளின் பேரில் கல்தேய கத்தோலிக்க ஆயர் எலியாஸ் மெல்லஸ் இந்தியாவிற்கு வந்து, கிறிஸ்தவ சமூகத்தின் பெரும்பகுதியினர் தன்னை ஆயராக ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி ஆயர் மெல்லஸைப் பின்பற்றிய குழு இந்த வியாகுல அன்னை ஆலயத்தை முக்கிய இடமாக, அடிப்படையாகக் கொண்டு வளர்ந்து வந்தது. இறுதியில் கத்தோலிக்க படிநிலையிலிருந்து பிரிந்து, இப்போது கல்தேய சிரிய ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு பதிலளிக்கும் விதமாக சிரோ-மலபார் கத்தோலிக்கர்கள் 1929-ஆம் ஆண்டு ஒரு புதிய கட்டிடத்தைக் கட்டினார்கள். முன்னர் இருந்த ஆலயமானது மார்ட் மரியம் பெரிய ஆலயம் என மறுபெயரிடப்பட்டது. தற்போதைய கட்டிடம் புத்தன்பள்ளி (புதிய தேவாலயம்) என்று அழைக்கப்படுகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய தேவாலயமான இந்த ஆலயத்தின் கட்டுமானம் 1929 - ஆம் ஆண்டு தொடங்கி வெவ்வேறு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டது. இரண்டு முன் கோபுரங்களும் ஒவ்வொன்றும் 146 அடி (45 மீ) உயரமும், மைய கோபுரம் 260 அடி (79 மீ) உயரமும் கொண்டது. ஆசியாவின் மூன்றாவது உயரமான ஆலயமாக அறியப்படும் இந்த ஆலயம் மிக உயர்ந்த கோபுரங்களைக் கொண்டது. இக்கோபுரங்களை செய்துமுடிப்பது கட்டிடக்கலையினருக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக இருந்தது. தமிழ்நாட்டிலிருந்து சில நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, ஆலயத்தை கட்டி முடித்தனர். அதில் சிறந்து விளங்கியவர் கட்டிடக் கலைஞர் அம்ப்ரோஸ் ஆவார்.

ஆலயத்தின் உள்புறம்

ஆலயத்தின் நடுவில் உள்ள பீடம் ஏறக்குறைய 100 அடி உயரம் கொண்டது. அதில் தனது மகனாம் இயேசுவின் உடலை மடியில் ஏந்தியிருக்கும் புனித வியாகுல அன்னை மரியாவின் உருவமும், இருபுறமும் வானதூதர்களான புனித மைக்கேல் மற்றும் புனித ரபேலின் உருவங்களும் உள்ளன. அதன் கீழே, கிறிஸ்துவின் பன்னிரண்டு சீடர்களின் உருவச்சிலைகளையும் நாம் காணலாம்.. 1986 ஆம் ஆண்டு திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் இந்தியா வந்து இவ்வாலயத்திற்கு வருகை தந்தபோது அவர் பயன்படுத்திய அரியணையானது இங்கு நினைவுச்சின்னமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் திருத்தந்தை அவர்கள் பயன்படுத்திய வாசக மேடையும் நினைவுச்சின்னமாகப் போற்றிப் பாதுகாக்கப்படுகின்றது. 

1940-ஆம் ஆண்டில் ஆயர் பிரான்சிஸ் வாழப்பிள்ளியால் புனிதப்படுத்தப்பட்ட இந்த ஆலயமானது, 1992-ஆம் ஆண்டில் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களால் திருத்தலமாக உயர்த்தப்பட்டது. நம்பிக்கை, அன்னை மரியின் மேல் பக்தி, மிகச்சிறந்த வழிபாட்டுத் தலம் மற்றும் ஆன்மிக உணர்வுகளை எழுப்பும் இடமாக இத்திருத்தலம் திகழ்கின்றது.

விவிலியக் கோபுரம்

260 அடி உயரத்தில், திருச்சூர் நகரத்தின் பெருமையை பறைசாற்றும் விவிலிய கோபுரம் ஒன்று ஆலய வளாகத்தில் உள்ளது. 2004-ஆம் ஆண்டு ஜனவரி 7, அன்று, கிழக்கு ஆர்த்தடாக்ஸ் தலத்திருஅவையின் தலைமை நிர்வாகி கர்தினால் முதலாம் தாவூத் மூசா விவிலியக் கோபுரத்தை ஆசீர்வதித்து திறந்து வைத்தார். 2006-ஆம் ஆண்டு டிசம்பர் 3,  அன்று, இந்தியாவிற்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்கப் பிரதிநிதி லோபஸ் குயின்டானா, திருச்சூர் நகர வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி, விவிலியக் கோபுரத்தை இறைமக்களுக்கு அர்ப்பணித்தார்.

