நிகராகுவாவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள 261துறவறத்தார்
மெரினா ராஜ் - வத்திக்கான்
அரசுத்தலைவர் டேனியல் ஒர்தேகா தலைமையிலான அரசால் ஏறக்குறைய 261 துறவறத்தார் நிகராகுவா நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும், வெளியேற்றப்பட்டவர்களில் ஆயர் பேரவைத்தலைவர் கார்லோஸ், ஆயர்கள் சில்வியோ, ஆல்வாரெஸ், இசிதோரோ ஆகியோர் அடங்குவர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் 9, செவ்வாயன்று வெளியிடப்பட்ட நிகராகுவாவின் மனித உரிமைகள் தன்னார்வ தொண்டு நிறுவனம், "Fe bajo fuego" என்ற தலைப்பில் Efe செய்தி நிறுவனத்தால் சேகரிக்கப்பட்ட பட்டியலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகராகுவா ஆயர் பேரவைத்தலைவர் பேரருள்திரு கார்லோஸ் என்ரிக் ஹெர்ரெரா குட்டியர்ரெஸ், அத்துடன் ஆயர்கள் சில்வியோ ஜோஸ் பேஸ் ஒர்டேகா, ரோலண்டோ ஜோஸ் அல்வாரெஸ் லாகோஸ், இசிதோரோ தெல் கார்மென் மோரா ஒர்டேகா ஆகியோரும் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்த 261 பெரில் அடங்குவர் என்றும் அச்செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது.
2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அப்போஸ்தலிக்கப்பிரதிநிதி பேரருள்திரு வால்டெமர் ஸ்டானிஸ்லாவ் சோமர்டேக் அவர்கள் வெளியேற்றப்பட்டார் என்றும், நிகராகுவாவின் பல்வேறு மறைமாவட்டங்களில் இருந்து ஏறக்குறைய 140 அருள்பணியாளர்களும் வெளியேற்றப்பட்டனர் என்றும் தகவல்கள் அறியவருகின்றன.
மேலும் 90 க்கும் மேற்பட்ட அருள்சகோதரிகள், 12க்கும் மேற்பட்ட குருத்துவ மாணவர்கள், 3 திருத்தொண்டர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும், 2018 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், 1,294 துறவற நிறுவனங்கள் உட்பட 5,609 இலாப நோக்கற்ற சங்கங்கள் மூடப்பட்டதையும் அச்செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் வானொலி நிலையங்கள் போன்ற 22 கத்தோலிக்க நிறுவனங்கள் உட்பட 54 ஊடக நிறுவனங்களின் செயல்பாடுகளும் மூடப்பட்டுள்ளன என்றும், இந்த நடவடிக்கைகள் பிற பிரிவுகளையும், குறிப்பாக நற்செய்தி அறிவிக்கும் பணியினைச் செய்பவர்களைப் பாதித்துள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்