விவிலியக் கோபுரம் பல அம்சங்களால் நிறைந்துள்ளது. அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கது திருச்சூர் நகரத்தின் பரந்த காட்சிகளை ரசிக்க ஒரு பார்வைப் புள்ளியாகும். இதற்காக, விவிலியக் கோபுரத்தின் நான்கு பக்கங்களிலும் பார்வையாளர்களுக்காக ஏறகுறைய 5.5 மீட்டர் நீளமும் 1.5 மீட்டர் அகலமும் கொண்ட இடம் தயார் செய்யப்பட்டுள்ளது. மேல்பகுதியில், பழைய ஏற்பாடு பகுதிகளும் கீழ்ப்பகுதியில் புதிய ஏற்பாட்டுப்பகுதிகளும் சித்தரிக்கப்பட்டுள்ளன. இறுதியாக புனித தோமையார் மற்றும் கேரள தலத்திருஅவை வரலாறு சித்தரிக்கப்பட்டுள்ளன. இயேசுவின் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் மரம், கண்ணாடி, உலோகம் மற்றும் எண்ணெய் வண்ணப்பூச்சுகளில் சித்தரிக்கப்பட்டுள்ளன. திருத்தூதர் பணிகள் நூலில் உள்ள காட்சிகள் டெரகோட்டாவிலும், திருத்தூதர் தோமாவின் மறைப்பணி சுவரோவியங்களிலும் சித்தரிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, இயேசுவின் வாழ்க்கையின் ஓவியங்கள் தேசிய விருதுகளைப் பெற்ற கலைஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இருபதாவது மாடியில், இத்தாலியம், இஸ்பானியம், குரோஷியன், கிரேக்கம் மற்றும் பிற மொழிகளில் உள்ள விவிலியத்தின் மிகப் பழமையான தொகுப்பைக் காணலாம். கலை வடிவங்கள் வழியாக இயேசுவையும் திருவிவிலியத்தையும் உலகிற்கு அறிமுகப்படுத்துவதன் வழியாக கோபுரம் திருச்சூர் நகரில் ஒரு முக்கிய ஆன்மிக சுற்றுலா தலமாக மாறி வருகிறது.

ஆலயத்தின் உள்புறமானது சுவர் ஓவியங்கள் மற்றும் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் வெளிப்புறத்தில் இருந்து உள்ளே நுழையும்போது தமத்திரித்துவத்தின் அழகிய ஓவியமானது உள்ளது. 12 அடி உயரமும் 6 அடி அகலமும் கொண்ட சிலுவைப்பாதையின் பதினான்கு நிலைகள் ஆலயத்தில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இயேசு 5 அப்பம் இரண்டு மீன்களைப் பலுகச்செய்த நிகழ்வானது வடிக்கப்பட்டுள்ளது. 60 அடி உயரமுள்ள விண்ணேற்பு அன்னையின் உருவமும், அன்னையின் 7 வியாகுலங்களைச் சித்தரிக்கும் திருஉருவங்களும் இவ்வாலயத்தில் உள்ளன.

சிமியோனின் இறைவாக்கு, எகிப்தை நோக்கிய பயணம், கோவிலில் இயேசு காணாமல் போனது, கல்வாரி செல்லும் வழியில் இயேசுவைக் காணும் தாய், இயேசு சிலுவை அடியில் அன்னை மரியா, மரித்த இயேசுவை மடியில் சுமந்த தாய் மரியா, இயேசுவின் அடக்கம் ஆகியவை இந்த 7 நிலைகளில் வடிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்று பாடுகள் பட்ட இயேசுவின் திரு உருவம், நற்செய்தியாளர்களான மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான், ஆகியோரின் ஓவியங்களும் உள்ளன.

திருப்பலி நேரங்கள்

புனித வியாகுல அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயத்தில் வார நாள்களில் முன்று முறையும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 5 முறையும் திருப்பலி நடைபெறுகின்றது. வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் ஒவ்வொரு திருப்பலிக்கு முன்பாகவும் வியாகுல அன்னைக்கான நவநாள் செபம் எடுத்துரைக்கப்பட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகின்றது. அருகில் இருக்கும் திருநற்கருணை ஆராதனை சிற்றாலயமானது அமைதியான முறையில் மக்கள் செபிக்கவும் இறைஆசீரைப் பெற்று சிறக்கவும் வழிசெய்யும் வகையில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்து வைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15 அன்று புனித வியாகுல அன்னையின் ஏழு வியாகுலங்களை நினைவுகூர்ந்து செபிக்க திருஅவையானது நமக்கு அழைப்புவிடுக்கும் இந்நாள்களில் அன்னையின் வியாகுல வீரத்தை நமதாக்க முயல்வோம்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 செப்டம்பர் 2025, 14:55